

வீட்டுக் கட்டிடத் திட்டத்தில் நமக்கு எப்போதுமே இறுதித் தீர்மானம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. வீட்டைக் கட்டி முடித்த பெரிய அறையை இரண்டாகப் பிரிக்கலாம் எனத் தோன்றும். உதாரணமாக வீட்டு வரவேற்பறையைப் பிரித்து ஒரு சிறிய அலுவலக அறையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்காகச் செங்கல் கட்டிடம் எழுப்ப வேண்டியதில்லை. அதற்காக இப்போது சந்தையில் கிடைப்பதுதான் அறை பிரிப்பான் (Room Divider).
அறை பிரிப்பான், அறைகளைப் பிரிப்பது மட்டுமல்லாமல் வீட்டுக்கே தனியழகைத் தேடித் தரும். இந்த அறை பிரிப்பான்களில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றுதான் தெர்மாஃபிளிஸ். அதுபோல அலுவலகக் கட்டிடங்களுக்கும் இது ஏதுவானது. இந்தப் பணிக்கு முன்பு சுவர்களே பயன்பட்டன. அதன்பின், சுவரின் பங்களிப்பை, ஃபிளைவுட்கள் பெருமளவுக்கு ஈடுசெய்தன. தற்போது அலுவலகங்கள் என்றில்லாமல், ஒரு படுக்கை அறை வசதி கொண்ட வீட்டிற்கு உள்ளாகவே ஒரு சிறிய தடுப்பை ஏற்படுத்து வதன்மூலம் இன்னொரு சிறிய படிக்கும் அறை போன்ற ஒன்றை உருவாக்க தெர்மாஃபிளிஸ் என்பது ஒரு முக்கியமான தடுப்புப் பொருளாக கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தீப்பற்றாத தன்மை
பார்ட்டிசன்களைப் பிரிப்பதில் தெர்மாஃபிளிஸ், ஃபிளைவுட், மற்றும் பிளாஸ்டிக்கால் உருவான பொருட்களைவிட, தீப்பற்றாத திறனை அதிகம் கொண்டது. படிக்கும் அறை, தனிமையாக அமர்ந்து இசையை ரசிக்கும் அறை போன்றவற்றை வீடுகளில் உருவாக்குவதற்கு இந்த தெர்மாஃபிளிஸ் பெரிதும் பயன்படும். வீட்டுக்குள் அதிக வெப்பம் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் சவுண்ட்-புரூஃப் எனப்படும் ஒலிமாசு நுழைவதைத் தடுக்கும் வகையிலும் இந்த தெர்மாஃபிளிஸின் பயன்பாடு இருக்கும். இதனால் இந்த வகையான தடுப்புகளை ஒலிப்பதிவுக் கூடங்களிலும் நவீன காலத்தில் பயன்படுத்தும் போக்கு வளர்ந்து வருகிறது.
குறைந்த செலவு நிறைந்த பலன்
பாரம்பரியமான ஃபிளைவுட் தடுப்புகளுக்குப் பதிலாக தெர்மாஃபிளிஸை பயன்படுத்துவதால் குறைந்த செலவில் நிறைந்த பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். கண்ணாடி நார் இழைகளைக் கொண்டு அமைக்கப்படும் தடுப்புச் சாதனங்களோடு ஒப்பிடும்போது, அவற்றைத் தயாரிப்பதற்கு செலவாகும் மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றின் செலவு அதிகமாக இருக்கும். ஒப்பீட்டளவில் ஒரு கட்டுமானத்திற்கான ஒட்டுமொத்த தேவைக்கு, நார் இழைகளைப் பயன்படுத்திச் செய்யும் தடுப்புகளைவிட, தெர்மாஃபிளிஸின் தயாரிப்புச் செலவு குறைவாகவே இருக்கும்.
வெப்ப, ஒலித் தடுப்பு வேலைகளைச் செய்வதற்கு இது மிக நல்ல மாற்றுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியதாகும். விலையைப் பொறுத்தவரை ஜிப்சம், பார்டிகள் போர்டுகளுக்கு ஈடானதுதான். உற்பத்திக்கான எரிபொருள், மின்சாரத் தேவை தெர்மாஃபிளிஸ் தயாரிப்பில் 14 சதவீதம் வரை குறைவாகவே இருக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெறும் இடத்தைப் பிரிக்கும் சாதனம் என்னும் நிலையைக் கடந்து, கூரை, சுவர், தரை என தேவைப்படும் இடங்களில் வெப்பத்தையும் ஒலியையும் தடுக்கும் சாதனமாக தெர்மாஃபிளிஸ் இருக்கும்.