

வீட்டு உபயோகப்பொருள் நிறுவனமான வேர்ல்பூல் இந்தியா, டிஎல்எப் வீட்டுமனை நிறுவனத்துடன் சேர்ந்து சமையலறை உபகரணங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
புகழ்பெற்ற இதற்கான முயற்சிகள் 2013-ல் தொடங்கியதாகவும், தற்போது டெல்லியில் ஒரு கட்டிடத் திட்டத்தில் வேர்ல்பூல் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாகவும் கூறியுள்ளார் வேர்ல்பூல் இந்தியாவின் துணைத் தலைவர் ராஜீவ் கபூர்.
இதற்கு முன்னர் சென்னையில் கட்டப்பட்ட 800 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 350 வீடுகளில் வேர்ல்பூல் தங்களது சமையல் உபகரணங்களைப் பொருத்தியுள்ளது. உபகரணங்களைப் பொருத்துவதோடு உரிய சேவை உதவிகளையும் தொடர்ந்து செய்துவருவதாக ராஜீவ் கபூர் கூறியுள்ளார்.
வேர்ல்பூல் நிறுவனத்தின் முதல் பிரத்யேக பில்ட் இன் ஷோரூம் திறப்புவிழா நிகழ்வுக்காக சென்னை வந்திருந்த ராஜீவ் கபூர், இதைப் போன்ற ஒரு ஷோரூம் ஏற்கனவே பெங்களூருவில் திறக்கப்பட்டிருப்பதாக கூறினார். செப்டம்பர் இறுதிக்குள் ஒன்பது பில்ட் இன் ஷோரூம்கள் நாடுமுழுவதும் திறக்கப்படுமென்று கூறினார்.
“கொச்சியில் ஏற்கனவே ஹாட் கிச்சன் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களைத் திறப்பதற்கான இடத்தை உறுதிசெய்துவிட்டோம். மதுரை மற்றும் ஐதராபாத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். சமையலறைக்குத் தேவையான எல்லாத் தயாரிப்புகளும் சமையலறை வடிவிலேயே உள்ள ஷோரூம்களில் பார்ப்பதற்குக் கிடைக்கும். காபி இயந்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், வைன் குளிரூட்டிகள், தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள், நீராவி ஓவன்கள், பாத்திரம் கழுவும் எந்திரங்கள் மற்றும் டிரையர்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் உள்ளன” என்கிறார்.
சிறந்த ப்ரீமியம் பிராண்டாக வேர்ல்பூலை உருவாக்கும் எண்ணமிருப்பதாக வேர்ல்பூல் ஏசியா சவுத்தின் துணைத் தலைவரான சந்தனு தாஸ் குப்தா தெரிவிக்கிறார்.
தற்போதைக்கு இந்த பில்ட் இன் வர்த்தக மாதிரி 25 முதல் 30 கோடி ரூபாய் அளவே பெருமானமுள்ளதாக இருப்பினும், இந்தச் சந்தை பெருகும் வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நான்கு மடங்கு வளரும் என்று தெரிவித்துள்ளார்.