Last Updated : 28 Jun, 2014 10:23 AM

 

Published : 28 Jun 2014 10:23 AM
Last Updated : 28 Jun 2014 10:23 AM

கட்டுமானச் செங்கல்லை மாற்றலாமே

எவ்வளவு விலை கொடுத்தும் செங்கற்களையே வாங்கிப் பயன்படுத்திப் பழகிவிட்டோம். இதை விடுத்து மாற்றுச் செங்கற்களையும் பயன்படுத்த முயலலாம். மாற்றுச் செங்கற்களை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது ஏன் பயன்படுத்த வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயல்பு. வழக்கமான செங்கற்களின் தயாரிப்பு காரணமாக வளமான நிலம் பாழ்படுகிறது, இதைத் தயாரிக்க அதிக ஆற்றலும் தேவைப்படுகிறது. இத்தகைய காரணங்களால் மாற்றுச் செங்கற்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. நம்மிடம் சில மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செங்கற்களின் பயன்பாடு குறையும். செங்கல் உற்பத்தியாளர்களும் இந்த மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்க வேண்டும். இதன் மூலம் செங்கல் உற்பத்தியாளர்கள் உற்பத்தியையும் லாபத்தையும் மேம்படுத்த முடியும். இதனால் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை மாற்றுச் செங்கற்களாகப் பாவிக்கப்படுகின்றன.

இத்தகைய மாற்று செங்கற்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும், இவற்றுக்கான மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதே. அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களிலிருந்தே இவற்றைத் தயாரிக்க முடியும். இந்த மாற்றுச் செங்கற்கள் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்காது.

இத்தனை அனுகூலங்கள் இருப்பினும் அதிகமாக மாற்றுச் செங்கற்கள் பயன்படுத்தப்படாததன் காரணம் நமது மனநிலையே. மாற்றுச் செங்கல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே நாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த தயங்குகிறோம். இந்த மனநிலையைப் போக்க அரசு முயல வேண்டும். அரசுக் கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். மாற்றுச் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.

இதே போல் செங்கல் உற்பத்தியாளர்கள் ப்ளை ஆஷ் செங்கற்களை உற்பத்தி செய்ய முன்வரும்போது அவர்களுக்கும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யலாம். இத்தகைய நடவடிக்கைகள் ப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும், அவர்களின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும். ஏனெனில் ஏற்கனவே பில்டிங் ப்ளாக்ஸ் உருவாக்குவதில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு முன் அனுபவமும் அவற்றை உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பும் உள்ளன.

செங்கல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்று தொழில்வாய்ப்பாகவும் இது அமையும். மழைக்காலங்களிலும் செங்கல் உற்பத்தி அதிகமாக இராத காலங்களில் மாற்றுச் செங்கள் உற்பத்தியில் அவர்கள் ஈடுபட இயலும். சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு விரைவில் அதிகரித்து செங்கல் உற்பத்திக்கு வளமிக்க விவசாய நிலத்தைப் பாழ்படுத்தக் கூடாது என்பது விதியாக அமலாக்கப்படலாம். அப்போது மாற்றுச் செங்கற்களே கைகொடுக்கக்கூடும். மேலும் செமி ஸ்கில்டு தொழிலாளர்கள் எனச் சொல்லப்படும் குறைந்த திறன் தொழிலாளர்களைக் கொண்டே மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்கலாம். இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தி மாற்றுச் செங்கல் உற்பத்தியைக் கூட்டலாம்.

கான்கிரீட் கேவிட்டி, கான்கிரீட் சாலிட் ப்ளாக்ஸ்

பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் கான்கிரீட் கேவிட்டி ப்ளாக்குகளும் கான்கிரீட் சாலிட் ப்ளாக்குகளும் அதிகமாகப் பயன்படுகின்றன. இத்தகைய பெரு நகரங்களில் செங்கற்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுநர்கள் கான்கிரீட் ப்ளாக்குகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இத்தகு நகரங்களில் செங்கல் தயாரிக்கத் தேவைப்படும் தரமான களிமண் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம். கல் குவாரிகளில் கிடைக்கும் கழிவான கற்களே கான்கிரீட் ப்ளாக்குகளின் தயாரிப்புக்குப் போதுமானவை.

மாற்றுச் செங்கற்கள் பயன்பாட்டை அதிகரித்தல்

கட்டுமானத் துறையில் ஈடுபடும் பொறியாளர்களும் கட்டுநர்களும் ஆலோசகர்களும் மாற்றுச் செங்கற்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே கான்கிரீட் ப்ளாக்குகளை காம்பவுண்ட் சுவர்களுக்கும், தற்காலிகக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்தும் போக்கு பரவலாக உள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியுள்ளது.

சில தொழிற்சாலைக் கட்டிடங்கலுக்கும் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு இத்தகைய கான்கிரீட் ப்ளாக்குகளை உபயோகிக்கிறார்கள். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வணிக வளாகங்களின் கட்டுமானத்திலும் அதிக எடையைத் தாங்கும் தேவையில்லாத இடங்களில் கான்கிரீட் ப்ளாக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் இவை சுற்றுச்சூழலுக்கும் உகந்தவையாகவே உள்ளன. கட்டுமானச் செலவும் குறையும். வழக்கமான செங்கற்களாலான கட்டிடமே உறுதியானவை என்னும் பழமைவாத எண்ணத்திலிருந்து விடுபட்டு எங்கெல்லாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்தும் புதுமை எண்ணம் அனைவரிடம் உருவாக வேண்டும். அரசும் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவதை ஊக்கவிக்க வரிச்சலுகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x