

அண்மையில் பெய்த மழை சென்னை மாநகரையே புரட்டிப் போட்டுவிட்டது. நாளேடுகளில் வெளியான சில புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரங்கள் மூழ்கியிருந்தன. இதன் விளைவால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுபோன்ற நிலையில் தொழிற்கடனை வங்கி அதிகாரிகள் நிச்சயமாகப் பரிசீலித்து மறுசீரமைப்பு செய்வார்கள். இத்தகைய தன்மை வீட்டுக் கடனில் உண்டா?
“உண்டு” என்கிறார் ஓர் அரசு வங்கி உதவிப் பொது மேலாளர். “ஆனால் வேறு காரணங்களுக்காக, அதாவது, பலத்த மழையால் வீட்டில் நிறைய சேதம் ஏற்பட்டிருந்தால் அதற்குக் காப்பீடு நிறுவனம் கை கொடுக்கும். அதே சமயம் வீட்டுக் கடன் என்பது, தனி நபர் வருமானத்தை வைத்து வழங்கப்படுவது, அந்த வருமானம் பாதிக்கப்படும் சூழல் நேர்ந்தால் வங்கிகள் கடனைச் சீரமைக்கும். இந்த அதிகாரம் மேலதிகாரிகளுக்கே உண்டு.
எடுத்துக்காட்டுகள்
1. கடன்தாரர் திடீரென்று வேலை நீக்கம் செய்யப்படலாம். இத்தகைய நிகழ்வுகள் கணினி நிறுவனங்களில் அடிக்கடி நடக்கின்றன. இருந்தாலும், அந்த நபருடைய படிப்பு, தகுதி இவற்றுக்கேற்ப வேறு நல்ல வேலை கிடைக்கும். அந்த இடைப்பட்ட காலத்துச் சிக்கலைச் சமாளிக்க வங்கி உதவும்.
2. கடன்தாரர் குடும்பத்தில் வயதான தகப்பனாரோ, தாயாரோ நோய்வாய்ப்பட ஏதுவுண்டு. கேன்சர், சிறுநீரகச் செயலிழப்பு, ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் குறைந்தபட்சம் லட்ச ரூபாய்க்கு மேல் தாண்டும். இந்தச் சூழ்நிலையில் வங்கிக் கடனை உரிய காலத்தில் கட்ட முடியாமல் போய்விடும்.
மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நேரும்போது, கடன்தாரர் தக்க சான்றிதழ் தர வேண்டும். வேலை சம்பந்தப்பட்டதெனில் நிறுவனத்தின் இரண்டு மாத நோட்டீஸைக் காண்பிக்கலாம். குடும்பம் சம்பந்தப்பட்டதென்றால் மருத்துவச் சான்றிதழ்.
வேறொரு முக்கிய நிபந்தனை... இதுவரையில் குறிப்பிட்ட கடனுக்கான மாதத் தவணை ஒழுங்காகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது, 20 வருடக் கடன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வருடம் முறையாக தவணை செலுத்தியிருக்கிறீர்கள். மூன்றாவது வருடத்தில் எதிர்பாராத சம்பவம் நிகழும்போது வங்கிகளின் ஒத்துழைப்பு உண்டு. ஆனால், அந்த இரண்டு வருடங்களிலேயே முறையாகச் செலுத்தத் தவறினால் Rephasement கிடைக்காது. கடன்தாரர் வேறு கடனுக்குக் கூட்டுக் கடனாளியாக இருந்தால், அந்தக் கடனும் ஒழுங்காக இருத்தல் அவசியம்.
இன்னொரு அம்சமும் குறிப்பிடத் தக்கது. அதாவது, கடன் தவணை செலுத்துவது ஒத்தி வைக்கப்பட்டாலும், சீரமைப்பு கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டுதானிருக்கும். (இப்போது 9.75%). அபராத வட்டியை பற்று வைக்க மாட்டார்கள். கடனாளியும் கறுப்புப் பட்டியலில் சேர மாட்டார். கடன் வாராக் கடன் என்று பெயரிடப்படாது.
சரி, பெரும் மழையால் வீட்டில் சின்னச் சின்ன பழுதுநேர்ந்து, அறைகலன்கள் பழுது ஏற்பட்டு அதற்கான செலவு வருகிறது. அது உத்தேசமாக ஒன்றரை லட்சம். இதற்கான கடன் கிடைக்குமா?
கிடைக்கும். ஆனால் முன்பே உள்ள கடனில் சேர்க்க மாட்டார்கள். தனியாகக் கடன். வட்டி இதற்குக் கொஞ்சம் கூட. ஆனாலும் இதுவும் முன்னுரிமைக் கடனில்தான் சேரும்” என்றார் குறிப்பிட்ட அதிகாரி.
ஆக, ஒன்று தெளிவாகப் புரிகிறது. டாக்டர், வழக்கறிஞர் போல வங்கி மேலாளரிடமும் உண்மையை மறைக்கக் கூடாது. எல்லாச் சிக்கல் களையும் உள்ளது உள்ளபடி சொன்னால் வங்கி அதிகாரிகள் ஒவ்வொரு கடனாளியின் பழைய சரித்திரத்தைக் கவனித்து உறுதியாக உதவுவார்கள்.
மேலும் இன்னொன்று... எதை மறைத்தாலும், பான் எண்ணை வைத்தும் பிற அட்டைகளை வைத்தும் கடனாளியைப் பற்றிய விவரங்களை வங்கி அதிகாரிகள் தெரிந்து கொள்ளுவார்கள். எனவே, மனம் விட்டுக் குறைகளைக் கூறி தீர்வு பெறுங்கள்.
குறிப்பு: அரசு வங்கிகளுக்குத்தான். இவை பொருந்தும். தனியார் வங்கியின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை.