

வீடு கட்டுவதில் இன்றைக்குப் பல்வேறு புதிய கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன; தொழில்நுட்பத்தால் பணியும் எளிதாகியிருக்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவது இந்த அளவு எளிமையான காரியமாக இல்லை. வீடு கட்டுவது என்றால் செங்கல், மணல், ஜெல்லி, கம்பி எனப் பலவிதமான கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். செங்கல் கிடைத்தால் மணலுக்குத் தட்டுப்பாடு இருக்கும். இருந்தபடி திடீரென சிமெண்ட் விலை உயர்ந்துவிடும். இதையெல்லாம் கணக்கில் வைத்துதான் வீடு கட்ட வேண்டும்.
ஆனால் கோவையில் இந்தப் பிரச்சினைகள் இன்றி நவீனக் கட்டுமானப் பொருளான சிமெண்ட் பலகை மூலம் ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். அப்படியானால் அதன் ஆயுட்காலத்தைக் குறித்துக் கேள்வி எழலாம். அந்த சிமெண்ட் பலகை வீடு தனது 10-வது பிறந்த நாளைச் சமீபத்தில் கொண்டாடியிருக்கிறது. இதிலிருந்து அதன் உறுதியை உணர்ந்துகொள்ள முடியும்.
இந்த வீடு கோவை வரதராஜுலு நகர், கணபதி தெருவில் உள்ளது. வீட்டின் உரிமையாளாரான சிந்தாமணி ஒரு பொறியாளர். அதனால்தான் தனது வீட்டை இவ்வளவு சிரத்தை எடுத்துக் கட்டியிருக்கிறார். “ஆந்திராவில் இந்த சிமெண்ட் பலகை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பிளைவுட்டுக்குப் பதிலாக சிமெண்ட் பலகை நாங்கள் தயாரித்து வந்தோம். ஆனால் மேலை நாடுகளில் இந்த சிமெண்ட் பலகையைப் பயன்படுத்தி வீடு கட்டிவருகிறார்கள். நானும் அதேபோல் கட்ட வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆனால் பலரும் சிமெண்ட் பலகை வீடு அவ்வளவு வலுவாக இருக்காது என எச்சரித்தனர். நான் உறுதியாக இருந்தேன். இன்றைக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறிய பழுதுகூட ஏற்படவில்லை” எனத் தான் வீடு கட்டிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் சிந்தாமணி.
சிமெண்ட் பலகை
சிமெண்ட் பலகை என்பது சிமெண்டும் மரமும் கலந்து வலுவூட்டப்பட்டு உருவாக்கப்படும் ஒரு கட்டுமானப் பொருள். யூகலிப்டஸ் அல்லது சுபாவல் மரம் இதற்குப் பயன்படுத்தப் படுகிறது. 80 சதவீதம் சிமெண்ட்டும் 20 சதவீதம் மரச் சட்டமும் சேர்ந்த பொருள் இது. இது பொதுவாக 10 அடி நீளமும் 4 அடி நீளமும் கொண்டவை இந்தப் பலகைகள். 6 மில்லி மீட்டரில் இருந்து 40 மில்லி மீட்டர் வரை கனம் கொண்ட பலகைகள் தயாரிக்கப் படுகின்றன.
புயல் தாங்கும் வலிமை
சிமெண்ட் பலகையால் கட்டப்பட்ட இந்த வீட்டின் சிறப்பு, பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் தன்மை கொண்டவை. அதே சமயம் கட்டுமானச் செலவும் குறைவு. மேலும் இந்த சிமெண்ட் பலகைச் சுவர்களை எளிதாகப் பிரித்து தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கான்கிரீட் வீட்டைக் கட்ட குறைந்தது ஆறு மாதங்களாவது எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மாதிரியான சிமெண்ட் பலகையால் கட்டப்படும் வீட்டை ஒரு மாதத்திலேயே கட்டி முடிக்க முடியும்.
இரு படுக்கையறை கொண்ட இந்த வீட்டை முழுவதும் சிமெண்ட் பலகையால் சிந்தாமணி கட்டியிருக்கிறார். செங்கற்களோ சிமெண்டோ மருந்துக்கூடப் பயன்படுத்தப்படவில்லை. சிமெண்ட் பலகைகளைப் பொருத்தினால் போதுமானது. “பலகைதானே, எளிதாக உடைத்துவிடலாம் எனப் பயப்படத் தேவை இல்லை. ஓரளவு செங்கல் சுவர் அளவுக்கு உறுதியானதுதான்” என்கிறார் சிந்தாமணி. இந்த வீடுகள் அதிகமாக வெப்பத்தை உள்வாங்காது. அதனால் குளிர்சாதனப் பெட்டிகள் தேவைப்படாது. மரக்கலவைகள் கலந்து கட்டப்பட்டிருப்பதால் தீ பற்றக்கூடும் என அச்சம் ஏற்படக்கூடும். ஆனால் தீ பற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார் சிந்தாமணி.
குறைவான கட்டுமானச் செலவு
இந்தப் பரப்பளவில் உள்ள சாதாரண கான்கிரீட் வீடு கட்டுவதற்குச் சுமார் 50 பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் இந்த வீடு கட்டுவதற்கு ஆறு பணியாளர்கள் வரைதான் தேவைப்படுவார்கள். மரபான கட்டுமான முறையில் சதுர அடிக்குச் சுமாராக ரூபாய் 1,500 வரை ஆகும். ஆனால் இந்த சிமெண்ட் பலகை கொண்டு கட்டினால் ரூபாய் 900 வரைதான் ஆகும். ஆக 600 ரூபாய் அளவில் மிச்சமாகும். மேலும் செங்கல் சுவர் அதிக அடர்த்தி கொண்டதாக இருக்கும். அதனால் கார்பெட் ஏரியா குறைவானதாக இருக்கும். ஆனால் இந்த சிமெண்ட் பலகை கொண்டு கட்டும்போது சுவர்களின் அடர்ந்தி குறைவாகத்தான் ஆகும். நமக்கான கார்பெட் ஏரியா அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
செங்கல், மணல் போன்ற பொருள்களின் பயன்பாடு இல்லாததால் இந்த வகை வீடு சுற்றுச்சூழலுக்கும் உகந்தது எனலாம். கட்டுமானப் பொருள்கள் தட்டுபாடு உள்ள இந்தக் காலகட்டத்தில் இம்மாதிரியான வீடுகளின் தேவை அவசியம். அதற்குச் சாட்சியாக இருக்கிறது சிந்தாமணியின் இந்த வீடு.
சிந்தாமணி