

வீடு என்பதை மிகவும் ரசித்து ரசித்து கட்டுவதன் நோக்கம் அது இருப்பிடம் என்பதால் மட்டுமல்ல. வெறும் இருப்பிடத்தை அமைக்க நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமல்ல. உண்ண, உறங்க, குளிக்கத் தேவையான அறைகளை அமைத்துவிட்டால் போதும். அதில் வசித்துக்கொள்ளலாம். ஆனால் அதை நம் மனம் ஏற்காது. ஏனென்றால் இனிமையான இல்லத்தை அமைப்பது ஒரு கலை, ஒரு தவம்; மனதுக்கு நிறைவு தரும் ஒரு சுகமான பணி.
ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து பலரிடம் ஆலோசனை பெற்று உருவாக்கத்துடிக்கிறோம். காரணம் வீடு என்பது நம்மை, நமது ரசனையை, நமது விருப்பத்தை நம்மைச் சார்ந்தவர்களிடம் மவுனமாக எடுத்துச்சொல்லிக்கொண்டேயிருக்கும். அதனால்தான் வீடு கட்டுவதில் நாம் நமது அறிவையும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறோம்.
சரி ஒரு வீட்டின் எந்த அறை நமக்கு முக்கியமானது என்று கேள்வி கேட்டால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அறை என முடிவுசெய்து இதற்குப் பதிலளிக்க நினைத்தால் எல்லோர் மனத்திலும் ஓர் அறைதான் வந்து நிற்கும் அதுதான் நமது வீட்டின் வரவேற்பறை. அன்போடும் அக்கறையோடும் நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை உற்சாகமாக வரவேற்கும் நாம் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டி அமரவைக்கும் அறை வரவேற்பறை தான். நம் வீட்டுக்கு வரும் அனைவரும் நமது நண்பர்கள் தான்.
என்ற போதும் எல்லா நண்பர்களையும் வீட்டின் எல்லா அறைகளுக்கும் நாம் அழைத்துச்செல்வதில்லை. சிலரை படுக்கையறை வரை அழைத்துச்செல்கிறோம். சிலரை வாசிப்பறையில் வைத்து உரையாடுகிறோம்; சிலரை பால்கனியில் அமரவைத்து கதை பேசி மகிழ்கிறோம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லை வைத்து நட்பைப் பேணுகிறோம். ஆனால் வீட்டுக்கு வரும் அனைத்து நண்பர்களையும் உவகையுடன் வரவேற்கும் அறை நமது வரவேற்பறை. ஆகவே அதை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதில் நாம் சிறிது அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டுச் செல்லப் போகிறார்கள் இதில் என்ன அக்கறை வேண்டிக்கிடக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆனால் யோசித்துப் பாருங்கள் நீங்கள் செல்லும் ஒரு நல்ல ஹோட்டல் அல்லது விடுதியை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்? அதன் அமைப்பு தானே காரணம். அதன் சுவர்களில் ரசனையுடன் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு அழகான ஓவியம் உங்களது உள்ளத்தை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டுவிடுகிறது.
இப்படியான ஓர் அமைப்பு ஒரு ஹோட்டலிலும் விடுதியிலும் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? நமது வீட்டிலும் இருக்கலாமே. இதற்காக நாம் சிறிது மெனக்கெட்டால் போதும் வருபவர்களுக்கு நமது வீட்டின் வரவேற்பறையை மறக்கவே முடியாது. நம் வீட்டுக்கு வரும் அனைத்து விருந்தினர்களிடமும் நமது அன்பால் நாம் ஒரு கவனத்தைப் பெற்றுவிடலாம். ஆனால் அவர்களிடம் அதே கவனத்தை நமது வீடும் பெற வேண்டுமானால் நமது அக்கறையை வீட்டின் வரவேற்பறையில் காட்ட வேண்டும்.
வரவேற்பறையின் சுவர்களின் நிறம் மனதுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழையும் நண்பர்களின் மனத்தில் ஆரோக்கிய அதிர்வுகளை உருவாக்கும் வகையிலான நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முரட்டுத்தனமாக ரசனை கொண்டவர்களாக இருப்பவர்கள்கூட வீட்டின் வரவேற்பறை விஷயத்தில் சிறிது மெல்லிய ரசனைக்காரர்களாக மாறிவிட வேண்டும். வரவேற்பறையின் அமைப்பையும் சுத்தத்தையும் பார்த்த உடன் விருந்தினர்களின் மனது ஆனந்த ஊஞ்சலில் ஆட வேண்டும். அய்யய்யோ இப்படி ஒரு வீட்டுக்கு வந்துவிட்டோமே என அவர்கள் அவதியுறும் வண்ணம் வீட்டின் வண்ணம் அமைந்துவிடல் ஆகாது.
வாழ்வை மேம்படுத்தும் நல்ல பொன்மொழிகளையோ நல்லறிஞர்களின் ஓவியத்தையோ உருவப் படத்தையோ வரவேற்பறையில் அமைக்கலாம். நமது உரையாடலின் போது எதேச்சையாக அவர்கள் கண்ணில் படும் இந்த ஓவியமோ பொன்மொழியோ சட்டென அவர்களை ஈர்த்துவிடும். நமது ரசனை குறித்த நல்லபிப்ராயம் அவர்களுக்கு ஏற்படும். அதே போல் வரவேற்பறையில் போதுமான காற்றும் வெளிச்சமும் எப்போதும் இருக்கும் படியாக சூழல் அமைந்திருக்க வேண்டும். அதிக வெளிச்சமோ அதிக இருட்டோ இருக்கக் கூடாது.
வரவேற்பறையின் சோபாக்களும், நாற்காலிகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். டீப்பாய்கள் மீது நாம் வைத்திருக்கும் பத்திரிகைகளும் இதழ்களும் மிக நாசூக்காக அடுக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நமது வீட்டின் வரவேற்பறையின் அழகே நம் வீட்டின் அழகைச் சொல்லாமல் சொல்லும் என்பதை மறந்துவிடக் கூடாது.