

வடகொரியாவில் அணுவின் அமைப்பு போன்ற வடிவத்தில் புதிய கட்டிடம் ஒன்று கடந்த ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் கருப்பொருளின் அடிப்படையில் கட்டிடங்கள் உருவாக்குவது இப்போதைய புதிய பாணியாக இருக்கிறது.
உதாரணமாக ஷூ தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலகம் ஷூ வடிவத்திலேயே உருவாக்கப்படுகிறது. மீன் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டிடம் மீன் வடிவத்திலேயே உருவாக்கப்படுகிறது. இதைப் போன்றே இந்த அணுக் கட்டிடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அணு அறிவியல் தொழில்நுட்பக் கூடப் (‘islet of science’) பயன்பாட்டுக்கான இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட கொரிய அதிகர் கிம் ஜோங் உன் இந்தக் கட்டிடத்தைத் திறந்துவைத்தார். வடகொரியாவின் தலைநகரான பியொங்யாங் அருகில் ஓடும் நதியில் உள்ள சின்னத் தீவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் முழுமையாகப் பசுமைக் கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தித் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை ஒளியை உள்வாங்கும் வகையில் கட்டிடம் கட்டபட்டுள்ளது. பூகம்பத்தை எதிர்கொள்ளும் வலுவூட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் நடுவில் ராக்கெட் போன்ற தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் ஒரு முன்மாதிரிக் கட்டிடமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.