

ஜி.எஸ்.எஸ்.
முன்பெல்லாம் ஒரு வீடு விற்பது தொடர்பான விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்கு முன்பாகவே விற்பவருக்கு முழுத் தொகையும் கைக்கு வந்துவிடும். ஆனால், இப்போது பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. முக்கியக் காரணம் வீட்டுக் கடன் தரும் வங்கி.
என் உறவினர் ஒருவர் தன் வீட்டை விற்க முனைந்தார். அவருக்கும் வீட்டை வாங்குபவருக்கும் இடையே உள்ள கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி விற்பனைத் தொகையில் ஒரு பகுதியை (பத்தில் ஒரு பங்கு) முன்பணமாகக் கொடுத்துவிட வேண்டும். மீதித் தொகையை ஒரு மாதத்தில் செலுத்திவிட்டு அதற்கு அடுத்து வரும் ஒரு நாளில் இதற்கான பத்திரப்பதிவைச் செய்து கொள்ளவேண்டும்.
ஆனால், நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. வீட்டை வாங்குபவர் ஒரு வங்கியில் வீட்டுக்கடன் பெற்றுத்தான் வாங்கினார். பதிவுசெய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக ‘எனக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கிப் பத்திரப் பதிவு செய்யும்போதுதான் காசோலையைக் கொடுப்பாங்களாம்’ என்று அந்த நபர் கூறியிருக்கிறார். ஆனால், பத்திரத்தில் ‘முழுமையான தொகை அளிக்கப்பட்டு விட்டது அதனால் அந்த வீட்டை அவர் பெயருக்கு மாற்றுகிறேன்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கடன் கொடுக்கும் வங்கிகளில் கணிசமானவை இப்போதெல்லாம் அதிகக் கண்டிப்பைக் காட்டுகின்றன. பத்திரப் பதிவு அன்று என்பது மட்டுமல்ல பத்திரம் பதிவான பிறகுதான் அந்தக் காசோலையை விற்பவருக்குக் கொடுக்கின்றன.
முன்பெல்லாம் டிமாண்ட் ட்ராஃப்ட் எனப்படும் வரைவோலையைக் கொடுப்பார்கள். அது நூறு சதவீகிதம் நம்பகமானது. காசோலை என்றால் அதைக் கொடுத்த பிறகுகூட ‘பணம் கொடுக்க வேண்டாம்’ என்று உங்கள் வங்கிக்கு உத்தரவிடலாம். ஆனால், வரைவோலைகளை (Drafts) அப்படிச் செய்ய முடியாது.
ஆனால், வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கிகளில் பலவும் காசோலை யைத்தான் கொடுக்கின்றன. விற்பவரின் வங்கிக் கணக்குக்கு அன்றே அந்தத் தொகையை அனுப்பிவிட்டு (இது ஒரு மணிநேரத்தில் பற்று வைக்கப்படும்) உடனடியாகப் பத்திரங்களைப் பதிவுசெய்யலாம்தான். ஆனால், வங்கிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.
இந்த நிலையில் விற்பவரின் மனத்தில் சின்ன உறுத்தல் ஒன்று இருக்க வாய்ப்பு உண்டு. ஒருவேளை ஏதோ காரணத்தால் இந்தக் காசோலை திரும்பிவிட்டது என்றால்? பத்திரப்பதிவு முடிந்துவிட்டால் அன்றே வீட்டின் சாவிகளையும் வாங்குபவர் கேட்பாரே, இந்த நிலையில் என்ன செய்யலாம்?
வங்கி தனது கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ளாது. எனவே, பத்திரப்பதிவு அன்று வங்கியின் பிரதிநிதி வழங்கும் காசோலையை நீங்கள் பத்திரப் பதிவுக்கு முன்னதாகே ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அந்தக் காசோலையின் எண், தேதி, தொகை போன்ற விவரங்களை விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடலாம்.
விற்பனைப் பத்திரத்தில் அந்தக் காசோலையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இதற்கான தொகை பற்று வைக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் (subject to realization of the cheque) இந்த விற்பனை நடக்கிறது’ என்று எழுதலாம்.
வங்கியைப் பொறுத்தவரை பதிவுசெய்யப்பட்ட பிறகு உங்களிடமிருந்து வீடு தொடர்பான அசல் ஆவணங்களை அது வாங்கிக் கொள்ளும். (நியாயப்படி நீங்கள் அதை வீட்டை வாங்குபவரிடம் கொடுத்து அவர்தான் தன் வங்கியிடம் அவற்றை அளிக்க வேண்டும். ஆனால், அசல் ஆவணங்களைக் கொடுத்தால்தான் காசோலையைக் கொடுப்பார்கள் என்பதால் வங்கியின் பிரதிநிதியிடம் இவற்றைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
முன்னதாகவே வீட்டை வாங்குபவரிடம் நீங்கள் இப்படிக் கூறலாம். “காசோலையின் தொகை என் கணக்கில் பற்று வைக்கப்பட்ட அடுத்த நாள் உங்களுக்கு வீட்டின் சாவியைத் தருகிறேன்’’ எனலாம்.
வாங்குபவருக்கும் விற்பவருக்குமான ஒப்பந்தம் எப்படி இருந்தாலும் வங்கி தான் அளிக்கும் கடன் தொகையை மேற்கூறிய வகையிலேயே கொடுக்க வாய்ப்பு அதிகம்.
வங்கி அளிக்கும் காசோலை பணமில்லை என்பதற்காகத் திரும்பிவர வாய்ப்பு மிகக் குறைவுதான். என்றாலும் ‘ஒருவேளை!?’ என்ற கேள்வி வீட்டை விற்பவர்கள் மனத்தில் உறுத்தலாக இருக்கும் என்பதால் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அந்த நெருடல் உணர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள்.