

மழைநீர் சேகரிப்பைப் பொறுத்தவரை, நம்முடைய கடந்த காலத்தை மூன்று காலகட்டமாகப் பிரித்துப் பார்க்கலாம்.
உலகம் தோன்றிய நாளிலிருந்து கி.மு. 3000 வரை முதல் காலகட்டமாகவும், கி.மு. 3000-லிருந்து கி.பி. 1700 வரை இரண்டாவது காலகட்டமாகவும், கி.பி. 1700-லிருந்து இன்றுவரை மூன்றாவது கால கட்டமாகவும் பிரித்துக்கொள்ளலாம்.
இப்படிப் பிரித்துப் பார்ப்பது உலகம் முழுவதற்கும் பொருத்தமாக இருந்தாலும், இந்தியாவை அடிப்படையாக வைத்தே நாம் பேசுகிறோம்.
இயற்கை சேகரிப்பு
முதலாவது கால கட்டத்தில் மழைநீர் மனிதனுடைய சம்பந்தம் இல்லாமலே ஆறுகளிலும், குட்டைகளிலும் சேகரிக்கப்பட்டு அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனால்தான் பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் நதிகளைச் சார்ந்திருந்தன. இதற்கு உலகளவில் பல உதாரணங்கள் உண்டு, இந்திய துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கூறலாம்.
இரண்டாவது காலகட்டத்தில் மனிதனுடைய பங்கேற்புடன் மழைநீர் சேகரிக்கப்பட்டது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (கி. மு. 3000) நம் முன்னோர் மழைநீரை சேகரித்ததற்கான ஆதாரம், குஜராத் மாநிலத்திலுள்ள தொலாவீரா (Dholavira) என்னும் இடத்தில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலத்திலேயே உணவுத் தேவைக்கு நெல் மற்றும் இதர தானியங்களை அறுவடை செய்து சேமிப்பதன் முக்கியத்துவத்தையும், தண்ணீர் தேவைக்கு மழைநீரை அறுவடை செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இந்த வகையில் மழைநீர் சேகரிப்பில் உலகுக்கே முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் இந்தியர்கள் விளங்கினார்கள்.
ஏரிப் பாசன முறை
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த இடத்துக்கேற்ப, பெய்யும் மழைக்கேற்ப, பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு முறைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏரிகள் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஏரிப் பாசன முறை இரண்டாயிரம் ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 39,000 ஏரிகள் இருக்கின்றன. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்திலும் இந்த ஏரிப் பாசன முறை காணப்படுகிறது. இந்த மூன்று மாநிலங்களில் இன்றைக்கும் மொத்தம் 1,40,000 ஏரிகள் உள்ளன.
ஏரிகள் இரண்டு வகைப்படும்: ஆறுகளில் பெருகி ஓடும் மழைநீரைத் திருப்பி ஏரிகளில் சேகரிப்பது ஒரு வகை. இதற்கு உதாரணமாக வீராணம் ஏரியையும் காவேரிப்பாக்கம் ஏரியையும் சொல்லலாம். மற்றொன்று, பெய்யும் இடத்திலேயே மழைநீரைச் சேகரிப்பது. இந்த ஏரிகள் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று சங்கிலிபோல இணைந்தவை. அதாவது, ஒரு ஏரி நிரம்பினால், ஒரு கால்வாய் வழியாக உபரி நீர் ஓடி, அடுத்த ஏரியை நிரப்பும்.
மழைநீர் சேகரிப்பின் இரண்டாவது காலகட்டம், நீர் மேலாண்மையில் ஒரு பொற்காலமாக இருந்ததென்றால் அது மிகையில்லை. அதற்கு முக்கிய காரணம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், குறிப்பாக ஏரிகள், கிராம மக்களின் பராமரிப்பில் இருந்ததுதான். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மேற்பார்வையில் நீர் மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதை அதிகம் விரும்பாத ஆங்கிலேயர்கள், பொதுப்பணித் துறையை (Public works Department) உருவாக்கி, அதன் மூலம்தான் ஏரிகளை பராமரிப்பது என்ற முடிவை எடுத்தார்கள்.
ஏரிகள் சீரழிவு
இதுவே மூன்றாம் கால கட்டத்தில் ஏரிகளின் சீரழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம்முடைய அரசும் அதே நடைமுறையை இன்றுவரை தொடர்ந்துகொண்டு வருகிறது. இதனால் ஏரிகள் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பது மட்டுமில்லாமல் ஏரிகளில் திடக்கழிவு, கழிவுநீர் செலுத்தப்பட்டு அவை மாசடைந்தும்வருகின்றன. பல இடங்களில் தனியார், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஏரிகள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதும் தடுத்து நிறுத்தப்படாமல் இருக்கிறது.
இந்த மூன்றாம் காலகட்டத்தில் நீர் மேலாண்மை பின்னடைவைச் சந்தித்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
(அடுத்த வாரம்: மழைநீரை சேகரிப்பது யார் பொறுப்பு?)
கட்டுரையாளர், மழை இல்லத்தின் இயக்குநர்
தொடர்புக்கு: sekar1479@yahoo.co.in / 96770 43869
மழைநீர் சேகரிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள், இலவச ஆலோசனைகளுக்கு சென்னை மந்தைவெளியில் உள்ள மழை இல்லத்தை அணுகலாம்: மழை இல்லம், 4, மூன்றாவது டிரஸ்ட் லிங்க் தெரு, மந்தைவெளி (பட்டினப்பாக்கம் அருகில்), சென்னை - 600028. இணையதளம்: >www.raincentre.net |