

கடந்த ஆண்டில் இருந்த ரியல் எஸ்டேட் தேக்க நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவு ஏறுமுகம் பெற்றுள்ளது. மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை ரியல் எஸ்டேட் மோசமான அளவு தேக்க நிலையை அடையவில்லை என்பது ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கருத்து. சென்னையின் ரியல் எஸ்டேட் வளம் மிக்க பகுதியான தென் சென்னைப் பகுதியில் இப்போது மீண்டும் புத்துணர்வு அடைந்துள்ளது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் தென் சென்னையில் பல கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்பட்டு வேகமாக வளர்ந்துவருகின்றன. அதே சமயத்தில் மேற்கு சென்னையும் விலை குறைந்த கட்டுமானத் திட்டங்களுக்கான இடமாக மாறிவருகிறது.
சமாளிக்கக்கூடிய விலை, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே பல பணியிடங்கள் மற்றும் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி எனப் பல வசதிகள் இருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு சென்னை ரியல் எஸ்டேட் வணிகம் சீரான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
இங்கு தொடர்ந்து புதிய கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்பட்டுவருவதால் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மத்திய மற்றும் தென் சென்னையில் குடியிருப்புகளுக்கான விலை அதிகமாக இருப்பதால் மத்திய தரக் குடும்பங்கள் கவலையில் இருந்தன. அவர்களுக்கு மேற்கு சென்னை கை கொடுத்து வருகிறது என்றால் அது மிகையில்லை.
அண்ணா நகர், முகப்பேர், அசோக் நகர் மற்றும் கே.கே.நகர் போன்ற பகுதிகள், மத்திய தரக் குடும்பங்களின் முதல் தேர்வாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன. அதே போல பாடி, நொளம்பூர், பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர் மற்றும் நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளும் பல நிறுவனங்களின் புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான தேர்வாக இருக்கின்றன. காரணம், இங்கு நிலங்களின் விலை சென்னை நகரின் இதர பகுதிகளைக் காட்டிலும் குறைவு என்பதுதான்!
இந்தப் பகுதிகளில் அபார்ட்மென்ட் யூனிட்களின் விலை ஓரளவு சமாளித்து விடக் கூடியதாக இருப்பதால், நகரை விட்டுச் சற்று தொலைவில் இருந்தாலும் மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வீடுகளை வாங்குகிறார்கள்.
அம்பத்தூர் போன்ற பகுதிகளில் உற்பத்தி நிறுவனங்கள் சில, தொழிற்சாலைகள் கட்டுவதற்கு திட்டமிட்டுவருகின்றன. அதனால் நில விற்பனையாளர்களுக்கு இப்பகுதிகள் லாபகரமான முதலீட்டு மையமாக இருக்கின்றன.
மேற்கண்ட சில பகுதிகளில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதனால் விரைவில் அந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் சாலை, குடிநீர், கழிவு நீர் வடிகால் போன்ற வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள்தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இங்கு டவுன்ஷிப்கள் அதிகளவில் வரும்போது, மேற்கண்ட வசதிகளைச் செய்து கொடுக்க உள்ளூர் அரசு அமைப்புகள் தாமாகவே முன்வரும் என்பதால், மக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிலம் மற்றும் வீடுகளை வாங்குகிறார்கள்.