

கராத்தே கற்று வாங்குகிற க்ரீன் பெல்ட் எதிர்பாராத தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். நகரமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படுகிற க்ரீன் பெல்ட் திட்டமும்கூட நம்முடைய பாதுகாப்புக்கானதுதான்.
புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறபோது தேவைப்பட்ட இடங்களில் மட்டும் கட்டிடங்களைக் கட்டிக்கொண்டு மிச்சமிருக்கும் இடங்களை அப்படியே விட்டுவைப்பதைத்தான் பசுமை வளையம் (Green Belt) என்று குறிப்பிடுகிறார்கள். இத்திட்டத்தின்படி கட்டிடம் கட்டாத பகுதிகள் அதற்கு முன்பு இருந்த மாதிரியே வயலாகவோ காடாகவோ அல்லது தரிசாகவோ தொடரும்.
பசுமை வளையங்கள் தரும் பாதுகாப்பு
நகரங்களைச் சுற்றிப் பசுமை வளையங்களைப் பராமரிப்பது மேலைநாடுகளில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகர்மயமாதல் அதிகரித்துவரும் இந்திய நாட்டில் இன்னும் அதைப் பற்றி விழிப்புணர்வு உருவாகவில்லை. இடப்பற்றாக்குறையால்தானே நகரங்கள் நாலாப் புறங்களிலும் விரிந்து பரந்து வளர்கின்றன. பிறகு, அங்குள்ள இடத்தை வீணாக விடலாமா என்பது நியாயமான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் இயற்கையான சுற்றுச்சூழலைத் தொடர்ந்து பராமரிப்பது, சுத்தமான காற்றும் நீரும் கிடைப்பதற்கு வழி செய்வது, மனமகிழ்ச்சிக்கான சூழலை உருவாக்குவது எனப் பசுமை வளையத்திற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அறைகளுக்குள் அடைந்து கிடக்கும் நகர வாழ்க்கையில் காலையிலும் மாலையிலும் காலாற நடப்பதற்கான இடத்தைப் பசுமை வளையம் பாதுகாக்கும்.
அசுரத்தனமான நகரமயமாதலின் காரணமாக இந்தப் பசுமை வளையம் என்கிற கோட்பாடு தோன்றவில்லை. ஆதிகாலம்தொட்டே நகரங்கள் அனைத்தும் பசுமை வளையப் பாதுகாப்போடுதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே இஸ்ரேலில் உள்ள அனைத்து நகரங்களைச் சுற்றிலும் பசுமை வளையங்களை அமைக்க வேண்டிய அவசியத்தை மோசஸ் விளக்கியிருக்கிறார். கி.பி.ஏழாவது நூற்றாண்டில் முகம்மது நபிகள் மெதீனா நகரத்தைச் சுற்றிலும் பசுமை வளையத்தை உருவாக்கினார். மெதீனா நகரத்தைச் சுற்றிலும் 12 கிலோமீட்டர் அளவுக்கு மரங்களை வெட்டக் கூடாது என்று அவர் தடை செய்திருக்கிறார்.
மேலைநாடுகளில் பசுமை வளையம்
இங்கிலாந்தில் பதினாறாம் நூற்றாண்டில் முதலாம் எலிசபெத் ஆட்சிக் காலத்தில் லண்டன் நகரத்தைச் சுற்றி பசுமை வளையம் அமைக்கப்பட்டது. நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் வரையில் பசுமை வளையம் பராமரிக்கப்பட்டது. ஆனால் நெடுங்காலத்திற்கு அது தொடரவில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டன் நகரத்தைச் சுற்றிலும் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பசுமை வளையத்தைப் பராமரிக்க வேண்டும், நகர் விரிவாக்கத் திட்டங்களைப் பசுமை வளையத்திற்கு அப்பாலேயே அமைக்கவேண்டும் என்று உறுதியாக முடிவு செய்யப்பட்டு இந்த விதிமுறை கடுமையாகவும் பின்பற்றப்பட்டது.
இங்கிலாந்தில் தற்போது பதினான்கு நகரங்களைச் சுற்றி பசுமை வளையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பசுமை வளையங்கள் இங்கிலாந்தின் மொத்தப் பரப்பளவில் பதிமூன்று சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்தை அடுத்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பசுமை வளையம் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். கனடாவின் ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களிலும் மிகப்பெரிய அளவில் பசுமை வளையங்கள் அமைந்துள்ளன. அமெரிக்காவில் இந்தத் திட்டம் பசுமைப் பரப்பு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பசுமைப் பரப்புகள் சற்றே பெரிய பூங்கா என்ற அளவில்தான் அமைந்துள்ளன.
பெங்களூரு நகரத்தில் அதிகரித்துவரும் மக்கள்தொகையையொட்டி 2031-ம் ஆண்டுக்கான புதிய நகரமைப்புத் திட்டம் உருவாகிவருகிறது. இத்திட்டத்தில் நகரத்தைச் சுற்றி 500 மீட்டரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரையில் பசுமை வளையத்தைப் பாதுகாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் இந்தத் திட்டத்தைப் பற்றி அரசு ஆலோசிக்கலாம். ஏற்கெனவே இருக்கும் நகர எல்லைப்புறங்களை திருத்தியமைக்க முடியாது. ஆனாலும் அருகில் உள்ள கிராமங்களை நகரத்தில் இணைக்கும்போது அக்கிராமங்களை அப்படியே பசுமை வளையமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நகரங்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடி வருபவர்கள் நகரங்களையொட்டி நிரந்தரமாகத் தங்குவதற்குப் பசுமை வளையம் தடையாக உள்ளது என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனால் சுவாசிக்க சுத்தமான காற்றும் குடிப்பதற்குச் சுத்தமான நீரும் இல்லாவிட்டால் நகரங்கள் மூச்சடைத்துப் போய்விடுமே!