புத்துயிர் ஊட்டும் வண்ணங்கள்

புத்துயிர் ஊட்டும் வண்ணங்கள்
Updated on
2 min read

கனி

வண்ணங்களின் உளவியல் என்பது வடிவமைப்பில் முக்கிய பங்குவகிக்கிறது. வண்ணங்களால் மகிழ்ச்சி, உற்சாகம், அமைதி, வசதி, இருண்மை, மனச்சோர்வு என அனைத்துவிதமான உணர்வுகளையும் ஏற்படுத்த முடியும். ஒரு நாளில் நீங்கள் எடுக்கும் முடிவுகள், நடத்தைகளில் வண்ணங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால், வீட்டுக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த அக்கறையுடன் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். சிறந்த மனநிலைக்கு உதவும் சில வண்ணங்கள்…

பிரகாசமான மஞ்சள்

மஞ்சள், சற்று சிக்கலான நிறம். அதில் பல நிறபேதங்கள் இருப்பதால், அது வித்தியாசமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் மஞ்சள், மகிழ்ச்சியை அளிக்கும் பண்புடையது. அதுவே, அடர் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தும்போது, அது தீவிரமான உணர்வுகளைத் தூண்டுவதாக இருக்கும். சூரிய ஒளி போன்ற மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தும்போது, சார்பற்ற வண்ணங்களான வெள்ளை, க்ரீம் நிறங்களுடன் சேர்த்து பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அடர் சிவப்பு

அதிக ஆற்றல் கொண்ட துணிச்ச லைப் பிரதிபலிக்கும் இந்த நிறம் எல்லா அறைகளுக்கும் பொருத்தமானது. சரியான விகிதத்தில் இந்த சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது துடிப்பான தோற்றத்தை அறைக்குக் கொடுக்கும். அதே நேரத்தில், இந்தச் சிவப்பு நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது கோப உணர்வைத் தூண்டும். சிவப்பு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிறம் என்பதால், அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது. அறையின் முக்கியமான சுவர்ப் பகுதியில் மட்டும் இந்த நிறத்தைப் பயன்படுத்துவது ஏற்றது. அறை முழுக்க சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

துடிப்பான ஆரஞ்சு

புத்துணர்வு அளிக்கும் வண்ணங்களில் ஆரஞ்சு நிறத்துக்கு எப்போதும் முதலிடம் உண்டு. ஆனால், அதிகமாகப் பயன்படுத்தும்போது எரிச்சல், சங்கடம், அமைதியின்மை ஆகியவற்றை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆர்வம், படைப்பாற்றலைத் தூண்டுவதற்கு ஆரஞ்சு நிறம் ஏற்றது. வரவேற்பறை, வாசிப்பு அறை, உடற்பயிற்சி அறைக்கு ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்தலாம். நேர்மறைத்தன்மை, நம்பிக்கை, உற்சாகத்தைப் பரப்புவதில் ஆரஞ்சுக்கு நிகரான வேறு வண்ணமில்லை.

மென் ஊதா

மென் ஊதா (Mauve), படைப்பாற்றல், ஆடம்பரத்தைப் பிரதிபலிக்கும் நிறம். வசந்த காலத்தை உணர்த்தும் இந்த நிறம் படுக்கையறைக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. இந்த நிறத்தை அடர்த் தன்மையுடன் வரவேற்பறைக்குப் பயன்படுத்தலாம்.

சாம்பல் நிறம்

சார்பற்ற நிறங்களில் சாம்பல் முக்கியமானது. இந்த வண்ணத்தைப் பயன்படுத்துவது அமைதியை உரு வாக்கும். அத்துடன், மற்ற பிரகாசமான வண்ணங்களுடன் பயன்படுத்துவதற்கு இந்த வண்ணம் பொருத்தமானது. ஆனால், அதே நேரத்தில் இந்த வண்ணத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துவது மன அழுத்தத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் வடிவமைப்பாளர்கள்.

கடல் நீலம்

நீலம், அமைதிக்கும் ஓய்வுக்கும் ஏற்ற நிறம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆகாயத்தையும், கடலையும் பிரதிபலிக்கும் இந்த நிறம் இயற்கையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது. தூக்கத்துக்கு ஏற்ற நிறமாக நீலம் விளங்குகிறது. இதயத் துடிப்பைச் சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நீலம் உதவிசெய்கிறது. படுக்கையறைக்குப் பயன்படுத்து வதற்கு ஏற்ற நிறம் இது. அடர் நீலத்தை சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சைப் பச்சை

வசந்தத்தை வரவேற்கும் இந்த எலுமிச்சைப் பச்சை நிறம், வளர்ச்சி, இளமை, படைப்பாற்றலை வெளிப்படுத்து கிறது. குழந்தைகளின் அறைகளுக்கு ஏற்ற நிறம் இது. எலுமிச்சைப் பச்சை நிறத்துடன் பச்சையின் வித்தியாசமான நிறபேதங்களையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in