

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று செட்டி நாடு வீடுகள். செட்டி நாடு என்று சொன்னாலேயே நமக்கு உடனே அமர்க்களமான செட்டி நாட்டு வீடுகள் நம் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் வாணிபம் வளர்த்த பெருமைக்குரியவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். தங்கள் அந்தஸ்தை நிரூபிக்கும் வகையில் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மரங்களைக் கொண்டு வந்து தங்கள் வீடுகளைக் கம்பீரமாக ஆக்கினர்.
அவர்களது வீடுகளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஆத்தங்குடி டைல்ஸ். மரங்களையும், கண்ணாடிகளையும் வெளியிலிருந்து தருவித்தாலும் தரைக்கான டைல்ஸ்களை இங்கேயே உருவாக்கினர். காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி என்னும் சிற்றூரில்தான் இந்த வீடுகளுக்கான டைல்ஸ்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஊரின் பெயரையே சிறப்புப் பெயராகக் கொண்டு இந்த டைல்ஸ் ஆத்தங்குடி டைல்ஸ் என்றே அழைக்கப்படுகின்றன.
ஆத்தங்குடி டைல்ஸின் சிறப்பு இவை மனிதர்களின் உழைப்பால் உருவாக்கப்படுபவை. அதாவது இன்னும் முழுக்க இயந்திரமயமாகவில்லை. மனிதர்களின் கைகளால் உருவாக்கப்படுவதால்தான் அது கலை நயத்துடன் இருக்கிறது. இன்றும் பலரும் ஆத்தங்குடி டைல்ஸ்களை வீடுகளில் பதிக்கிறார்கள். அப்படிப் பதிக்கும்போது வீடுகளுக்குப் பிரேத்யேக அழகு வந்துவிடுகிறது என்பது அவர்களது அபிப்ராயம்.
செட்டி நாட்டின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது ஆத்தங்குடி டைல்களின் உருவாக்கமும். கலாச்சாரம் குடிகொண்டு பழங்காலப் பெருமை பேசும் பல வீடுகளின் தரைகளில் பதிக்கப்பட்டாலும் நம்மை நிமிர்ந்து பார்க்கச் செய்பவை இந்த டைல்கள். இதன் வண்ணமும், வடிவமும் பார்க்கும் விழிகளைக் கொள்ளை கொள்பவை. வெவ்வேறு வண்ணங்களில் விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்படும் இந்த டைல்களைப் பதிக்கும்போது வீடுகளுக்குத் தனி அழகு வந்து சேரும்.
ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கும் வழிமுறைகள் கலைநயம் கொண்டவை. ஏனெனில் இதைத் தயாரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்புதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அழகான வண்ண வண்ணப் பூக்களால் ஆன இந்த ஆத்தங்குடி டைல்ஸ் மீது கால் பதிக்கக்கூட மனது தயங்கும். அந்த அளவு சவுந்தர்யம் மிளிரும். இந்த டைல்ஸ் உள்ளூரிலேயே கிடைக்கும் மண், சிமெண்ட், பேபி ஜெல்லி, சில செயற்கை ஆக்ஸைடுகள் ஆகியவற்றைக் கலந்து செய்யப்படுகிறது. இதன் தயாரிப்புப் பணி மிகவும் கடுமையான பல நிலைகளைக் கொண்டது.
முதல் நிலையில் ஆத்தங்குடி டைலுக்கான அலங்கார வடிவ வார்ப்பைக் கண்ணாடிமீது வைப்பார்கள். அந்த அலங்கார வார்ப்பு பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ஒரு பூ வடிவ வார்ப்பு என்றால் பூவின் இதழ்களுக்கான பிரிவுகள் தனித் தனியே பிரிந்து காணப்படும். ஒவ்வொரு பிரிவையும் சிறிய தடுப்பு பிரிக்கும். இதனால் அந்தப் பிரிவுக்குள் வண்ணக் கலவையை ஊற்றும்போது அவை ஒன்று சேர்ந்துவிடாமல் தனித்தனியே இருந்து பூ வடிவை உண்டாக்க வழிவகை செய்யும். செயற்கையாக அல்லது இயற்கையாக உண்டாக்கிய வண்ணக் கலவையை அந்த வார்ப்பின் பிரிவுகளில் ஊற்றுவார்கள்.
டைலின் முன்பக்கத்துக்குத் தேவையான வேலைப்பாடு முடிந்த பின்னர் வார்ப்பின் பின்பக்கத்தில் உலர்ந்த மணல், சிமெண்ட் கொண்ட கலவையை இட்டு நிரப்புவார்கள். பின்னர் அதன் மீது ஈரமான மணல், சிமெண்ட் கலவையை வைத்துப் பூசுவார்கள். சமதளக் கரண்டி உதவியுடன் பின்பக்கத்தின் மேற்பரப்பை சொரசொரப்பின்றி நேர்த்தியாக நிறைவேற்றி, ஈரமான கலவை உலர் கலவையுடன் நன்கு இணையும்படி அழுத்தம் கொடுப்பார்கள். இந்த வேலைகள் அனைத்தையும் முடித்த உடன் டைலை வார்ப்பிலிருந்து எடுத்து உலர வைப்பார்கள். தேவையான அளவு உலர்ந்த பின்னர் அந்த டைலைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நீரில் போட்டு பதப்படுத்துவார்கள். இந்தப் பதப்படுத்துதல் நிறைவேறிய பிறகு டைல்கள் பதிப்புக்கு உகந்ததாக தயாராகிவிடும்