வாழ்வை மேம்படுத்தும் வாசிப்புக்கு ஓர் அறை

வாழ்வை மேம்படுத்தும் வாசிப்புக்கு ஓர் அறை
Updated on
3 min read

இனிமையான இல்லங்களைத் திட்டமிட்டுக் கட்டுவதில் நமக்குப் பெருவிருப்பம் உண்டு. அவற்றின் ஒவ்வொரு நிலையிலும் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து செய்துவிடுவோம். ஆனால் பல செலவுகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நாம் வாசிக்கும் அறை அமைக்கும் செலவு அவசியமா என்று பலமுறை யோசிக்கிறோம். காரணம் வாசிப்பு என்பது பொழுதுபோக்க மட்டுமே உதவும் என்ற மேலோட்டமான புரிதல் அல்லது சந்தேகம்.

ஆனால் வாசிப்பு என்பதை அப்படி மேலோட்டமாகப் புரிந்துகொள்ள வேண்டுமா என யோசிப்பதில்லை. வாசிப்பதற்கான அறை என்றதும் பொழுது போகாமல் ஏதோ ஒரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு அதன் பக்கங்களை மேய்ந்துகொண்டு மற்றொரு புறம் தின்பண்டங்களைச் சகட்டு மேனிக்கு உள்ளே தள்ளும் ஒரு பிம்பம் வந்துவிடுகிறதோ என்னவோ? ஆனால் உண்மை நிலை அப்படியல்ல என்பதை நாம் சிறிது யோசித்தால் விளங்கிக்கொள்வோம். அம்சமான வீட்டுக்கு வெளிச்சமும் காற்றும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் புத்தகங்களும் வாசிக்கும் அறையும்.

அவசியமா வாசிப்பறை?

வாசிப்பதற்கான ஓர் அறை கட்டி அவற்றில் புத்தகங்களை அடுக்கிவைத்து எழுத்தாளர்கள் போஸ் கொடுப்பது போல் போஸ் கொடுக்க ஓர் அறையா என அங்கலாய்க்கும் நபராக நீங்கள் இருக்கலாம். ஆனால் வாசிக்கும் அறை என்பது ஒரு முழுக் குடும்பத்துக்குமானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். வீட்டின் ஹாலில் ஒய்யாரமாக டிவி ஓங்கி அலறிக்கொண்டிருக்கும்போது உங்கள் குழந்தைகள் தங்கள் படிப்பைக் கவனிக்க முடியுமா?

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என வீட்டில் உள்ள அனைவருமே பயன்படுத்திக்கொள்ளும் ஒரே இடம் வாசிப்பறை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வாசிப்பறையில் கணினியையும் வைத்துக்கொள்ளலாம். வீட்டுக்குள்ளேயே ஒரு நூலகம் போன்றது வாசிப்பறை. ஆகவே சமையலறை, பூஜை அறை, குளியலறை போல் வாசிப்பறையும் தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாதது.

வாசிப்பறையில் இருக்க வேண்டியவை

சரி, வாசிப்பறை வேண்டும் என முடிவுசெய்து விட்டீர்கள். அங்கு என்னென்ன இடம் பெற வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வாசிப்பறை என்று வரும்போதே அங்கே அநேக புத்தகங்களை அடுக்கிவைக்க வேண்டியதிருக்கும். அவற்றுக்கான ஒரு நல்ல அலமாரியை அங்கே அமைக்க வேண்டும். வாசிக்கும் மேசை, நாற்காலி போன்றவற்றை அழகுற அமைக்க வேண்டும். வீட்டு உபயோகத்துகான கணினியையோ மடிக் கணினியையோகூட அந்த மேசையில் வைத்துக்கொள்ளலாம். இட வசதிக்கேற்ற படி ஒன்றோ இரண்டோ மேசைகளை இங்கே வைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் ஓரிருவர் படிக்கும் பருவத்தில் இருந்தால் அவர்களுக்கேற்ற சிறிய மேசையை அங்கே போட்டுக்கொள்ளலாம். படிக்கும் மேசையில் போதுமான வெளிச்சம் படும்படியான விளக்குகளை அமைக்க வேண்டும். இப்போது சந்தையில் எவ்வளவோ விதமான விளக்குகள் கிடைக்கின்றன. அவற்றின் அலங்காரத்தில் மயங்காமல் எது தேவையான தரமான வெளிச்சம் தருமோ அத்தகைய விளக்குகளை வாங்கிப் பொருத்த வேண்டும். வாசிப்பறையில் நல்ல காற்றும் வரத் தேவையான சன்னல்களை முறையாக அமைக்க வேண்டும். வாசிக்கும் மேசையருகே சன்னல்கள் அமையும்படி பார்த்துக்கொண்டால் பகல் நேரத்தில் தேவையில்லாம விளக்குகளைப் போட்டு மின்சாரத்தை வீணாக்க வேண்டாம்.

சரி, வாசிப்பறை வேண்டும் என முடிவுசெய்து விட்டீர்கள். அங்கு என்னென்ன இடம் பெற வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வாசிப்பறை என்று வரும்போதே அங்கே அநேக புத்தகங்களை அடுக்கிவைக்க வேண்டியதிருக்கும். அவற்றுக்கான ஒரு நல்ல அலமாரியை அங்கே அமைக்க வேண்டும். வாசிக்கும் மேசை, நாற்காலி போன்றவற்றை அழகுற அமைக்க வேண்டும். வீட்டு உபயோகத்துகான கணினியையோ மடிக் கணினியையோகூட அந்த மேசையில் வைத்துக்கொள்ளலாம். இட வசதிக்கேற்ற படி ஒன்றோ இரண்டோ மேசைகளை இங்கே வைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் ஓரிருவர் படிக்கும் பருவத்தில் இருந்தால் அவர்களுக்கேற்ற சிறிய மேசையை அங்கே போட்டுக்கொள்ளலாம்.

படிக்கும் மேசையில் போதுமான வெளிச்சம் படும்படியான விளக்குகளை அமைக்க வேண்டும். இப்போது சந்தையில் எவ்வளவோ விதமான விளக்குகள் கிடைக்கின்றன. அவற்றின் அலங்காரத்தில் மயங்காமல் எது தேவையான தரமான வெளிச்சம் தருமோ அத்தகைய விளக்குகளை வாங்கிப் பொருத்த வேண்டும். வாசிப்பறையில் நல்ல காற்றும் வரத் தேவையான சன்னல்களை முறையாக அமைக்க வேண்டும். வாசிக்கும் மேசையருகே சன்னல்கள் அமையும்படி பார்த்துக்கொண்டால் பகல் நேரத்தில் தேவையில்லாம விளக்குகளைப் போட்டு மின்சாரத்தை வீணாக்க வேண்டாம்.

அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகங்கள்

வாசிப்பறையின் புத்தக அலமாரியில் நீங்கள் வைக்கும் புத்தகங்கள் உங்களது அறிவை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். எனவே படிக்கிறோமோ இல்லையோ பார்த்த உடன் மற்றவர்களைக் கவர வேண்டும் என்று நினைத்து ஒருபோதும் படிக்காத புத்தகங்களை வாங்கி அடுக்கிவிடாதீர்கள். நீங்கள் புத்தகம் வாங்குவது உங்களது அனுதின வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். அதற்கேற்ற புத்தகங்களுக்கென ஒரு தொகையை மாதாமாதா ஒதுக்காவிடிலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒதுக்கி நல்ல புத்தகங்களை வாங்கிவையுங்கள். படிக்கும் குழந்தைகளுக்கேற்ற அகராதிகள். மொழியியல் நூல்கள் போன்றவற்றை வாங்கி வைப்பது மிகவும் அவசியம்.

அவசரத்துக்கு அவை மிகவும் கைகொடுக்கும். என்னதான் இணையம் அது இது என்ற வசதி வந்தாலும் எப்போதும் கைகொடுப்பவை புத்தகங்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். கல்விக்கு உதவும் புத்தகங்கள், இலக்கியப் புத்தகங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், ஆன்மிகப் புத்தகங்கள் என எவற்றையெல்லாம் வாசிக்க வீட்டில் ஆட்கள் இருக்கிறோர்களோ அவர்களுக்கேற்ற புத்தகங்களை வாங்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். அவற்றை வகைபிரித்து அடுக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் தேவைப்படுபவற்றை உடனே எடுக்க வசதியாக இருக்கும்.

வாசிப்பறை பராமரிப்பு

வாசிப்பறை மிகவும் ஆரோக்கியமான இடமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே அங்கே புத்தகங்களைத் தாறுமாறாகப் போட்டுவைக்கும் பழக்கம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் வையுங்கள். அலமாரியில் படிக்க எடுக்கும் புத்தகத்தைப் படித்த பின்னர் அதிலேயே மீண்டும் வைக்க வேண்டும் என்ற வழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும்.என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் புத்தகங்களில் தூசி படிவதைத் தவிர்த்துவிட முடியாது.

ஆனால் அவற்றை முறையாகப் பராமரிப்பதன் மூலம் அவற்றின் தீங்கைக் குறைக்க முடியும். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை புத்தகங்களை எடுத்து, துடைத்து மீண்டும் அடுக்குவதும் அவசியம். புத்தகங்களும் ஒரு விளக்கே. ஆக விளக்கு சுத்தமாக இருந்தால் தான் அங்கே வெளிச்சம் கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in