

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் தனி வீடுகள் கட்டுவதே வாடிக்கையாக இருந்தது. 1970-களின் ஆரம்பத்தில்தான் எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் நந்தனம் போன்ற மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் புதிய வடிவமாக அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகள் அறிமுகமாகின.
இப்படித்தான் சென்னை நகரின் வீட்டுக்கட்டுமானத் துறை தனி வீடுகள் கட்டுமானத்திலிருந்து நகர்ந்து அடுக்குமாடிகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நகர்புற நகரியங்களை (Townships) உருவாக்கத் தொடங்கின. வாயிற்கதவுகள் உள்ள சிறு நகர்புறக் குடியிருப்புத் தொகுதிகளில் வசிப்பது சென்னையைப் பொருத்தவரை அனைவரையும் கவரக்கூடிய அம்சமாக உள்ளது.
பெரிய பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தன்னிறைவான வாழ்க்கையை வாழ இயலக்கூடிய இடமாக நகரியங்கள் உள்ளன. சென்னை நகரின் மையத்தில் வாழ விரும்புபவர்களுக்கு வீட்டுமனை வாங்கக்கூடிய விலையில் இல்லை. நல்ல வீட்டுமனைகளுக்குத் தட்டுப்பாடும் நிலவுகிறது. இச்சூழ்நிலையில் வீட்டுக்கட்டுமான நிறுவனங்கள் புறநகர்ப் பகுதிகளில் பெரிய பரப்பளவிலான நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். கட்டிடவியல் வல்லுனர் மற்றும் நகர்புபறத் திட்ட நிபுணர்களைக் கொண்டு சகல வசதிகளையும் உள்ளடக்கிய நகரியங்களை உருவாக்குகின்றனர்.
ஒரு நகரியத்தில் வரிசை வீடுகள், மாடி வீடுகள், வில்லாக்கள் என பல வகைகளில் வீடுகள் அமைந்திருக்கும். வெறுமனே வீடுகளை உருவாக்குவதோடு மட்டுமின்றி குடியிருக்க வருபவர்களை ஈர்க்க ஆரோக்கியம், பொழுதுபோக்கு மற்றும் சமூக உறவுகளுக்கான உள்கட்டமைப்பையும் உருவாக்குவதில் கட்டுமான நிறுவனங்கள் முழுமூச்சில் திட்டமிடுகின்றன.
ஒருங்கிணைக்கப்பட்ட நகரியத்தின் ஒருபாதி உள்கட்டமைப்பைக் கட்டுமான நிறுவனமே ஏற்றுச் செய்யும். நகரியத்தின் உள்ளேயிருக்கும் சாலைகள், விளக்குகள், திறந்த வெளி மைதானங்கள் மற்றும் அலங்காரங்கள் அவர்களுடைய பொறுப்பு. வெளிப்புறமாக நகர்புறக் குடியிருப்புத் தொகுதியை இணைப்பதற்கான சாலைகள், தண்ணீர், மின் விநியோகம், கழிவுநீர் வடிகால் இணைப்புகள் போன்றவை அரசின் பொறுப்பாகும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மால்கள், கடைகள், கிளப்கள், சினிப்ளக்ஸ் ஆகிய வசதிகளைப் பொறுத்து வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஈர்க்கப்படுகின்றனர்.
நகரியத்தில் வீடு வாங்குபவர்கள், வேலைக்குச் செல்லும் அலுவலகத்தின் தொலைவை முக்கியமாகக் கவனிக்கின்றனர். ஷாப்பிங், மருத்துவ தேவைகள், கல்விக்கூடங்கள் அருகில் இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.
க்ளப் ஹவுஸ், ஜிம், நீச்சல் குளம், விளையாட்டுக் கூடங்கள், ஏடிஎம், சலவை வசதிகள், விருந்து அறைகள் மற்றும் காபி ஷாப்புகள் போன்ற வசதிகள் இருந்தால் தங்கள் வீடுகளுக்குக் கூடுதலாகப் பணத்தை முதலீடு செய்யவும் வீடுவாங்குவோர் தயாராகவுள்ளனர்.
நகரியத்தின் சிறப்பம்சங்கள்
# ஒரு பெரிய நிலப்பரப்பில் நிறைய வீட்டுத் தேர்வுகள்
# நல்ல உள்கட்டமைப்பு
# நிபுணத்துவமிக்க சொத்து நிர்வாகம்
# பெருநகர வாழ்க்கைச் சூழல்
# முதலீட்டின் மதிப்பு அதிகம்
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால், இந்தியாவின் பிற பெருநகரங்களிலிருந்து சென்னையை நோக்கி வரும் மக்களைப் பொறுத்தவரை அவர்களது முதலீட்டுக்கு அதிக லாபம் கொடுப்பவையாக வீட்டுச் சொத்துகள் உள்ளன. அத்துடன் வாடகைக்குக் குடியிருக்க வீடு தேடுவோரும் தனி வீடுகள் மற்றும் தனி அடுக்குமாடிக் கட்டிடங்களை விட நகர்ப்புறக் குடியிருப்புத் தொகுதிகளில் குடியிருப்பதையே அதிகம் விரும்புகின்றனர். கூடுதல் பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் அருமையான வாழ்க்கைத்தரம் இதுபோன்ற அம்சங்கள் நகரியத்தில் கிடைக்கிறது.
இதுபோன்ற குடியிருப்புத் தொகுதிகளில் வீடுகளை வாங்குபவர்களின் சொத்துகள் தொழில்பூர்வமான வல்லுநர்களின் கண்காணிப்பில் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் படுகின்றன. இதனால் நல்ல வாடகையும், மதிப்பு உயர்வும் சொத்துகளுக்குக் கிடைக்கிறது.
தற்போதைக்கு நகரியம் அதிகம் உருவாக்கப்படும் பகுதியாக பழைய மகாபலிபுரம் சாலையும், அண்ணா நகர் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளும், வடசென்னையில் பெரம்பூரும் உள்ளன.
இந்த நகரியம் உருவாக்கும் கட்டுமான நிறுவனங்களாக எம்பஸி, ஹிராநந்தனி, டிஎல்எப், ப்ரெஸ்டிஜ், கோத்ரேஜ், டாடா ஹவுசிங், ஒலிம்பியா, புரவாங்கரா மற்றும் ஓஷோன் போன்ற நிறுவனங்கள் விளங்குகின்றன. வீட்டின் அளவு, வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்து நகரியத்தின் முகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது.