சாதனை படைத்த சாஹா!

சாதனை படைத்த சாஹா!
Updated on
1 min read

பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் தங்களின் தனித்துவத்தால் மாபெரும் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். பெருமளவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் கட்டிடக் கலையிலும் அவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.

அவர்களுள் ஒருவர்தான் சாஹா ஹதீத். தன் சிறப்பான செயல்கள் மூலம் கட்டிடக் கலைத் துறையில் இன்று பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார். பிரிட்டன் நாட்டில் வாழும் இவர், அந்நாட்டில் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 'ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரிட்டன் ஆர்கிடெக்ட்ஸ்' அமைப்பின் 2016-ம் ஆண்டுக்கான தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அந்த அமைப்பின் 167 ஆண்டு கால வரலாற்றில், இந்தப் பதக்கத்தை வெல்லும் முதல் பெண் கட்டிடக் கலைஞர் இவர்தான்.1950-ம் ஆண்டு பாக்தாத்தில் பிறந்த சாஹா 1972-ம் ஆண்டு, லண்டனில் உள்ள ஆர்கிடெக்சர் அசோஸியேஷனில் தனது கட்டிடக் கலை கல்வியைக் கற்றார். 1979-ம் ஆண்டு 'சாஹா ஹதீத் கட்டிடக் கலை நிறுவன'த்தைத் தொடங்கினார்.

ஹாங்காங்கில் உள்ள 'தி பீக்' (1983), ஜெர்மனியில் உள்ள 'விட்ரா ஃபயர் ஸ்டேஷன்' (1993), வேல்ஸ் பகுதியில் உள்ள 'கார்டிஃப் பே ஓபெரா ஹவுஸ்' (1994), ரோம் நகரத்தில் உள்ள 'மாக்ஸி இத்தாலிய தேசிய அருங்காட்சியகம்' (2009), 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட 'லண்டன் அக்வாடிக் சென்டர்' (2011), அசெர்பைஜான் நாட்டில் உள்ள 'ஹேதார் அலியேவ் சென்டர்' (2013) போன்ற உலகத்தின் புகழ்பெற்ற கட்டிடங்கள் எல்லாம் இவரின் கைவண்ணத்தில் உருவானவையே.

இந்தச் சாதனைகளுக்காக 2004-ம் ஆண்டு 'ப்ரிட்ஸ்கர் ஆர்கிடெக்சர் ப்ரைஸ்' எனும் விருதை வென்றார். இந்த விருதைப் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர 2012-ம் ஆண்டு, இங்கிலாந்தில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்த பெண்களுக்கு வழங்கப்படும் ‘டேம்' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கடந்த 24-ம் தேதி இவருக்கு ராயல் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருது இங்கிலாந்து அரசியின் அங்கீகாரம் பெற்றதாகும்.

இந்த விருது விழாவில் அவர் பேசும்போது, “இந்த விருதுக்காக நான் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று இந்தத் துறையில் பெண்கள் பலர் வந்துள்ளனர். எனவே, இந்தத் துறை மிகவும் சுலபமான துறை என்று எண்ணிவிடக் கூடாது.

காலம் காலமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறி வந்திருக்கிறோம். இது என்னுடைய பணிக்காக மட்டுமல்ல, நம்மை நோக்கி வரும் வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்துதான் வழங்கப்பட்டிருக்கிறது.

வீடு, பள்ளி, அலுவலகம் என எந்த இடமானாலும் மக்களைத் தங்களின் இடத்தில் மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் ஒரு கட்டிடக் கலைஞருக்குப் பெரும்பங்கு உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in