Published : 21 Mar 2020 11:46 AM
Last Updated : 21 Mar 2020 11:46 AM

வீட்டுக்குள் விழும் ஸ்மார்ட் அருவி

ஷெரின் சுல்தானா

என்னதான் சொகுசாக இருந்தாலும் நம் வீட்டின் குளியலறையால் அருவியில் குளிப்பது போன்ற திருப்தியை அளிக்க முடியுமா? முடியாது என்ற நிலை தான் இதுவரை இருக்கிறது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பம் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நமக்கு அதைச் சாத்தியப்படுத்த முயல்கிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

எண்ணத்துக்கு ஏற்ப ஒளிரும் நீர்ச் சுழி விளக்குகள்

குளிக்கும்போது நீருடன் கலந்து வண்ண ஒளி நம் மேல் விழுந்து சிதறினால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே உற்சாகமாக இருக்கிறது அல்லவா? ஒளிரும் நீர்ச் சுழி விளக்குகள் இதைச் சாத்தியப் படுத்துகிறன. இதனை நம் வீடுகளில் இருக்கும் ஸ்மார்ட் விளக்கின் நீட்சி எனலாம். அருவிகளில் குளிக்கும்போது அங்கு இருக்கும் ஒளியின் வண்ணத்தை இது நம் குளியலறையில் ஏற்படுத்தித் தரும். இதன் தொடக்க விலை சுமார் 40,000 ரூபாய்.

வண்ணங்களின் எண்ணிக்கை - தன்மைக்கு ஏற்ப இதன் விலையும் அதிகரிக்கும். நாம் குளிக்கும் நேரத்தைப் பொருத்து அந்த வண்ணங்கள் தானாக மாறிக்கொள்ளும்படி இதை வடிவமைத்துக்கொள்ளலாம். இதன் விலை சற்று அதிகம்தான். ஆனால், அன்றாட வாழ்வின் அழுத்தத்திலிருந்து விடுவித்து நமக்கு அளிக்கும் வித்தியாசமான அனுபவத்துக்காக இதை வாங்கலாம்.

ஒலி எழுப்பும் பாய் குழல் (Shower sound)

இது தன்னகத்தே ஒரு ஒலிப் பெருக்கியைக் கொண்டிருக்கும். அந்த ஒலிபெருக்கி நாம் விரும்பும் ஒலியுடன் தண்ணீரை நம் மேல் பீய்ச்சியடிக்கும். மழையின் ஓசை, அருவியின் ஓசை, நதி ஓட்டத்தின் ஓசையைப் போன்று பலவித ஓசைகளை எழுப்பும் திறன் இதற்கு உண்டு. கண்ணை மூடினால், நாம் மழையில் நனைவது போன்ற சப்தத்தைத் தத்ரூபமாகத் தரும். இந்த ஒலிகளைத் தவிர நாம் விரும்பிய பாடல்களையும் பூளுடூத் மூலம் ஒலிபரப்பும் திறனும் இதற்கு உண்டு.

சுவரோடு சுவராக ஒட்டியிருக்கும் நீர்புகாத் தொலைக்காட்சி

இது ஏற்கெனவே மிகவும் பரவலாகப் பல வீடுகளின் குளியலறையில் பொருத்தப்பட்டுள்ளது. காலை வேளைகளில் நேரமின்மையால் நமக்கு ஏற்படும் அல்லல்களுக்குக் கிடைத்த நிவாரணி என்று இதைச் சொல்லலாம். இனிமேலும் அரக்கப்பறக்க சாப்பிட்டபடியே தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதை எல்லாம் குளியலறையிலேயே பார்த்துவிடலாம். எனவே, இனி சாப்பிடும்போது உணவை ரசித்துச் சாப்பிடலாம்.

மேலும், குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசி விட்டுப் பரபரப்பின்றி அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்லலாம். இத்தகைய தொலைக்காட்சி பெரும்பாலும் Full HD தொழில்நுட்பத்தைக் கொண்டதாக இருக்கும். மேலும் அதன் நீர்புகாத்தன்மை காரணமாகத் தண்ணீரால் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாது. இதற்கு ரிமோட் கிடையாது. இதன் திரை தொடு திறன் உணரும் தன்மையைக் கொண்டது. எனவே, இதை இயக்குவது மிகவும் எளிது. நமக்கு விருப்பமான பாடல்களைப் பார்த்தபடியே குளிப்பது என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளதா? ஆனால், அதற்கு சுமார் ஒரு லட்சம்வரை செலவுசெய்யத் தயாராக இருக்க வேண்டும்.

கால் துவட்டும் அமைப்பு

மேற்கத்தியக் கலாச்சாரத்தில் டாய்லட் பேப்பர் பயன்பாடு இயல்பான ஒன்று. தண்ணீரை அவர்கள் பயன்படுத்துவதில்லை. நம் நாட்டில் நட்சத்திர விடுதிகளிலும் விமானப் பயணங்களிலும் இதை கவனித்திருக்கலாம். ஆனால் இந்த அமைப்பில் டாய்லட் பேப்பர் பயன் படுத்தப்படுவதில்லை. நம் நாட்டில் இருப்பதைப் போன்று தண்ணீரைத்தான் இது பயன்படுத்துகிறது.

உணவகங்களில் கையை நீட்டியவுடன் தண்ணீர் வரும். அதில் கையைக் கழுவிய பின் அருகில் சுவரில் பொருத்தப் பட்டிருக்கும் சிறியக் கருவியின் கீழ் கையை நீட்டினால், அதிலிருந்து சூடான காற்று வெளிவந்து நம் கையைக் காயவைக்கும். இந்த இரண்டு வசதியையும் ஒருங்கே கொண்ட அமைப்பு என்று இதைச் சொல்லலாம். இந்த அமைப்பு பிறர் உதவியை எதிர்பார்த்து வயோதிகத்தால் வாடும் முதியவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும். இதன் தொடக்க விலையே சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.

கண்ணாடியில் படிந்த நீராவியை அகற்றும் கருவி

சூடு நீரில் குளித்தபின் நம் குளியலறை கண்ணாடியில் படியும் நீராவி என்பது நாம் அனைவரும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை. இதன் காரணமாகக் குளித்த பின் நம்மால் உடனே முகம் பார்க்க முடியாது. கண்ணாடியைப் பார்த்துச்ஷேவ் செய்யவும் முடியாது. இதனைக் கையால் சுத்தம் செய்து விடலாமே, இது ஒன்றும் அவ்வளவு பெரிய சிக்கல் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது ஓரளவு சரிதான். ஆனால் கையால் சுத்தம் செய்வதன் மூலம் ஏற்படும் கறை நாளடைவில் அந்தக் கண்ணாடியின் தரத்தையே பாதித்து அதனை மங்கலாக்கி விடும். ஆனால் இந்தக் கருவி, கறை எதுவுமின்றி எளிதாக அந்தப் நீராவியை அகற்றி விடும். இந்தக் கருவிக்குப் பத்து ஆண்டு உத்தரவாதமும் உண்டு.

டாய்லட் சீட் வார்மர்

குளிர் காலத்தில் சில்லென்றிருக்கும் டாய்லட் சீட் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆத்ரடிஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் இதனால் மிகவும் சிரமப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு இந்தச் சாதனம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இதில் சில வடிவங்கள் சீட்டை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல், தன்னைத் தானே சுத்தமும் செய்துகொள்ளும்.

புத்துணர்வூட்டும் தொழில்நுட்பம்

தொழில்நுட்ப வளர்ச்சி ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் நம் வீடுகளுக்குச் செயற்கை அறிவை வழங்கியது. அதே போன்று இன்று அது நம் குளியலறைக்கும் அறிவை ஊட்டத் தொடங்கியுள்ளது. மேலே நாம் பார்த்த கருவிகள் குளியலறையில் நமக்குப் புத்துணர்வையும் மகிழ்வையும் அளிப்பதுடன் மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. நேரத்தையும் தண்ணீரையும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்த உதவுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x