

உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படாத சீனக் களிமண் தேநீர் கோப்பைகள், தட்டுகள், ஜாடிகள் போன்றவற்றை வைத்திருக்கிறீர்களா? இந்தத் தட்டுகளையும், கோப்பைகளையும் பல புதுமையான வழிகளில் உங்களால் பயன்படுத்த முடியும். பார்ப்பதற்குக் கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் இருப்பதால் இவற்றை எளிமையாக வீட்டின் அலங்காரப் பொருட்களாக மாற்ற முடியும். இதனால், பயன்படுத்தாமல் வைத்திருந்த இந்தப் பொருட்களைத் தினசரி நீங்கள் பயன்படுத்தலாம்.
அப்படியில்லாவிட்டால், பழைய பாரம்பரிய பொருட்களை விற்கும் கடைகளில் ஒரு பழைய சீன களிமண் தேநீர் கோப்பை செட்டையும், அழகான வண்ணங்களில் கிடைக்கும் தட்டுக்களையும் வாங்கிக்கொள்ளுங்கள்.
நகை ஸ்டாண்ட்
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் நகைகளுக்காகச் சீன களிமண் தட்டுகளை வைத்து அழகான ஒரு நகை ஸ்டாண்டை உருவாக்க முடியும். அழகான வடிவமைப்புடன் இருக்கும் ஒரு தேநீர் கோப்பை, வெவ்வேறு அளவில் மூன்று தட்டுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ‘மூன்று அடுக்கு கேக் ஸ்டாண்ட்’ (3-tiered cake stand hardware) கம்பிகள், ஒரு துளைக்கருவியை(hand - driller), ‘மாஸ்கிங் டேப்’ (Masking tape) போன்ற பொருட்களை கடையில் வாங்கிக்கொள்ளுங்கள்.
தட்டுகள் மற்றும் கோப்பைகளில் ஓட்டைப்போட வேண்டிய இடத்தின் மீது டேப்பை ஓட்டுங்கள். துளை போட வேண்டிய நடுப்பகுதியை பென்சிலால் குறித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு, பொறுமையாகத் துளை போடுங்கள். அப்படியில்லாவிட்டால், தட்டுகள் உடைந்துவிடும். துளை போட்டு முடித்தவுடன், பெரிய தட்டு, சிறிய தட்டு என அளவுபடி கேக் ஸ்டாண்டில் பொருத்துங்கள். உச்சியில் தேநீர் கோப்பையைப் பொருத்துங்கள். அவ்வளவுதான், ஒரு கலை நயமிக்க நகை ஸ்டாண்ட் தயாராகிவிட்டது.
கோப்பைச் செடிகள்
பயன்படுத்தப்படாத தேநீர் கோப்பைகளில் அழகான ‘பட்டன் ரோஸ்’ செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம். தேநீர் கோப்பையில் பின்புறம், ஒரு சிறிய துளை போட்டுவிட்டு, இதைத் தொட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தேநீர் கோப்பைச் செடிகளை ஒரு மேசைமீது ஜன்னலுக்கு அருகில் வையுங்கள். இதனால், எளிமையாக ஒரு சமையலறைத் தோட்டத்தையே உங்களால் உருவாக்கிவிட முடியும்.
மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்
விதவிதமான தேநீர் கோப்பைகளை ஒரு தட்டில் வைத்து, அதில் அலங்கார மெழுகுவர்த்திகளை ஏற்றிவையுங்கள். இதனால், தனியாக ஒரு மெழுவர்த்தி ஸ்டாண்ட் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
அலமாரி அலங்காரம்
இந்தச் சீன களிமண் தட்டுகள், தேநீர் கோப்பைகளை அலமாரிகளில் புதுமையான முறையில் அடுக்கி வைக்கலாம். அவற்றுடன், கண்ணாடிப் பொருட்களையும் சேர்த்து அடுக்கலாம். இப்படி அடுக்குவதால் வீட்டுக்கு ஒரு காட்டேஜ் தோற்றம் கிடைக்கும்.
சுவர் அலங்காரம்
ஒரு சீன களிமண் தட்டு உடைந்துவிட்டதா? அதைச் சமையலறை சுவரில் ஒரு கலவையான வடிவமைப்பில் ஒட்டிவிடுங்கள். அதே மாதிரி ஒரு கப் உடைந்துவிட்டாலும், அதைச் சமையலறை சுவற்றில் ஒட்டிவிடுங்கள். அதில் சின்ன ஸ்பூண், கரண்டி போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம்.
உடையாத தட்டுகளை வைத்து இன்னும் முழுமையான, அழகான ஒரு சுவர் அலங்காரத்தைச் செய்யமுடியும். விதவிதமான வடிவமைப்புகளில் கிடைக்கும் தட்டுகளை இந்த அலங்காரத்தைச் செய்யலாம். ‘ஹேங்க் அண்ட் லெவல்’(Hang and level tool) என்னும் கருவி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கிடைக்கின்றன. இவற்றை வைத்து இந்த சுவர் தட்டு அலங்காரத்தை எளிமையாகச் செய்யலாம். ஆனால், தட்டுகளின் வண்ணங்களைச் சுவருக்கும், அறைக்கலன்களுக்கும் பொருந்துமாறு தேர்ந்தெடுக்கவும்.