செலவைக் குறைக்கும் மறுசுழற்சி

செலவைக் குறைக்கும் மறுசுழற்சி
Updated on
2 min read

உற்பத்தி செய்யப்படும் அளவுக்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்குக் கரியமில வாயுவை வெளிப்படுத்தும் பொருள்களில் ஒன்று சிமெண்ட். அதனால்தான் கட்டுமானங்களில் சிமெண்டின் பயன்பாட்டைக் கூடுமானவரை குறைக்க வேண்டும். அப்படிக் குறைத்தால் கட்டுமானச் செலவைக் குறைக்கலாம். ஆனால் இது எப்படிச் சாத்தியம்? சிமெண்ட்தானே கட்டுமானத்தின் மூலப்பொருள் என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு உங்களுக்கு கைகொடுக்கும் விஷயம்தான் மறுசுழற்சி.

வெப்பமயமாதலிலிருந்து பூமியைப் பாதுகாக்க இம்மாதிரியான மறுசுழற்சி முறை இப்போது எல்லாத் தயாரிப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கட்டிடத் துறையில் நாள்தோறும் அதிகரித்துவரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இம்மாதிரியான மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கட்டுமானப் பொருள் பயன்படுகின்றன. செங்கல், மணல் போன்ற எல்லா விதமான கட்டுமானப் பொருள்களுக்கும் மாற்று வந்தாகிவிட்டது.

ஜன்னலுக்கு மரபாக முன்பெல்லாம் மரம் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது இரும்பு, மூங்கில் எனப் பலவிதமான மாற்றுப் பொருள் வந்துவிட்டன. மணலுக்கு மாற்றாகக் கல் உடைக்கும் ஆலைகளின் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. செங்கல்லுக்கு மாற்றாக இரும்பும், சிமெண்டும் கலந்து செய்யப்படும் கற்கள், ப்ளாக் கற்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதேபோல் சிமெண்டின் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாகப் புதிய மாற்று யோசனை வந்திருக்கிறது.

நிலக்கரிச் சாம்பல், உமி சாம்பல், கரும்புச்சக்கை, முட்டை ஓடு போன்றவை சமையலறையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவாகவோ அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவாகவோ இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றை சிமெண்டுடன் கலந்து பயன்படுத்துவதன்மூலம் செலவைக் குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நெல் உமியைக் குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் எரிக்கும்போது கிடைக்கும் சாம்பலை சிமெண்டுக்கு மாற்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உலகில் அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு இந்தியா. நெல்லிருந்து கிடைக்கும் உமி தவிடாகப் பயன்படுத்தப்படுகிறது. உமியைப் பயன்படுத்துவதும் குறைவு. தற்போது நெல் உமியில் இருந்து கிடைக்கும் சாம்பலை சிமெண்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை சிமெண்டோடு கலப்பதன் மூலம், சிமெண்ட் பயன்படுத்தும்போது இயல்பாக ஏற்படும் துவாரங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் கம்பிகள் துருப்பிடிப்பதும் தவிர்க்கப்பட்டு, கட்டுமானத்தின் உறுதித் தன்மை கூடுகிறது. நமது உள்ளூர் சேர்க்கை நெல் உமி சாம்பல் கொண்டு சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்டாக (ஓபிசி) மாற்றிப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மாற்றத்தால் கான்கிரீட் சூப்பர் போசோலானியாக வருவதைக் கண்டனர்.

கான்கிரீட் அமைப்பதற்கு சிமெண்டைப் போன்றே மணலும் அவசியமானது. ஆற்று மணலைப் பயன்படுத்துவதற்கு பணச் செலவும் அதிகம். அதனால் ஏற்படும் சுற்றுப்புறக் கேடுகளும் அதிகம். கான்கிரீட் அமைப்பதில் ஆற்று மணலின் தேவையைப் பாதி அளவுக்கு பூர்த்தி செய்கிறது, அனல் மின் நிலையங்களிலிருந்து வெளிப்படும் சாம்பலும், தாமிரக் கழிவு, கிரானைட் கழிவு, மரத்துண்டுகள் போன்றவை. இதனால் பொதுவாக ஆற்று மணலைக் கொண்டு 100 க.மீ. கான்கிரீட் அமைப்பதற்கு ஆகும் செலவைவிட, 27 ஆயிரம் ரூபாய்வரை மிச்சமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

செராமிக்ஸ், கிரானைட் கற்கள், மரத்தண்டுகல், டயர், பழைய கற்கள் இவற்றிலிருந்தும் ஜல்லிகளுக்கான மாற்று ஏற்பாட்டைச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லியின் பயன்பாட்டுக்குச் செலவிடும் தொகையில் பாதியை மிச்சப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

சூலைகளில் தயாராகும் செங்கல்லுக்கு மாற்றாக ஃப்ளை ஆஷ் செங்கல்லைப் பயன்படுத்துவதன்மூலம் கணிசமாகக் கட்டுமானச் செலவைக் குறைக்க முடியும் என்கின்றனர். இதுபோன்ற சில வழிமுறைகளைச் செயல்படுத்துவன் மூலம் கட்டுமானங்களில் பெரிய அளவில் செலவைக் குறைக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in