கட்டுமானத்தைக் கண்காணிக்கலாமே!

கட்டுமானத்தைக் கண்காணிக்கலாமே!
Updated on
1 min read

வாழ்க்கையில் சொந்த வீடு கனவை அடைவது என்றால் அது பெரிய விஷயம்தான். நில மதிப்பும், கட்டுமானச் செலவும் எகிறிவிட்ட இந்தக் காலத்தில் வீடு கட்டுவது என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சொந்த வீடு கட்டுபவர்கள் அங்கே. இங்கே என கடனை வாங்கி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கட்டி முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

அதைவிட பெரிய வேலை, கட்டுமானப் பணியைக் கண்காணிப்பது, தரமான வீட்டைத்தான் கட்டுகிறோம் என்பதை நீங்கள் அடிக்கடி சோதித்து பார்த்தாவது தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு கட்டுமானப் பணியின்போது நம் தலையீடும் கண்காணிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும். இது நம் வீட்டின் தரத்தை அதிகரிக்கவும் அறியவும் நிச்சயம் உதவும். எப்படியெல்லாம் தரத்தை அதிகரிக்கலாம்?

வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், வர்ணம் என ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் உங்கள் ஆலோசனையும் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.

பலரும் தரமான கட்டுமானப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கட்டுமானக் கலவையில் கலக்கப்படும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்புள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல அரிமானத்துக்கு உள்ளாகும்.

எனவே குடிக்கும் நீரில் வீடு கட்ட வேண்டுமா என நினைக்க வேண்டாம். அதிகம் உப்பு கலக்காத தண்ணீராக இருப்பது அவசியம். கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பரிசோதனை செய்து பார்த்து அது கட்டுமானத்துக்கு உகந்ததா எனப் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

கட்டுநர்கள் கட்டுமானப் பொருள் வாங்க ஒவ்வொரு வர்த்தக நிறுவனத்தைத் தேர்வு செய்து வைத்திருப்பார்கள். எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி தரம் முக்கியம். எனவே வாங்கும் பொருட்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் சிமெண்டால்தான் அதை உறுதி செய்ய முடியும். சிமெண்ட் தரமாக இருக்க வேண்டும். தரமான சிமெண்ட் தானா என்பதை அதன் நிறத்தைப் பார்த்தே ஓரளவு ஊகித்துவிடலாம். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட் என்கிறார்கள் கட்டுநர்கள்.

மூட்டை மூட்டையாக சிமெண்ட் வாங்கும்போது, ரேண்டமாக மூட்டைகளின் அளவீடுகளைச் சரிபார்க்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை முன்பின் இருந்தால் அனுமதிக்கலாம். அதற்கு மேல் வேறுபாடு இருந்தால், விசாரிப்பும் கண்காணிப்பும் அதிகம் தேவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in