

என் நண்பரின் மகன், 20 லட்சத்துக்கு வீட்டுக் கடன் பெற்றிருந்தார். இரண்டரை ஆண்டுகளில் மாதத் தவணைத் தொகை, 20,200-லிருந்து 19,000-க்குக் குறைந்துவிட்டது. காரணம், குறிப்பிட்ட அரசு வங்கியில் வட்டி விகிதம் 10.10-லிருந்து 9.65-ஆகக் குறைக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, கிராமத்தில் குடும்பச் சொத்தை விற்றதில் அவர் பங்குக்கு 5 லட்சம் கிடைத்தது. சில செலவுகள் போக, ஒன்றரை லட்சம் மீதமானது. நண்பரின் மகன், “50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்போகிறோம். மீதி ஒரு லட்சத்தை வீட்டுக் கடனுக்காக அசல் தொகைக்குக் கட்டினால் என்ன, தவணையும் வட்டியும் குறையுமே… என்ற கேள்வியை எழுப்பினார்.
அவர் மட்டுமல்ல, பலரும் இந்த யோசனையோடுதான் இருக்கிறார்கள். அது அவ்வளவு சரி இல்லை. முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திவிடலாம். வீட்டுக் கடனில் (20 அல்லது 25 ஆண்டு கால அளவு) செலுத்தப்படும் EMI தொகையில், முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் வட்டிக்கே போய்விடும். மேலே குறிப்பிட்ட இளைஞர் கட்டிய தொகையில் இரண்டரை ஆண்டு கழித்து இப்போதுதான், கட்டிய தொகை போக, அசல் 19 லட்சத்துக்கு (2 ½ ஆண்டுகளில் செலுத்திய தொகையே 5 லட்சத்துக்கும் மேல் உத்தேசமாக) வந்துள்ளது. இந்த நிலைமையில், 1 லட்சம் கடனில் அடைத்தாலும், மாதத் தவணை ரூ. 500, 600 ஆகக் குறையக்கூடும் (கடனின் கால அளவு வட்டி விகிதம் இவற்றைப் பொறுத்திருக்கிறது).
மற்றொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிடலாம். மீண்டும் ஏப்ரல் மாதம் வட்டி விகிதம் குறைவதற்கான சாத்தியக்கூறு உள்ளதென்று நிபுணர் கள் கருதுகிறார்கள். அப்போது, EMI இயல்பாகவே குறையும். சரி, வட்டி விகிதம் ஏறினால், மாதத் தவணை கூடும். ஆக, 20 லட்சம் ரூபாய் கடனில் 1 லட்சம் ரூபாய் இடையில் செலுத்தினால் பாதிப்பு பெரிதாக ஏற்படப் போவதில்லை (ஆனால் இதுபோல் அடிக்கடி கட்டி, கடனையே விரைவில் முடிக்கத் திட்டம் வைத்திருந்தால் அது வேறு விஷயம்).
வேறொரு விஷயமும் உண்டு, மேற்படி இளைஞர் கடன் பெறும் போது, தன் சம்பளம், ஊக்க ஊதியம் ஆகியவற்றுடன் பிற செலவையும் கணக்கிட்டுத்தான் ஆவணத்தில் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆண்டுக்கு ஆண்டு சம்பளமும் பிற ஊதியமும் கூடுவதற்கு வாய்ப்பும் இருக்கிறது. என்னதான் குடும்பச் செலவுகள் அதிகமானாலும் ஒப்புக்கொண்ட தவணைத் தொகையைக் கட்டுவதற்குச் சிக்கல் இருக்காது என்றே சொல்லலாம்.
வீட்டுக் கடனில் வேறொரு வசதியும் உள்ளடங்கி இருக்கிறது. மேற்படி இளைஞரின் தகப்பனார் ஏதாவது பிசினஸ் (உதாரணம்: எழுதுபொருள் கடை) செய்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கியில் கடன் வாங்குகிற அளவுக்குச் சரக்கு இல்லை. மேலும், வங்கியில் கேட்கிற ஸ்டாக் ஸ்டேட்மென்ட்டையெல்லாம் மாதா மாதம் தருகிற அளவுக்கு ஆள் பற்றாக்குறை. ஆனால் அதே சமயம், கடையை விரிவாக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது. கணினி யுகத்துக்கு ஏற்ப, பொருட்களை வாங்கி வைக்க விரும்புகிறோம்.
என்ன செய்ய? ஏற்கெனவே அடமானம் வைக்கப்பட்டிருந்த வீட்டை, `கொலாட்டரல்’ செக்யூரிடியாகக் காண்பித்து, கடன் (அதாவது, வீடு, 20 லட்சம் வீட்டுக் கடனுக்குத்தான் முதல் உரிமை) வாங்கலாம். இதற்கான வழிமுறைகள்:
மேற்படி இளைஞர் தன் தகப்பனார் அதே வீட்டை வைத்துக் கூடுதல் கடன் பெறத் தனக்கு ஆட்சேபனை (No Objection Letter) இல்லை என்ற கடிதம் தர வேண்டும். பிசினஸ் கடனும் தற்போதுள்ள தவணைப் பாக்கியும் சேர்ந்து, ஏற்கெனவே வாங்கியிருந்த 20 லட்சத்தைத் தாண்டாமலிருந்தால், கடன் ஆவணப் படிவம் மட்டும் போதும். ஒருவேளை, இரண்டு மூன்று லட்சம் தேவைப்பட்டு, மொத்தக் கடன் தொகை 20 லட்சத்தை மீறினால், மீறின தொகைக்கு மறுபடியும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மொத்தக் கடன் தொகை, வீடு மதிப்பில் 75 சதவீதத்துக்கு மேல் (வீட்டின் மதிப்பு 32 லட்சமானால் கடன் தொகை 24 லட்சம்) போகக் கூடாது. இது வங்கிக்கு வங்கி வேறுபடலாம்.
மிக முக்கியமான காரணம் இருந்தாலொழிய வீட்டுக் கடனை நீண்ட கால தவணைத் தொகையிலேயே செலுத்திவிடுவதுதான் மேலானது.
கட்டுரையாளர்,
ஒய்வுபெற்ற வங்கி அதிகாரி