

பழைய காலத்து வீடுகளில் மின்சார இணைப்புக்கான வயர்கள் வெளியே தெரியும்படி இருக்கும். எவ்வளவுதான் நேர்த்தியாக அதை அமைத்திருந்தாலும் வருஷங்கள் செல்லச் செல்ல அவை வெளியே தெரியும்படி ஆகிவிடும். அதன்பிறகு வயர்களை சுவருக்குள்ளே புதைக்கும் முறை வந்தது. அதன் பிறகு வயர்கள் வெளியே தெரியும்படி ஆவதில்லை. ஆனால் இதில் மற்றொரு சிக்கல் உண்டு.
ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மின் இணைப்பு போகக் கூடுதலாக மின் இணைப்பு அமைக்க வேண்டுமானால் வெளியே தெரியும்படிதான் வயர் இணைப்பு கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மாதிரி வெளியே தெரியும்படி வயர் இணைப்பு தரும்பட்சத்தில் வீட்டையே அலங்கோலப்படுத்திவிடும் என்று நினைக்கிறோம். அதனாலேயே ஒயரிங் வேலையைக் கட்டிடப் பூச்சுக்கு முன்னரே முடித்துவிடுகிறோம். ஆனால் கலைச் சிந்தனை கொண்டோர் வெளியில் தெரியும் வயர்களையே ஒரு ஓவியமாக மாற்றிவிடுகிறார்கள். சுவர்களில் வயர்களைக் கொண்டு அழகான படங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.
அது காண்போருக்குப் புதிய அழகை வீட்டுக்குக் கொடுத்துவிடும். மின்சார வயர்கள் மட்டுமில்லாமல், தொலைபேசி, தொலைக்காட்சி கேபிள்கள் போன்றவற்றையும் இப்படி அழகுபடுத்தலாம். படுக்கையறையின் சுவரில் சுவிட்சிலிருந்து விளக்குக்குச் செல்லும் வயர் மீது அழகான இலைகள், பறவைகள் போன்ற வடிவங்களைச் செய்து ஒட்டி அழகுபடுத்தலாம். பார்ப்பவர்களை எளிதில் ஈர்த்துவிடும் இந்த முயற்சிகள்.
அலங்கோலத்திலிருந்து அழகுக்குத் தாவும் இந்த முயற்சிக்கென நீங்கள் கேபிள்களையும் வயர்களையும் சிறிது நீளமாகப் பயன்படுத்த வேண்டிய திருக்கும். மேலும் உங்கள் கற்பனைக் குதிரையையும் முடுக்கிவிட வேண்டும். இதற்கு நீங்கள் தயாரென்றால் வீட்டின் சுவர்களில் அழகழகாக வயர்களைப் படரவிடலாம்.