Published : 19 Dec 2015 11:09 AM
Last Updated : 19 Dec 2015 11:09 AM

நவீன சிற்பி: லாரி பேக்கர் - கட்டிடக்கலையின் காந்தி

லாரி பேக்கர் (1917-2007) பிரிட்டனில் பிறந்த ஓர் இந்தியக் கட்டிடக் கலைஞர். அவருடைய கட்டமைப்பு, அதிகம் செலவில்லாத ஆற்றல் திறன்மிகுந்த கட்டமைப்பு என்று இன்றளவும் புகழப்படுகிறது. அந்தந்த ஊரின் சூழலுக்கு உகந்தபடி கட்டிடங்களை அமைப்பதில் இவர் தேர்ந்தவர். இவர் காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு, அதைத் தன் கட்டமைப்புகளிலும் பயன்படுத்தினார். ‘கட்டிடக்கலையின் காந்தி’ என்று இவரை அழைக்கிறார்கள். இந்திய அரசு இவருக்கு ‘பத்ம’ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. கிராமியக் கட்டிடக் கலை குறித்த அவரது கட்டுரை ஒன்றின் சுருக்கமான அறிமுகம் இது.

கிராமியக் கட்டிடக் கலை

ஒரு நகர்ப்புறக் குடும்பத்துக்குத் தேவைப்படும் வசதிகளைவிடக் குறைவான வசதிகளே ஒரு கிராமப்புறக் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது என்று சொல்வதை முட்டாள்தனமாகவே நினைக்கிறேன். இது நேர்மையான சிந்தனை கிடையாது என்பது என் கருத்து. விதிமுறைகள் என்பது கட்டுமான நிலைத்தன்மையை உறுதிசெய்யவும், தீ விபத்து, சுகாதாரமின்மை, புயல், கனமழை, வெள்ளம் போன்ற சமயங்களில் உதவிசெய்யவும்தான் உருவாக்கப்பட்டன. உங்கள் வீட்டின் கட்டிடம் தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர, நீங்கள் நகரவாசியா, கிராமவாசியா என்பது முக்கியமல்ல. மாசு, சுகாதாரச் சீர்கேடுகள் போன்றவை எங்கு வசித்தாலும் ஆபத்துதான்.

இடவசதி, அதாவது வீட்டில் நீங்கள் புழங்கும் இடங்களும் அப்படித்தான் என்று நம்புகிறேன். உதாரணத்துக்கு, சமையலறையில் கட்டாயமாக வெளிச்சமும், காற்றும் இருக்க வேண்டும். சமைக்கும் இடத்தை, எரிசக்தியைத் திறனுடன் பயன்படுத்தும்படி அமைக்க வேண்டும். எரிபொருளை வீணாக்கும்படியோ, புகை வீடு முழுதும் சுற்றும்படியோ அமைக்கக்கூடாது. ஒரு கிராமப்புற குடும்பத்தில், அம்மா, அப்பா, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள், தாத்தா, பாட்டி போன்றவர்கள் இருக்கக்கூடும். இவர்கள் எல்லோருக்கும் தூங்குவதற்கு தனித்தனி இடம் தேவைப்படும்.

அது மூன்று அல்லது நான்கு அறைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தடுப்பான்கள், பிளவுகள் போன்றவற்றின் மூலம் ஒரே அறையில்கூட, எல்லோருக்கும் தனித்தனி இடத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும். கட்டுமான உத்திகள், பொருட்கள் போன்றவை தரமானதாகவும், ஆற்றலைச் சேமிக்கும்படியும், வலிமையானதாகவும், நீர் புகாதபடியும் இருக்க வேண்டும். இந்தத் திட்டமிடல்களிலும், வடிவமைப்புகளிலும் நகர்ப்புற, கிராமப்புற தேவைகள் என்ற வித்தியாசத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. “ஆனால், உங்களால் மண் சுவர்களை நகரத்தில் பயன்படுத்த முடியாது.

எப்படியிருந்தாலும் இங்கே மண் கிடைப்பதில்லை” என்று சில நேரங்களில் மக்கள் சொல்வார்கள். அவர்கள், செங்கல், கற்கள், கான்கிரீட் போன்றவையெல்லாம் நகரத்தில்தான் இருக்கின்றன, அல்லது உற்பத்தி செய்யப்படுகின்றன என்று நினைக்கிறார்கள்.

எப்படியிருந்தாலும், நகரப்புற, கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கை முறைகளிலும், அமைப்புகளிலும் கணிசமான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும்போது, பறவைகளையும், விலங்குகளையும் பராமரிப்பது தேவையானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும். ஆனால், இது நகரங்களில் சாத்தியமில்லை.

நகரங்களில், பெரும்பாலானவர்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் சந்தைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்கிறார்கள். அதனால், அவர்களுக்கு வீட்டில் வேலை செய்வதற்கான இடம் அரிதாகத்தான் தேவைப்படும். ஆனால், கிராமப்புறங்களில், வீடுகளே தொழிற்சாலைகள் போலத்தான் பயன்படுகின்றன. அவர்கள் கூடைகள், வலைகள் தயாரித்தல், உணவுப்பொருட்களை உலர வைத்தல், உணவுகளை விற்பதற்கு, தாங்கள் சாப்பிடுவதற்கு என எல்லாவற்றையும் வீட்டில்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

தேனீ வளர்த்தல், பட்டு நெய்வதற்காகப் புழுக்கள் வளர்த்தல், ஆடைகள் நெய்தல், சாயமிடல், நூல் நூற்றல் எனக் கிராமப்புற வீடுகளில் பலவிதமான குடிசைத் தொழில்களின் வேலைகள் நடைபெறுகின்றன. என்னைப் பொருத்தவரை, இதுதான் கிராமப்புற வீடுகளுக்கும், நகர்ப்புற வீடுகளுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் என்று சொல்வேன். ஒரு கிராமப்புற வீடு, இயல்பாகவே நகர்ப்புற வீட்டைவிட அதிகமான இடத்தையும் வசதிகளையும் கேட்கிறது.

நான் கிராமப்புற மக்களுக்காகத் திட்டமிடும்போது, ஒருவிதமான சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். ஒரு குடும்பத்துக்கான இடம் மட்டுமல்லாமல் கால்நடைகள், பறவைகள், தொழில் செய்வதற்கான இடம் என எல்லாவற்றையும் வழங்க வேண்டும். அதோடு, ஒரு நகர்ப்புறக் குடும்பத்தின் இடவசதிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறதோ, அதே செலவில் இவை எல்லாவற்றையும் செய்யவேண்டும். அதிர்ஷ்டவசமாக, இதில் பெரும்பாலான வேலைகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு நல்ல கூரை இருந்தால் போதுமானது.

சுவர்களோ, விலையுயர்ந்த தரைகளோ தேவையில்லை. அதனால், 250 சதுர அடியில் ஒரு கிராமப்புறக் குடிசையைத் திட்டமிடும்போது, அதில் 150 சதர அடியை வாழும் பகுதிக்காக ஒதுக்குவேன். அதே அளவுக்கு இடத்தையோ அல்லது அதைவிட அதிகமான இடத்தையோ என்னால் கால்நடைகளுக்காகவும், தொழில் செய்வதற்காகவும் ஒதுக்க முடியும். ஏனென்றால், இதற்குத் தரை, ஜன்னல், கதவுகள் போன்றவை தேவைப்படாது.

நான் மூன்று விதமான திட்டங்களை இங்கே கொடுக்கிறேன். முதல் திட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் வாழும் வீட்டுக்கான தேவைகள்: ஒரு முற்றம் அல்லது வராந்தா, மூன்று தூங்கும் இடங்கள், ஒரு சமையலறை, ஒரு கழிப்பறை. ஆனால், இதில் கொல்லைப்புறத்தில் இருக்கும் மூடப்பட்ட கால்நடைகள், பறவைகளின் வாழிடம், தறி போன்றவையும் அடங்கும்.

இரண்டாவது திட்டமும் புழங்குவதற்கான போதுமான இடத்தை அளிக்கிறது. ஒரு கிராமப்புற வீட்டுக்கு, வீட்டைவிடச் சுற்றுச்சுவர் மிகவும் முக்கியம். இது கால்நடைகளின் பாதுகாப்பையும், குடும்பத்தின் தனிமையையும் உறுதிசெய்கிறது. அதனால், அந்த சிறிய இடத்தில் நான் சுற்றுச்சுவரைத் திட்டமிடுவது அவசியம் என்று உணர்கிறேன்.

இதே இடத்தில் மற்ற தொழில் சம்பந்தமான இடங்களையும் பாதுகாப்பாக அமைக்க முடியும். பணமும், பொருட்களும் கிடைத்தால், தகட்டுக் கொட்டகைகள், கூரைகள், அப்படியில்லாவிட்டால், முற்றத்தை நடுவில் வானம் பார்க்கும்படி அமைத்து, அதைச் சுற்றி வீட்டின் அறைகளைத் தனித்தனியாக உருவாக்கலாம். இந்த வடிவமைப்பு, விலங்குகள் மற்றும் வீட்டின் கழிவுகளை வைத்து இயற்கை எரிவாயு ஆலை அமைக்கும் வசதிகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், என்னதான் அதிகமான செங்கற்களும், கற்களும் பயன்படுத்தப்பட்டாலும், கூரையும், தரையும் குறைவாக இருப்பதால் செலவு அதிகமாகாது.

இன்னும் சொல்லப்போனால், முதல் திட்டத்துக்கும், இரண்டாவது திட்டத்துக்கும் செலவில் பெரிய வித்தியாசமில்லை. மூன்றாவது திட்டத்தைத்தான் நம்மால் “அடிப்படையான வீடு” என்று சொல்ல முடியும். அதாவது அடிப்படைத் தேவைகளுக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் - ஒரு ஆற்றல் திறன் மிகுந்த சமையலறை, ஒரு கழிவறை, ஒரு குளியலறை, ஒரு திண்ணை, இரண்டு தனித்தனியான தூங்கும் இடங்கள் (பகல் நேரத்தில் இவற்றை வரவேற்பறையாகப் பயன்படுத்த முடியும்) போன்றவை இருக்கும்.

இந்த அடிப்படையான வீட்டைச் சுற்றி, என்ன மாற்றம் வேண்டுமானாலும் வீட்டின் உரிமையாளர்கள் செய்துகொள்ள முடியும். ஒரு குடும்பத்தின் தேவைக்கேற்ப இந்தத் திட்டத்தில் கூடுதலான அறைகளை இணைக்கலாம், தொழிற்கூடத்தையும், கால்நடைகளின் இடத்தையும் விரிவாக்கலாம்.

இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னர், நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். ஊரக வீட்டுவசதித் துறையில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் கூடுமானவரை யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், கம்பிகள், கண்ணாடிகள் போன்றவை மலிவான விலையில் எப்போதும் கிடைக்கப்போவதில்லை. அவற்றுக்கான செலவு அதிகமாகவே இருக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் நபர் செய்வதற்கு ஏதுமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்க மாட்டார். அதனால், அவருடைய வீட்டைக் கட்டுவதற்கு அவருக்கு நேரமிருக்காது.

நகரத்தில் பணிபுரியும் ஒருவருக்கு காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் வேலை இருக்கும். ஆனால், கிராமப்புறத்தில் ஒரு நபர் பணிபுரிவதற்கான நேரம் நீண்டதாகவும், தீவிரமானதாகவும் இருக்கும். முக்கியமான பருவகாலங்களில், விதைத்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாயத்துக்கான திட்டமிடல் என நிறைய வேலை இருக்கும். இந்த எல்லா வேலைகளையும் குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டியிருக்கும். நகரவாசியை விட கிராமவாசிக்கு அடிப்படைத் தேவைகள் அதிகம்.

ஏனென்றால், நகரத்தில் தண்ணீர் இணைப்பு, சமையல் எரிவாயு, மின்சாரம், சந்தை வசதி, தொழில் என எல்லாமே அருகிலேயே இருக்கும். ஆனால், ஒரு கிராமவாசி, தண்ணீருக்காகவும், எரிபொருளுக்காகவும் பல மைல் நடக்க வேண்டியிருக்கும். அவருக்கு கழிப்பறை வடிகால் வசதிகளும் சரியாக இருக்காது. தொழிலுக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கவும், அவர் உற்பத்தி செய்த பொருட்களை விற்கவும், கட்டுமானப் பொருட்களை வரவைக்கவும் அவருக்குச் சரியான சாலை வசதியும் இருக்காது. நாம் அவருடைய இருப்பைக் கொண்டாடுவது என்பது வெகுதூரம்; ஏனென்றால், நாம் அவருடைய வாழ்க்கையின் தொடர் போராட்டங்களையே எளிதில் மறந்துவிடுகிறோமே!

கடைசியாக, ஒரு நகர்ப்புற அலுவலக மேசையில் அமர்ந்துகொண்டு, கிராமப்புற வீட்டைத் திறம்படவும், அர்ப்பணிப்புடனும் நிச்சயமாகத் திட்டமிட முடியாது. நாம் கிராமங்களுக்குச் சென்றுதான் அவர்களின் உண்மையான தேவைகளைத் தெரிந்துகொண்டு அதைத் திட்டமிட வேண்டும்.

தொகுப்பு: என். கௌரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x