வாசகர் பக்கம்: ஆரோக்கியத்துக்குச் செடி வளர்ப்போம்

வாசகர் பக்கம்: ஆரோக்கியத்துக்குச் செடி வளர்ப்போம்
Updated on
1 min read

தலைவலி, இருமல் போன்ற சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட மருந்தகம் சென்று மாத்திரைகளை வாங்கி விழுங்கி வருகிறோம். இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் உணர்வதில்லை. ஆனால் நமக்கு முந்தைய தலைமுறையினர் வீட்டின் கொல்லையில் கிடைக்கும் குப்பைமேனி, துளசி போன்ற செடிகளையே மருந்தாகப் பயன்படுத்தினர்.

இன்றைய கால கட்டத்தில் அழகுக்காக மட்டும் நாம் செடிகளை வளர்ப்பதற்குப் பதிலாக ஆரோக்கியத்திற்காகவும் வளர்க்கலாம். குறிப்பாக துளசி மிக முக்கியமான மூலிகைச்செடி. கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, தூதுவளை, கற்றாழை, வெற்றிலைக்கொடி, ஆடாதொடா, தவசிக்கீரை, பசலைகீரைக்கொடி, அக்கிரகாரம், முறிகூட்டி எனத் தொட்டியிலேயே ஏராளமான செடிகளை வளர்க்கலாம்.

துளசி, சளி போன்ற பிரச்சினைகளுக்கும், திருநீற்றுப்பச்சிலை, ஆடாதோடா இருமலுக்கும், சளித் தொந்தரவுக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது. கற்றாழை மருத்துவத்திற்கு அளவே இல்லை. அக்கிரகாரம் வேர், பூ, இலை எதாவது ஒன்றை மென்று முழுங்கப் பல் சொத்தை, தொண்டை அலர்ஜி நீங்கும். முறிகூட்டி இலையை அரைத்துக் காயத்திற்கு மேல் பூசினால் உடனடியாகக் குணமடையும்.

அழகுக்காக மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்ப்பதைவிட வெற்றிலைக் கொடியை வளர்த்துவர மருத்துவ குணமிக்க வெற்றிலையைப் பெறலாம். தூதுவளையின் மருத்துவ குணம் மிக அற்புதமானது. தற்போது பெரும்பாலான மக்கள் தைராய்டு நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். தூதுவளையைச் சட்டினியாகவோ ரசத்திலோ பயன்படுத்திவர தைராய்டு பிரச்சனையே வராது.

என்னுடைய வீட்டில் அனைத்து மூலிகைச் செடிகளையும் தொட்டியிலேயே வளர்த்துவருகிறேன். நீங்களும் முயன்று பார்க்கலாமே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in