

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படைகள் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அணு குண்டுகளைப் பிரயோகித்தது. உலகப் போரில் நிகழ்த்தப்பட்ட மிக உக்கிரமான தாக்குதல் இந்த அணு குண்டு வீச்சு. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். இந்த இறப்புக்கு நினைவாக நிற்கும் கட்டிடம்தான் இது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரத்தைக் குறித்து வீசப்பட்ட அணுகுண்டால் இந்தக் கட்டிடம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. சக்தி மிக்க அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டும் அந்த நகரத்தில் எஞ்சி நிற்கும் ஒரே கட்டிடம் இதுதான். கட்டிடத்தின் புறச் சுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன் கோபுரம் சேதமடையவில்லை. இது கட்டிடவியல் துறையில் கவனிக்கத்தக்க விவாதங்களை விளைவித்தது. நகரத்தை மீண்டு உருவாக்கும்போது இந்தக் கட்டுவதற்குச் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இந்தக் கட்டிடம் குண்டு வீச்சுக்கான சாட்சியாக இருப்பதால் இது நினைவிடமாகப் பரமாரிக்கப்பட்டு வருகிறது. யுனஸ்கோ இந்தக் கட்டிடத்தைப் பாரம்பரியக் கட்டிடமாக 1996-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அறிவித்தது. இந்தக் கட்டிடத்தை செக் குடியரசைச் சேர்ந்த ஜான் லெட்செல் வடிவமைத்துள்ளார்.
இன்று இந்தக் கட்டிடம் ‘ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா’வாக இருக்கிறது. 1915-ல் கட்டப்பட்ட முதலில் ஹிரோஷிமா வர்த்தகக் கண்காட்சியகம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. 1933-ல் ஹிரோஷிமா தொழிற்சாலை மேம்பாட்டுக் காட்சியம் எனப் பெயர் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.