Published : 28 Nov 2015 02:46 PM
Last Updated : 28 Nov 2015 02:46 PM

கான்கிரீட் இல்லாத கூரை

தென்னங்கீற்றுகள், பனை மட்டைகள், கோரைகள் ஆகியவற்றைக் கொண்டு கூரை வேய்கின்ற வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. அதேநேரத்தில் வீட்டில் குளிர்வசதி செய்துள்ளவர்கள் அதற்காக அதிக அளவில் மின்கட்டணத்தைக் கட்ட வேண்டியிருக்கிறது.

குளிர்வசதியைக் கொண்டிருக்கும் வீட்டிற்கான மின் கட்டணம், குளிர்வசதியைப் பயன்படுத்தாத வீட்டின் மின் கட்டணத்தைவிட இரு மடங்குக்கும் அதிகமாகத்தான் இருக்கிறது. குளிர் வசதி இல்லாவிட்டால் வேர்த்து விறுவிறுத்து வெந்து போக வேண்டியதுதான் என்ற நிலைக்கு கான்கிரீட் கூரையும் ஒரு முக்கியக் காரணம்.

கான்கிரீட்டும் இரும்பும் கலந்த உறுதியான கூரைகள் கட்டிடங்களுக்கு அவசியமானதுதான். ஆனால் எல்லாக் கூரைகளும் கான்கிரீட்டில் மட்டும்தான் கட்டப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அதற்கு மாறாக இயன்றவரையில் கான்கிரீட் கலவையையும் இரும்பையும் குறைத்துக் கூரைகளை அமைக்கலாம். இது கட்டடங்களுக்கு நல்ல காற்றோட்டமான வசதியை அளிக்கும்.

இந்தியாவில் இரும்புக்குப் பதிலாக மூங்கிலையும் கான்கிரீட் கலவைக்குப் பதிலாகக் களிமண்ணையும் பயன்படுத்திக் காற்றோட்டமான கூரைகளை அமைப்பதைப் பிரபலப்படுத்திவருகிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் லாரன்ட் போர்னியர். பிரான்ஸ் நாட்டில் பிறந்த போர்னியர் 1993ஆம் ஆண்டில் கட்டிடக் கலை மாணவராக கொல்கத்தாவுக்கு வந்தார். நகரங்களில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களைப் பற்றி ஆய்வுசெய்வதுதான் அவரது இந்தியப் பயணத்தின் நோக்கம். ஆனால் அவரது மனதைக் கவர்ந்ததோ மூங்கிலாலும் களிமண்ணாலும் கட்டிப்பட்ட வங்கத்தின் குடிசை வீடுகள். உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டே பாரம்பரிய முறையையொட்டிக் கட்டிடங்களை வடிவமைக்கும் பாணியை போர்னியர் தேர்ந்தெடுத்தார்.

1995ஆம் ஆண்டு ஆஷா நிகேதன் என்ற தொண்டு நிறுவனத் திற்காக மனவளர்ச்சி பாதிக்கப் பட்டோருக்கான தியான அறையை அவர் வடிவமைத்தார். சிமெண்ட் பூசப்படாத செங்கற்கள், சுட்ட களிமண் ஓடுகளைக் கொண்ட கூரை, மூங்கில் பின்னலால் ஆன கூரையின் அடிப்பகுதி, பெரிய ஜன்னல்கள் என்ற அவரது தியான அறை வடிவமைப்பு பிரபலமாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் மேற்கொண்ட கட்டிடப் பணிகளில் வளைவான மூங்கில் பின்னலைக் கூரையாகப் பயன்படுத்தினார். ஆனால் புயல் தாக்கும் வாய்ப்புள்ள சுந்தரவனப் பகுதிகளில் வலுவான இரும்புக் கம்பிகளுக்கு இடையே மூங்கிலைச் செருகி கூரையைப் பலப்படுத்தி கட்டிடங்களை அமைத்தார். கட்டிடம் அமையும் இடத்தின் தேவைக்கேற்ப அதன் கூரையைத் தீர்மானிப்பதே போர்னியரின் வடிவமைப்புப் பாணி.

தற்போதைய மின்கட்டணத்தில் நாற்பது சதவீதம்வரை கட்டிட அமைப்புக்காகவே செலவாகிறது என்கிறார் லாரன்ட் போர்னியர். செங்கல், சிமெண்ட், கான்கிரீட், கண்ணாடி, இரும்பு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டுவதால் கட்டிடங்களால் சுவாசிக்கவே முடியவில்லை. காற்றோட்ட வசதி என்பதைக் காட்டிலும் கட்டிட உறுதி என்பதற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இயற்கையிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே மேலை நாடுகளின் கட்டிடப் பாணி உருவானது.

ஆனால் இந்தியா போன்ற மித வெப்ப நாடுகளில் பாரம்பரிய முறையில் அமைந்த கட்டிடங்களே இயற்கையான காற்றோட்ட வசதியை அளிக்கும் என்கிறார் போர்னியர். மேலும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. நச்சுப்பொருட்களால் கட்டிடத்தின் உரிமையாளர் பாதிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்படவே செய்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இயற்கையான மூலப் பொருட்களான மூங்கில், களிமண் ஆகியவற்றில் எந்த நச்சுத்தன்மையும் இல்லை. செலவும் குறைவு.

நகரங்களில் கான்கிரீட் கூரையை தவிர்க்க முடியாவிட்டாலும் கூரையின் அடிப்பகுதியில் மூங்கில் பின்னல்களைப் பயன்படுத்த முடியும். பின்னலின்மீது எலுமிச்சைச் சாறையும் தவிடையும் கலந்து பூசுவதன் மூலமாக அறையின் வெப்பத்தை விரட்டியடிக்க முடியும். லாரன்ட் போர்னியர் கொல்கத்தாவில் இருக்கும் தனது அபார்ட்மெண்ட் வீட்டில் இப்படித்தான் கூரைக்குக் கீழே ஒரு குளிர்சாதன வசதியை அமைத்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த லாரி பேக்கர் என்ற கட்டடக் கலைஞர் 1960களில் கேரளாவில் தங்கி, குறைவான செலவில் எளிமையான வீடுகளை அமைப்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். இப்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருக்கும் லாரன்ட் போர்னியரும் வங்கத்தில் அப்படியொரு புரட்சியை உருவாக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x