நவீன சிற்பி: பழமைக்கும் புதுமைக்கும் பாலம்- சாண்டியாகோ கலாராவா
சாண்டியாகோ கலாராவா, உலகின் முன்னணிக் கட்டிடக் கலைஞர்களில் ஒருவர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்கா, கத்தார், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இவருக்கு அலுவலகங்கள் உள்ளன.
ஸ்பெயினில் வேலன்சியா பட்டயப் பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியல் பட்டயச் சான்றிதழ் படிப்பை முடித்தவர். கலாராவாவுக்கு வட்டாரக் கட்டிடக் கலையில் ஆர்வம் அதிகம். அதனால் வட்டாரக் கட்டிடக் கலை குறித்து தனியாக ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். கட்டிடங்களில் இவரது விருப்பம் பாலங்களை உருவாக்குவதுதான். மரபான பாலங்களில் இருந்து இவரது பாலங்கள் வேறுபட்டவை. கட்டிட அமைப்பு முறையில் அவை நவீன பாணியிலானவையாகத் தெரிந்தாலும் அவை நவீன யுகத்துக்கும் அப்பாற்பட்டவை.
இவரது கட்டிடங்கள் நவ-எதிர்காலவாதக் கட்டிடக் கலையைச் சேர்ந்தவை. நவீனக் கட்டிடக் கலையைக் காட்டிலும் புதுமையான சிந்தனையுடன் தனது கட்டிடங்களை இவர் உருவாக்குகிறார். இவரது கட்டிடங்கள் பழமையின் கூறுகளை உள்வாங்கிப் புதுமையின் அம்சத்துக்குப் பாலம் அமைக்கின்றன.
ஒலிம்பிக் அரங்கங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், கோபுரங்கள் எனப் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களையே இவர் பெரும்பாலும் உருவாக்கியுள்ளார்.
கனடா, ஸ்பெயின், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, போர்ச்சுகல், இஸ்ரேல், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, பிரேசில், தைவான், பெல்ஜியம் உள்ளிட்ட பல உலக நாடுகளில் இவர் உருவாக்கிய கட்டிடங்கள் இவரது திறமையைப் பறைசாற்றுகின்றன. இவர் சிற்பியும்கூட. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிற்பக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
