

நீண்ட கோடைக் காலம் கடந்து ஒருவழியாக மழைக் காலம் தொடங்கிவிட்டது. மழைக் காலம் தொடங்கியது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மழைக் காலம் என்றால் வீட்டுக்குள் கிருமிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் இந்தக் கால கட்டங்களில் நீங்கள் கொஞ்சம் கவனமாக வீட்டைப் பராமரிக்கவில்லை என்றால் உங்கள் வீடு கிருமிகளின் புகலிடமாக மாறிவிடும். பொதுவாக வீட்டைச் சுத்தம்செய்வது அவசியமானதுதான். அதுவும் மழைக் காலத்தில் வீட்டைத் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
அழுக்குத் துணிகள் அதிக நாளுக்குச் சேர்த்து வைக்கக் கூடாது. அதில் பூஞ்சை படிந்துவிடும். குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். மேலும் சலவை இயந்திரத்தையும் வழக்கமாகச் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கும். மேலும் போர்வை, துண்டு ஆகியவற்றை அதிக நாளுக்கு உபயோகிக்கக் கூடாது.
அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது சலவைசெய்து வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள். அலமாரி, கதவுகளில் மழைக் காலத்தில் பூஞ்சைகள் படியும். அதைக் கவனிக்காமல் விட்டால் அது மரக் கதவுகளின் ஆயுளைக் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் அதைத் துடைத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
அதுபோல சமையலறை, குளியலறை போன்ற தண்ணீர் புழங்கும் இடங்களில்தான் கிருமிகள் அதிக அளவில் உருவாகும் அந்த இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக் காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். அப்போது தான் உங்கள் வீட்டில் ஆரோக்கியம் சுகந்தமாக வீசும்.