

தமிழகத்தில் அண்மையில் பொங்கி வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சொந்த வீடு கட்டியவரா நீங்கள்? இந்தப் பகுதிகளில் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வங்கிகள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆனால், இந்த அறிவுறுத்தலுக்கு மாறாக, கால அவகாசத்தை வழங்காமல் பல வங்கிகள் இழுத்தடித்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த கன மழையால் இரண்டு முறை வெள்ளப் பெருக்கைச் சந்தித்தன சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள். குறிப்பாக டிசம்பரில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் இந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. வீடுகள் தண்ணீரில் மூழ்கியதால் உடமைகள் நாசமாயின. வீடுகள் பழுதடைந்தன. மொத்தத்தையும் இழந்து பலர் நடுத்தெருவுக்கு வந்தனர். அரசால் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. வெள்ளத்தில் லட்சக்கணக்கில் உடைமைகளை இழந்த மக்கள் பெரும் உதவியை எதிர்பார்த்தார்கள். அதில், வீட்டுக் கடனுக்கான தவணையைச் செலுத்த சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல மனுவில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீட்டுக் கடன் செலுத்த 6 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, “சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீட்டுக் கடனைச் செலுத்த ஒரு வருட கால அவகாசமும், வாகனக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றைச் செலுத்த 6 மாத கால அவகாசமும் அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் வழக்கை முடித்து வைத்தது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து பல வங்கிகள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தக் அவகாசம் வழங்கி வருகின்றன. சில வங்கிகள் பிப்ரவரி மாதத்திலிருந்தே வீட்டுக் கடன் வழங்க கால அவகாசம் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ரவீந்திரன் கூறுகையில், “பல வங்கிகளில் இந்தக் கால அவகாசத்தை அளித்திருக்கிறார்கள். சில வங்கிகள் ஆறு மாதங்கள், 3 மாதங்கள் வரையிலும் அவகாசம் அளித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் செலுத்தாத தொகைக்கு அபராதம் கிடையாது. செலுத்ததாத கடன் தொகையைத் தவணைகளில் சேர்த்துப் பின்னர் வசூலித்துவிடுவார்கள். வீட்டுக் கடன் பெற்றவர்கள் இந்தக் கால அவகாசம் பற்றி நேரிடையாக வங்கிக்குச் சென்று விசாரித்துக்கொள்வது நல்லது” என்று தெவித்தார்.
ஆனால், இன்னும் பல வங்கிகளில் கால அவகாசம் வழங்காமல் இழுத்தடித்துவருவதாகக் கூறப்படுகிறது. கால அவகாசம் வழங்காத வங்கிகளை வீட்டுக் கடன் பெற்ற ஏராளமானோர் தொடர்ந்து அணுகியவண்ணம் உள்ளார்கள். ஆனால், கால அவகாசம் பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என வங்கிகள் சார்பில் சொல்லப்படுகின்றன. குறிப்பாக வாடிக்கையாளர்களை அதிகம் வைத்துள்ள வங்கிகளும், அதிக வீட்டுக் கடன்களை வழங்கும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை ஏற்று கால அவகாசம் வழங்காமல் இருக்கின்றன.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்த லுக்கு மாறாக வங்கிகள் செயல்பட முடியுமா என்பது குறித்து ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீட்டுக் கடனைச் செலுத்த ஒரு வருடம் வரை ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது. நான் பணியாற்றிய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற நேரத்தில் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல், வழிகாட்டுதல் ஆகியவற்றை வங்கிகளுக்கு வழங்கும். இதை உத்தரவு என்று சொல்லிவிட முடியாது. ரிசர்வ் வங்கியின் இதுபோன்ற அறிவுறுத்தல்களை வங்கிகள் ஏற்றுக்கொள்வதுதான் இதுவரை நடந்திருக்கிறது. மாறாக நடக்க மாட்டார்கள். கால அவகாசம் அளிக்காத வங்கிகளை, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அணுகுவதைப் பொறுத்து இதற்குத் தீர்வு காணலாம்” என்று தெரிவித்தார்.
ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீட்டுக் கடனுக்குக் கால அவகாசம் அளிப்பது பற்றி ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்த வழிகாட்டுதலோ அல்லது அறிவுறுத்தலோ வரவில்லை என்று சில தனியார் வங்கிகள் சொல்லவும் செய்கின்றன.
கால அவகாசம் வழங்குவதில் வங்கிக்கு வங்கி வேறுபாடு இருப்பது பற்றியும், வங்கிகள் கால அவகாசம் வழங்காமல் இருப்பது பற்றியும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த பாலமுருகன் நம்மிடம் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார். “வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதிகளில் சொந்த வீட்டுக்காரர்களுக்கு வீடு பழுது, உடைமை இழப்புகள் எனப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள வெளியே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே வீட்டுக் கடன் செலுத்துவதோடு இந்தப் புதிய கடனும் எங்களைப் போன்றவர்களுக்குச் சுமையாகவே மாறியது. வங்கிகள் அளிக்கும் சிறிது கால அவகாசம் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஓரளவு நிவாரணமாக இருக்கும். இந்தச் சிறு நிவாரணத்தை ஒரு வங்கி வழங்குகிறது; இன்னொரு வங்கி வழங்குவதில்லை. வங்கிகளின் இந்தப் பாரபட்சம் சரியா?” என்ற கேள்வி எழுப்புகிறார்.
இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது அல்லவா?