

இருபதாம் நூற்றாண்டின் தனித்துவமான கட்டிடங்களில் ஒன்றான, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ் 1973-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கப் பயன்பாட்டுக்கான இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் போடிடம் பொதுப்பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட உலகமே இந்தக் கட்டிடத்தையும் இதன் வடிவமைப்பையும் வியந்து பார்த்தது. நவீன கட்டிடக் கலையின் மாபெரும் சாதனையாக இந்தக் கட்டிடம் புகழப்பட்டது. இதன் வடிவமைப்பாளர் யார், என்பதே கட்டுமான உலகின் கேள்வியாக எழுந்தது. இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தது ஜோன் அட்சன் என்னும் டென்மார்க் கட்டிடக் கலைஞர்.
ஜோன், டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை கடல்சார் கட்டிடக் கலைஞர். ஜோன் பள்ளிப் பருவத்தில் தனது ஓய்வு நேரங்களைத் தந்தையின் பணியிடத்தில் கழித்தார். அங்குதான் அவருக்குக் கட்டிடக் கலைகளின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. ராயல் டானிஷ் கவின் கலைக் கல்லூரியில் நுண்கலை பயின்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு கன்னர் அஸ்பளண்ட் என்னும் டென்மார்க் கட்டிட வடிவமைப்பாளரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். உலகின் முதல் தலைமுறைக் கட்டிடக் கலைஞரும் தத்துவவியளாரும் ஆன பிராங்க் லாயிட் ரைட்டின் கொள்ளைகளாலும் வடிவமைப்பாலும் கவரப்பட்டார் ஜோன்.
ஜோன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அமெரிக் காவுக்கும் சென்றார். 1950-ம் ஆண்டு தனது சொந்த ஊரான கோபன்ஹேகனுக்குத் திரும்பி சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு கட்டிட வடிவமைப்பில் அனுபவம் பெறுவதற்காக அவர் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தார். மேலும் மெக்சிக்கோவின் மாயன் இனத்தவரின் கட்டிடக் கலையும் இவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்தப் பின்புலத்தை வைத்துக்கொண்டுதான் ஜோன் தனது கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில்தான் 1957-ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக இவரது நிறுவனம் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸை வடிவமைக்க நடத்திய போட்டியில் வெற்றிபெற்றது. கட்டிடத் துறை மிகப் பெரிய வளர்ச்சிபெற்றுவிட்ட இன்றைய சூழலிலும் இந்தக் கட்டிடம், கட்டுமான அதிசயங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. 2007-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்தை யுனெஸ்கா அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தது. 20-ம் நூற்றாண்டின் கட்டிடப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்தவர் என புகழப்படுகிறார் இவர்.
இது மட்டுமல்லாது டென்மார்க், ஸ்வீடன், குவைத், சவுதி அரேபியா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளின் இவர் கட்டிடங்களை உருவாக்கியுள்ளார். கட்டுமானத் துறையின் மிக உயரிய விருதான பிரிட்ஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இவர் தனது 90 வயதில் டென்மார்க்கில் காலமானார்.
- ஜோன் அட்சன்