

வீட்டு அலங்காரத்தில் இப்போது பேஸ்டல் வண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கு நவீன தோற்றத்தைக் கொடுப்பதில் இந்த வண்ணங்களுக்குப் பெரியபங்கு உண்டு. அதனால், பலரும் பேஸ்டல் வண்ணங்களை வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்த வண்ணங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள்.
ஒன்றே நன்று
வீட்டின் ஏதாவதொரு அறைக்கலனை பேஸ்டல் வண்ணத்தில் மாற்றிப்பார்க்கலாம். இது பேஸ்டல் வண்ணம் உங்கள் ரசனைக்கு ஒத்துவருமா, வராதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். உதாரணத்துக்கு, உங்கள் வரவேற்பறையில் உள்ள அறைக்கலனை பேஸ்டல் நீலத்தில் வாங்குங்கள். இந்த பேஸ்டல் நீலம் அறைக்கே அமைதியைக் கொடுக்கும்.
மேசை நாற்காலிகள்
பேஸ்டல் வண்ணங்களில் சாப்பாட்டு மேசை நாற்காலிகளை அமைப்பது சாப்பாட்டு அறைக்கு மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும். பேஸ்டல் பச்சை, நீலம், சிவப்பு போன்ற வண்ணங் களில் இந்த நாற்காலிளை வாங்கலாம்.
இளஞ்சிவப்பின் மாயம்
படுக்கையறையை வடிவமைக்க ‘பேஸ்டல் பிங்க்’ நிறத்தைப் பயன்படுத்துவது இப்போதைய டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதிலும், இந்த வண்ணத்துடன் பூக்கள் வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பது படுக்கையறைக்குக் கூடுதல் அழகைத் தரும்.
சமையலறையின் நீலம்
பேஸ்டல் நீலம் சமையலறைக்கு ஏற்ற வண்ணம். காலையில் எழுந்து சமையலறையில் நுழையும்போது இந்த நீலம் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இந்த வண்ணத்தைச் சமையலறைச் சுவருக்கு மட்டுமல்லாமல் அலமாரிகளுக்கும் பயன்படுத்தலாம்.
தனிமையே அழகு
பொதுவாக, அறை முழுவதும் ஒரே வண்ணத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பேஸ்டல் வண்ணங்கள் பெரிய அளவில் உதவும். உதாரணமாக, ஓர் அறையை முழுக்க ஒரே வண்ணத்தின் வெவ்வேறு தொனிகள் இருக்குமாறு பயன்படுத்தலாம். இந்த வடிவமைப்பு அறைக்குப் பிரம்மாண்டமான அழகைக் கொடுக்கும். சாம்பல் பச்சை, பேஸ்டல் ஊதா போன்ற வண்ணங்கள் தனியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றது.
வண்ண தொகுதி
இரண்டு பேஸ்டல் வண்ணங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? அப்படியென்றால், இரண்டையும் இணைத்து ஒரு வண்ணத்தொகுதியாக உங்கள் அறையை வடிவமைக்க முடியும். பேஸ்டல் மஞ்சள் - பச்சை, பேஸ்டல் சாம்பல் - மஞ்சள், பேஸ்டல் நீலம் - ஆரஞ்சு என விதமான கலவைகளில் உங்கள் அறையை வடிவமைக்கலாம்.
பொருட்களே போதும்
உங்கள் பேஸ்டல் வண்ணங்களை மொத்தமாகப் பயன்படுத்தப் பிடிக்கவில்லையென்றால், அறையில் இருக்கும் சின்னசின்ன பொருட்களில் அதைப் பயன்படுத்தலாம். அதிலும் அறையின் நிறம் வெள்ளையாக இருந்தால், பேஸ்டல் வண்ணப் பொருட்களைப் பயன்படுத்துவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.