வளமும் வசந்தமும் தரும் சாளரங்கள்

வளமும் வசந்தமும் தரும் சாளரங்கள்
Updated on
2 min read

வீட்டுக்கு வெளிச்சமும் காற்றும் தரும் ஜன்னல்கள் வீட்டின் தோற்றத்தை அழகுபடுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு வீட்டின் ஜன்னல்கள் வசீகரமானவையாக அமைந்துவிட்டால் அந்த வீட்டின் ஒட்டுமொத்த அழகும் ஒருபடி மேலே சென்றுவிடும். எந்த அறைக்கான ஜன்னல் என்பதைப் பொறுத்து பல வகையான ஜன்னல்களை வீடுகளில் அமைக்கலாம்.

வரவேற்பறையில் அமைப்பதைப் போன்ற ஜன்னலை நாம் சமையலறையில் அமைப்பதில்லை. சமையலறை ஜன்னலுக்கும் படுக்கையறை ஜன்னலுக்கும் அமைப்பிலும் வடிவத்திலும் வித்தியாசம் இருக்கும். ஏனெனில் ஒவ்வோர் அறையின் பயன்பாட்டையும் பொறுத்து விதவிதமாக ஜன்னல் அமைக்கப்படுகிறது. அவற்றில் சில:

இரட்டைத் தொங்கல் (Double-Hung) ஜன்னல்

ஜன்னலில் சட்டத்தில் செங்குத்தாக மேலும் கீழும் நகரும் வகையில் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த வகை ஜன்னல்கள். இவை சட்டத்துக்குள்ளேயே நகர்வதால் வீட்டுக்கு உள்புறத்திலோ வெளிப்புறத்திலோ நீட்டிக்கொண்டு இருக்காது. இரண்டு பாகங்களில் ஒரு பாகம் மட்டும் அதாவது கீழ்ப் பாகம் மட்டும் நகரும் வகையில் மேல் பாகம் நிலையாக அப்படியே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டால் அது ஒற்றைத் தொங்கல் (single-hung) ஜன்னல் எனப்படுகிறது. இதை சமையலறையில் அமைக்கலாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

காட்சி ஜன்னல்

காட்சி ஜன்னல் நிலையாக இருக்கும், திறந்து மூட இயலாது. வெளிச்சம் அதிகம் வர வாய்ப்பு உண்டு. வெளிப்புறக் காட்சிகளைப் பார்க்கும் வகையில் அமைக்கப்படும் ஜன்னல் வகை இது. புற அழகைத் தரிசிக்க விரும்பும் இடங்களில் இந்த ஜன்னலை அமைப்பதன் மூலம் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம்.

வாசல்படி நிலை ஜன்னல்

பொதுவாக இந்த ஜன்னலைக் கதவுக்கு மேலே அல்லது ஜன்னலுக்கு மேலே அமைக்கிறார்கள். வெளிச்சம் அல்லது காற்று வழக்கத்தைவிட அதிகமாகத் தேவை எனக் கருதினால் ஜன்னல் கதவைத் திறந்துகொள்ளலாம், இல்லை எனில் மூடி வைத்துக்கொள்ளலாம்.

பக்கவாட்டில் நகரும் ஜன்னல்

தண்டவாளம் ஒன்றில் பக்கவாட்டில் நகரும் வகையில் இவை அமைக்கப்படும். இந்த ஜன்னலும் இடத்தை அதிகமாக அடைத்துக்கொள்ளாது. ஏனெனில் ஜன்னலைத் திறந்தால்கூட அது பக்கவாட்டில் தண்டவாளத்தில் நகர்ந்து காற்றையும் வெளிச்சத்தையும் அனுமதிக்கும். இது கொஞ்சம் நவீனமான வீடுகளில் பொருத்தப்படுகிறது.

வில் வடிவ ஜன்னல்

அறையின் உள்புறத்தில் அதிக இடம் தேவைப்படும் எனில் இந்த ஜன்னலை அமைத்துவிடுவார்கள். இது சுவரிலிருந்து வெளிப்புறத்தில் வளைந்து இருக்குமாறு அமைக்கப்படும். ஆகவே வெளிப்புற இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு உள்பகுதிக்கு அதிக இடத்தை வழங்கும். இது பொதுவாக நிலையான ஜன்னல், இரட்டைத் தொங்கல் ஜன்னல் போன்றவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in