

திருச்சியில் நாங்கள் வசிக்கும் பகுதி மிகவும் வெப்பமான பகுதி. கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிவிட்டு இயற்கை எழில் சூழ்ந்த என் தோட்டத்தில் ஆசுவாசமாக நாற்காலி போட்டு அமர்ந்து விடுவேன். எங்கள் தோட்டத்தில் மல்லிச் செடியை பந்தலில் படரவிட்டுள்ளோம். இது ஒரு பசுமைத் தோரணம். இதற்குள் சூரிய ஒளி உள்ளே விழுவது இல்லை. அந்த அளவு அடர்த்தியானது. வெப்பமும் தெரிவது இல்லை. உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் இதம் தரும்அனுபவம் இது.
பறவைகளின் இசை
இந்த இடத்தில் அருகே உள்ள மாமரத்தில் பல விதமான பறவைகள் அமர்ந்து பரப்பும் இனிய இசையை கேட்டுக்கொண்டே இருப்பேன். வண்ணத்துப்பூச்சிகளும் பெரும்பாலான இடங்களில் எளிதில் காணக் கிடைக்காத சிட்டு குருவிகள்கூட மரத்தில் அமர்ந்து பொழுதை இனிமையாக்கும். அவை எழுப்பும் ஓசைகள் காதுக்கு இனிமையாக இருப்பதோடு மன அமைதியையும் பரவசத்தையும் எனக்குத் தினந்தோறும் வழங்கும். இதனால் வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய மன வாட்டம் அறவே நீங்கி விடும். வெளியூர் சென்றால்கூட இந்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறும் நேரம் எனது நினைவுக்கு வந்து ஏக்கத்தைத் தூண்டும். அதன் காரணமாக நான் வெளியூர்களில் அதிகமாகத் தங்குவது கிடையாது.
எனது அண்டை வீட்டில் இருப்பவர்கள்கூட இந்த இடத்தை ஆச்சிரியத்துடன் பார்த்து அவ்விடத்தில் அமர்ந்து என்னுடன் உரையாடி இளைப்பாறிச் செல்வார்கள். இது எங்களுக்குப் பொழுது போக்குவதற்கான இடம் மட்டுமல்ல. உலக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மிகவும் பயனுள்ள இடமாக மாறிவிட்டது. மேலும் மாலை வேளைகளில் புத்தகம் மற்றும் செய்தித் தாள்களை படித்துப் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் இடமாகவும் மாறிவிட்டது. அதே போன்று எங்கள் வீட்டின் பின் பகுதியில் வாழைக் கன்றுகளையும் பல்வேறு மரங்களையும் வளர்த்து வருகிறேன்.
மகத்தான கனவு
நான் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வழிந்து வரும் நீரைச் சேத படுத்தாமல் அதன் மேலிருந்து ஊற்றும் இடத்திற்குக் கீழே ரஸ்தாலி வாழைக் கன்றை நட்டுள்ளேன். அவை இப்போது குழை தள்ளி விட்டன. அவை எங்களைக் குதூகலிக்க வைக்கின்றன. விசேஷக் காலங்களிலும் உறவினரின் வருகையின் போதும் விருந்துக்குத் தேவைப்படும் வாழை இலைகளை வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்திலிருந்து எடுத்துக் கொள்கிறோம். இதனால் எங்களுக்குப் பொருளாதாரப் பயன்பாடும் ஏற்படுகிறது. எங்கள் வீட்டைச் சுற்றி மரம் செழித்துள்ளதால் இயற்கைச் சூழல் எங்களை இதமாக்குகிறது. வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.
இதனால் காற்றுச் சீரமைப்பியின் (Air-conditioner) பயன்பாடு குறைந்து உள்ளது. இந்த வகையில் மின்சாரச் சிக்கனம் ஏற்பட்டுப் பொருளாதாரத்தையும் சேமிக்கிறோம். இவ்வாறு இந்தச் சிறிய தோட்டம் அரும்பெரும் பயன்களைத் தருவதோடு அக்கம் பக்கத்தினரையும் ஆவலோடு காண வழி வகை செய்கிறது. இதனால் இந்தச் சிறிய தோட்டம் எங்களுக்கு மிகுந்த மன அமைதியைத் தருகிறது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறிய மரம் வளர்க்கும் மகத்தான கனவை நாங்கள் நிறைவேற்றியதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.
முன் மாதிரித் தோட்டம்
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மூலையில் ஒரு பெரிய குழி வெட்டி, அதில் வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளைப் போட்டு மக்கச் செய்து இயற்கை எருவாக்கி அதனைத் தோட்டத்திற்கு உரமாகப் பயன்படுத்துகிறோம். இதனால் சுற்றுச்சூழலைச் சேதபடுத்தாமல் பேண முடிகிறது.
எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்களும் எங்களின் இந்த இதமான தோட்டத்தினை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு எங்களிடம் வாழைக் கன்றுகளைப் பெற்று அவர்களது இல்லத்திலும் இதே போன்று பராமரிப்பதாய்க் கூறுகின்றனர். இதனால் நாங்கள் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதற்காகப் பெருமைப்படுகிறோம்.
நான் குழந்தைகளின் விடுமுறைக்குத் தாய் வீடு இருக்கும் கல்பாக்கத்திற்குச் செல்லும்போதும் அங்கும் பால்கனியில் ரோஜா செடிகளைத் தொட்டியில் வளர்த்து வருகிறேன். இதில் பூக்கும் பூக்கள் இறை வழிபாட்டுக்கு மிகவும் பயன்தருகின்றன. மிகச் சிறிய இடமாக இருப்பினும் எங்களுக்கு மாலை வேளைகளில் மனதுக்கு இதமான சூழலை ஏற்படுத்தித் தருகிறது.
இந்தப் பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.
உங்கள் வீட்டின் பிடித்த பகுதி பற்றிய புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி
சொந்த வீடு, தி இந்து
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in