எனக்குப் பிடித்த வீடு: ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’

எனக்குப் பிடித்த வீடு: ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’
Updated on
1 min read

எங்களது வீட்டில் எனக்கு ஒவ்வொரு பகுதியும் எனக்குப் பிடித்ததுதான். என்றாலும் என் வீட்டின் தலைவாயிலில் உள்ள ஊஞ்சல்தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. இதை அஃறிணையாகவே நான் கருதவில்லை. என் வீட்டின் மூத்த மனுஷிபோல் அதன் மடியில் நான் படுத்துறங்குவேன். உண்மையிலேயே இந்த ஊஞ்சலுக்கு வயது 100-யைத் தாண்டியிருக்கும். சமயங்களில் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் தோழியாகவும் இருக்கும். இந்த ஊஞ்சல் என் அம்மா எனக்கு அளித்த சீதனம்.

என் சிறு வயதில் இந்த ஊஞ்சலில்தான் உறங்கிச் சாப்பிட்டு, படித்து என்று இருந்ததால் என் திருமணத்துக்குப் பிறகு என்னால் பிரிய மனசில்லை. இதை உணர்ந்த எனது அம்மா இந்த ஊஞ்சலை எனக்கே கொடுத்துவிட்டார்.

‘பத்துப் பன்னிரண்டு/தென்னைமரம் பக்கத்திலே வேணும்’ என்று பாரதி பாடுவதுபோல இந்த ஊஞ்சல் இருக்கும் தலைவாயிலில் தென்னைமரம், மருதாணி, அரளி, நந்தியாவட்டை எனப் பசுமை சூழ்ந்து கிடக்கும். காலையில் சூடான காபியோடு இந்த ஊஞ்சலில் அமர்ந்து அந்தச் சூழலை ரசித்திருப்பேன். என் கணவர் நாற்காலியில் அமர்ந்து நாளிதழ் படிப்பார். இதமான காற்றை இருவரும் அனுபவிப்போம். கீறீச்சிடும் குருவிகள், துள்ளி ஓடும் அணில்கள், அலையும் பூனை இவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போது நேரம் போவதே தெரியாது.

வெயிலின் தாக்கம் இந்த ஊஞ்சல் பகுதியில் அறவே கிடையாது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து கதைப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உண்டு. ஊஞ்சலில் உட்கார்ந்து சாப்பிடுவதும் உண்டு. அவ்வாறு சாப்பிடும்போது ஊரில் இருக்கும் அம்மா என்அருகில் இருப்பதுபோல் தோன்றும். என் தோழிகள் வந்தால் வீட்டுக்குகுள்ளே வராமல் ஊஞ்சலில் உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். என் தோழி மனோவுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து பழைய சினிமா பாடல்கள் பாடுவது வழக்கம். முக்கியமாக 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ ( திரைப்படம் : பாதை தெரியாது பார்) என்னும் பி. பி. னிவாஸ் பாடிய பாடலைப் பாடும்போது நாங்களும் சிட்டுக்குருவிகளாகி ஆடுவோம். இந்த ஊஞ்சல் என் கடைசி மூச்சு வரை என்னுடன்தான் இருக்கும்; இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம்.நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.

உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in