

சென்னையில் வீடுகள் விலை உயர்ந்துவிட்டன என்று சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். சென்னை மட்டுமல்ல, எந்த நகரிலும் இன்றைக்கு வீடுகள் விலை குறைவாகவா உள்ளது? நிச்சயம் இல்லை. நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் வருகின்றன. ஆனால், இப்போது வெளிவந்த செய்தி வழக்கமான செய்தி அல்ல. தேசிய வீட்டு வசதி வங்கி - ரெசிடக்ஸ் குறியீடு மூலம் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு நல்லது. தீர ஆராய்ந்து வீடு வாங்க இது உதவும். இந்தக் குறியீட்டின்படி சென்னையில் விலை அதிகரித்திருந்தாலும் கோவையில் விலை குறைந்துள்ளது.
ரெசிடெக்ஸ் குறியீட்டின்படி சென்னையில் வீடு, மனைகளின் விலை 5.8 சதவீதம் உயர்ந்துள்ளது. மிக அதிகபட்சமாக குஜராத்தின் சூரத் நகரில் வீடு, மனைகளின் விலை 7.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் 12 நகரங்களில் விலை 5.7 சதவீதம் வரை சரிவும் கண்டிருக்கிறது. இதில் கோவையும் ஒன்று. 1.7 சதவீதம் சரிவு கண்டிருக்கிறது. விஜயவாடா, ஃபரீதாபாத், கொச்சி நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை ஒரே அளவில் நீடிக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் விலை அதிகரித்துள்ளது.
ரெசிடெக்ஸ் குறியீடு என்பது நகரங்களில் வீடு, மனை விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா? தற்போதைய நிலவரம் என்ன போன்ற தகவல்களை உணர்த்தும் குறியீடு. பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகளைக் குறியீடு முறையில் சொல்வதைப் போல ரெசிடெக்ஸ் குறியீடு முறையில் தேசிய வீட்டு வசதி வங்கி குறிப்பிடுகிறது. சொத்தின் சந்தை மதிப்பு, வழிகாட்டு மதிப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களால் வசூலிக்கப்படும் சொத்து வரி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனங்கள், வீட்டுக் கடன் அளிக்கும் வங்கிகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் இக்குறியீடு வெளியிடப்படுகிறது.
நாடு முழுவதும் 24 நகரங்களுக்கு உரிய விலை நிலவரத்தை இக்குறியீட்டின்படி காலாண்டுக்கு ஒருமுறையோ அல்லது அரையாண்டுக்கு ஒருமுறையோ வெளியிடுவது வழக்கம். இதில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை என இரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி 330 ஆக. இருந்த குறியீடு தற்போது சென்னையில் 349 ஆக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு உட்பட்ட விலை நிலவரம் சென்னையில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால், கோவையிலோ கடந்த டிசம்பர் மாத இறுதியில் 173 ஆக இருந்த ரெசிடக்ஸ் குறியீடு தற்போது 170 ஆக குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் வீடுகள் விலை 1.70 சதவீதம் குறைந்திருப்பதாக தேசிய வீட்டு வசதி வங்கி தெரிவித்துள்ளது.
இந்தக் குறியீட்டின்படி தற்போது நாம் வீடு, மனை வாங்கலாமா கூடாதா என்பதை வாடிக்கையாளர்கள் முடிவு செய்து கொள்ள முடியும். வீடு வாங்க உத்தேசித்துள்ள பகுதியில் சொத்தின் விலை தற்போது என்ன? 3 மாதங்களுக்கு முன்பு என்ன விலை? குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டு முடிவு எடுத்துக் கொள்ளலாம். தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் தகவல் ஆதாரபூர்வமானது என்பதால், வீடு அல்லது மனை வாங்கும் முன்பு ரெசிடெக்ஸ் குறியீடுகளைப் பார்ப்பது நல்லது. வெளிமாநிலங்களில் சொத்து வாங்க விரும்புபவர்களுக்கும் ரெசிடெக்ஸ் குறியீடு வழிகாட்டுகிறது.