

வீடு என்பது அடிப்படை மற்றும் அத்தியாவசியமானது. அதனால் வீடு வாங்க மக்களை ஊக்கமூட்டுவது அரசின் செயல் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தாராள வீட்டுக் கடன், வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை, வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டி விகிதத்தில் மேலும் சிறிது சலுகை எனச் சில சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மேலும் சில சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்தச் சலுகை யாருக்குப் பயன் அளிக்கும்?
வாடகை வீட்டில் வசிக்கும் பலர், அதிகரித்து வரும் வாடகை, அரசு அளிக்கும் வீட்டுக் கடன், இந்தக் கடனுக்கான வருமான வரிச் சலுகை போன்றவற்றுக்காக வீடு வாங்குகிறார்கள். முதலீடு நோக்கத்திலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குகிறார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு சலுகை அளித்து வருகிறது. மேலும் வீட்டுக் கடனுக்கான அசலைத் திருப்பி செலுத்துவதிலும் வரிச் சலுகை உண்டு. இந்த வரிச் சலுகை வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க உதவுவதால் இது பலருக்கும் பயன் அளிப்பதாகவே இருக்கிறது. இதனால், ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் வீடு வாங்க ஊக்கமளிக்கும் வகையில் புதிதாகச் சலுகைகள் வழங்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
பிப்ரவரி 29 அன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வீடு வாங்குபவர்களுக்கு மேலும் சில சலுகைகளை அறிவித்தார். அதாவது, முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரியில் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச்சலுகையானது 2 லட்சம் ரூபாயிலிருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். இதுவும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்காக அறிவிக்கப்பட்ட சலுகை. இந்தச் சலுகையை அறிவித்துவிட்டு ஒரு நிபந்தனையையும் அவர் விதித்தார். அது, இந்தச் சலுகை 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகளுக்கும், 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு வீட்டுக் கடனாக பெறுவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
பெரு நகரங்களில் சிக்கல்
அதாவது, புதிதாக வாங்கும் அல்லது கட்டும் வீட்டின் மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டினாலோ, 35 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வீட்டுக் கடனாக வங்கியிலிருந்து பெற்றாலோ இந்தச் சலுகையைப் பெற முடியாது. இதன்படி பார்த்தால், இந்தச் சலுகையானது எல்லா நகர மக்களுக்கும் பொருந்துமா என்று பார்த்தால், நிச்சயம் பொருந்தாது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரிச் சலுகை சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் வீடு வாங்குபவர்களுக்குப் பயன் அளிப்பது சந்தேகமே. அதேசமயம் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நிச்சயம் பயனளிப்பதாக இருக்கும்.
மதிப்பும் சலுகையும்
பெரு நகரங்களில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் மதிப்பு இடத்துக்குத் தகுந்தாற்போல 50 லட்சம் ரூபாயிலிருந்து கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் மதிப்பு 50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மூலம் புதிய வரிச்சலுகையைப் பெறுவது என்பது இதில் சிக்கல்தான். ஒரு வேளை 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடாக இருந்தாலும் வாங்கப்படும் வீட்டுக் கடன் 35 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வரிச்சலுகைப் பெறுவதில் சிக்கலையே உண்டு பண்ணுகிறது.
ஏனென்றால் வீட்டுக் கடனைப் பொறுத்தவரை வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களில் 20:80 என்ற விகிதத்தில்தான் வழங்கப்படுகிறது. அதாவது, வங்கியில் அதிகபட்சமாக 80 சதவீதம் வரையில் வீட்டுக் கடனாகப் பெறலாம். எஞ்சிய 20 சதவீத தொகையை வீடு வாங்குபவர்தான் தர வேண்டும். உதாரணமாக 49 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு 20 சதவீதத் தொகை என்றால்கூட 9,80,000 ரூபாயை வீடு வாங்குபவர் தர வேண்டும். எஞ்சிய 39,20,000 ரூபாயை வங்கியில் கடனாகப் பெறலாம். வீட்டுக் கடன் 39 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடுவதால் கூடுதல் சலுகையை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்த வரிச் சலுகை பெரு நகரங்களில் உள்ளவர்களுக்குப் பயன் அளிக்காது என்பது தெளிவாகிறது. அதேசமயம் பெரு நகரங்களில் ஒரு படுக்கையறையைக் கொண்ட வீடு வாங்கும் மக்களுக்கு இந்தச் சலுகை நிச்சயம் பொருந்தக்கூடியதாக இருக்கும்.
சிறு நகரங்களுக்குப் பயன்
பெரு நகரங்கள் அல்லாத சிறு நகரங்கள் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையே இருக்கிறது. மேலும் இந்தத் தொகைக்கு வீட்டுக் கடன் வாங்கும்போது, வரிச் சலுகை பெற விதிக்கப்பட்ட நிபந்தனையான 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டதாக வீட்டுக் கடன் இருக்கும். நிபந்தனை தாரளமாகப் பொருந்திவிடும். எனவே புதிதாக வீடு வாங்கும் இரண்டாம் நகர மக்களுக்கு இந்த வரிச் சலுகை பயன் அளிப்பதாக இருக்கும்.
வரிச் சலுகைக்கு ஒரு செக்!