

இந்திய அளவில் விற்பகப்படாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகள் ஏராளம். ஆனால், வீட்டு விலை குறைந்தபாடில்லை. அதே சமயத்தில் வீடுகளும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இது குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டார்.
இப்படித் தொடர்ந்து வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால் அது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று கூறினார். அதனால் ரியல் எஸ்டேட் துறையினர் தங்கள் விலைகளைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தக் கருத்து ரியல் எஸ்டேட் உலகில் பரவலாக விவாதிக்கப்பட்டன.
இது தொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பான கிரெடாய் தனது கருத்தை வெளியிட்டது. இந்தத் தேக்க நிலை காரணமாக ஏற்கனவே வீட்டு விற்பனையின் விலை குறைந்துள்ளதாகக் கூறியது. இனியும் விலையைக் குறைத்தால் அது முதலைப் பாதிக்கும் என அந்த நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறை விலை குறைப்பால் வெகுவாகப் பாதிக்கப்படும்.
கட்டிடத்துக்கான அனுமதி வாங்குவது, கட்டுமானப் பொருள்களின் நிலையில்லா விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ரியல் எஸ்டேட் துறைக்குச் சவாலாக உள்ள நிலையில் மேலும் விலை குறைப்பு சாத்தியமில்லாதது எனக் கருத்துத் தெரிவித்தது. மேலும் விலை குறைப்பு ஒருபக்கம் இருந்தாலும் வீடு வாங்குபவர்கள் அதிக வட்டியால் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தால் இந்தத் தேக்க நிலை விலகலாம் என மேற்குவங்க மாநில கிரெடாய் கருத்துத் தெரிவித்துள்ளது.