பால்கனிகள் எனும் பரவசம்

பால்கனிகள் எனும் பரவசம்
Updated on
1 min read

ஒரு வீட்டின் அனைத்துப் பாகங்களும் கட்டியவருக்கு நிம்மதியளிப்பவையே. ஆனாலும் அதில் சில பாகங்கள் தனிப்பட்ட ஆசுவாசத்தைத் தரும். அவற்றில் ஒன்று பால்கனி. பால்கனியில் நாம் எப்போதும் இருக்க மாட்டோம். ஆனால் நமது மனம் ஆசுவாசம் தேடும் நேரங்களில் எல்லாம் நாம் பால்கனிக்கு வருவதை வழக்கமாக வைத்திருப்போம். தாய் மடி போல் ஆறுதல் அளிக்கவல்லது பால்கனி. ஒரு பால்கனியில் நிற்கும்போது நாம் அடைபட்ட வீட்டுக்குள் இருப்பது போன்ற நினைவு எழாது. ஏனெனில் நம் கண்ணெதிரே இயற்கை தன் அழகைக் காட்டி நிற்கும். கண்களுக்குள் அடங்காத பிரபஞ்சம் தன் முகம் காட்டி சிரிக்கும் அழகை நமக்கு அள்ளி வழங்குவது நமது பால்கனி.

நமது வீட்டின் வசதிக்குத் தகுந்த அளவில் நமது பால்கனியை அமைத்துக்கொள்ளலாம். பால்கனியில் நண்பர்களுடன் அமர்ந்து அளாவளாவ வசதியாக சில நாற்காலிகளைப் போடும் அளவுக்கு இடம்விட்டுக்கொள்வது நல்லது. தேவைப்படும்போது நாற்காலிகளைப் போட்டுவிட்டு அவசியமற்ற நேரத்தில் அவற்றை எடுத்துவிடலாம். அழகான பால்கனி கட்டி அதிலே துணிமணிகளைக் காயப்போடும் வழக்கத்தைக் கைக்கொள்ளக் கூடாது. நமது பால்கனியின் அழகையே அது கெடுத்துவிடும். துணிமணிகள் காயப்போடுவதற்காக பால்கனி கட்ட வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பால்கனியில் பசுமைச் செடிகளை வளர்க்கலாம். சிறிய தொட்டிகளில் பூச்செடிகளை வைத்து அவற்றைப் பால்கனியில் வளர்க்கும்போது பால்கனிக்கு பசுமைச் சூழல் கிடைக்கும். அழகிய மலர்கள் மலர்ந்த நிலையில் இருக்கும் செடிகளுடன் பால்கனியைப் பார்ப்பதே தனி அழகு. பால்கனியின் சுவர்களில் அலங்காரமான பசுமைக் கொடிகளைப் படரவிடலாம். வெற்றுச் சுவர்களில் படர்ந்து நிற்கும் பசுமைக் கொடிகள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

பால்கனியில் இரவு நேரங்களில் நாற்காலி போட்டமர்ந்து புத்தகங்களை வாசிக்கலாம். அதற்குத் தகுந்தாற்போல் விளக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் புத்தகங்களை வாசிக்க அமைதியான சூழலை பால்கனி நமக்கு வழங்கும். வேறு யாருக்கும் எந்தத் தொந்தரவுமின்றி நிம்மதியாக வாசிக்க பால்கனி உதவும். வெறுமனே வாசிப்பதற்கு மட்டுமன்றி ஏதேனும் எழுத நேரும்போது அதற்கும் பால்கனியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உள்ள வீட்டில் பால்கனி என்பது மிகவும் விரும்பத்தக்க இடமாக இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

பால்கனியின் பயன்பாட்டைச் சொல்லிக்கொண்டே போகலாம். வெறும் பத்துக்கு எட்டு என்று அமைத்தால்கூட அந்த எண்பதடி இடம் தரும் ஆசுவாசத்துக்கு அளவே கிடையாது. பால்கனி என்பது வீட்டின் அழகைக் கூட்டும் அம்சம் என்றாலும்கூட அதற்கு மட்டுமே அது பயன்படும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் வீட்டின் பாகங்களில் ஒன்று பால்கனி என்பது அனுபவம் தரும் பாடம்.

காலையில் சூரியனைத் தரிசிக்கலாம் இரவில் நிலவைப் பார்க்கலாம் பகலில் பரந்தவெளியைக் கண்களில் இருந்து நிம்மதி காணலாம். இப்படிப் பல வசதிகள் கொண்ட பால்கனியை விருப்பம்போல் அமைத்து இன்புறுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in