

நம்முடைய பாரம்பரியக் கட்டிடக் கலைகளின் ஒரு சிறப்புக்குரிய அம்சம், அது நம் நிலத்தில் காலநிலைகளுக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொண்டு செயல்படும். வீட்டுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியம் தரும். இன்றைக்கு நவீனக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பெரிய மாற்றங்கள் வந்தன.
டைல்ஸ்கள் பல வண்ணங்களில் பல வடிவங்களில் கிடைக்கின்றன. இதை வாங்கித் தரைத் தளத்துக்குப் பொருத்துவதும் எளிது. அதனால் பலரும் இதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் இவ்வகை டைல்களின் அதிகப் பளபளப்பு வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் இடறி விழக் காரணமாக இருந்தன. மேலும் இந்த டைல் தரைகளில் நடப்பது உடலுக்கு ஆரோக்கியமானதும் அல்ல எனச் சொல்லப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் மரபான நம் ரெட் ஆக்ஸைடு போன்ற தரைத் தள தொழில்நுட்பத்தின் அருமை புரியத் தொடங்கியிருக்கிறது.
ரெட் ஆக்ஸைடு தளமிடும் முறை
ஒரு பங்கு சிமிண்ட், மிருதுவான மணல் ஆகியவற்றுடன் ஒரு பங்கு ரெட் ஆக்சைடு சேர்த்து நன்றாகக் குழைக்க வேண்டும். இதைத் தரைத் தளத்தில் பூச வேண்டும். ஒரு பங்கு ஆக்சைடுக்கு மூன்று பங்கு சிமிண்ட் பயன்படுத்தினால் கருஞ்சிவப்பு நிறத்துடன் தரை இருக்கும். சிமெண்டை அதிகரிக்கும்போது வெளிர் சிவப்பாகும். வெள்ளை சிமெண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தும்போது கவனம் தேவை. பூசிய பிறகு ஒரு துண்டைப் பயன்படுத்தி பாலீஷ் செய்வார்கள்.
முறையானபடி உருவாக்கப்படும் ரெட் ஆக்சைடு தரை உறுதியானதாக இருக்கும். சிறு விபத்தால் அவ்வளவு சீக்கிரம் உடையாது. நீண்ட காலம் பளபளப்பாகவும் இருக்கும். ரெட் ஆக்சைடு தரைகளைக் கொண்ட பழைய கட்டிடங்கள் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் அதே பளபளப்புடன் இருப்பதை இன்றும் காணலாம். தற்போதும் ஆக்சைடு தரைக்கான மூலப்பொருட்களின் விலை மலிவுதான். அதனால் மற்ற டைல், மார்பிள் தரைகளைக் காட்டிலும் இதை உருவாக்கக் குறைவான தொகையே ஆகும்.
ஆக்ஸைடு தரை அமைத்த பிறகு, அடுத்த நாளிலிருந்து இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை தளத்தில் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், அதாவது ஒரு நான்கு நாள்களுக்கு தண்ணீர் தெளிக்கும் நேரம் தவிர மற்ற நேரம் யாரும் தளத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.