Published : 15 Feb 2020 12:18 PM
Last Updated : 15 Feb 2020 12:18 PM

மாற்று மணலுக்கு மாறுவோம்

முகேஷ்

ஆற்று மணலின் தேவையும் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதனால் ஆற்று மணலின் விலை ஆண்டு தோறும் பன்மடங்கு பெருகி வருகிறது. இன்னும் கொஞ்ச காலம் போனால் மணல் தங்கம் போல் விலை உயர்ந்த பண்டமாகிவிடும் சூழல் உள்ளது. சிலர் மணலைப் பதுக்கிக் கொள்ளை லாபம் சம்பாதித்துவருகின்றனர். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலந்தும் விற்கின்றனர்.
இன்றைய சூழலில் ஆற்று மணலுக்கு மாற்றான மணலின் தேவை அத்தியாவசியமாகும்.

மேலும், மணலை அள்ளுவது சுற்றுச் சூழலுக்கும் ஆபத்தைக் கொண்டு வரும் என்பதாலும் பல ஆண்டுகளாகவே மணல் அள்ளப்படுவதிற்கு எதிராகக் கோஷங்கள் எழும்பத் தொடங்கியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் விஞ்ஞானிகள் சிலர் செயற்கை மணல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர். அந்த ஆராய்ச்சி விளைவே செயற்கை மணல் கண்டுபிடிப்பு.

கட்டுமானத் துறை வல்லுநர்களும் ஆற்று மணலுக்குப் பதிலாகச் செயற்கை மணல், கல் தூள் போன்ற பொருட்களை மாற்றாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லியிருக்கின்றனர். இந்த இரு பொருட்கள் குறித்துப் பார்ப்போம். கல் தூள் என்பது மலைகளில் இருந்து கற்களை உடைத்து எடுக்கும்போது ஏற்படும் மாவு போன்ற துகள்.

ஆற்று மணல் மட்டும்தான் வலுவானது எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால், இந்தக் கற்தூளும் கட்டிடத்துக்கு வலுவானதுதான் என வல்லுநர்கள் சொல்கிறார்கள். இம்மாதிரியான மாற்று மணலைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களின் கான்கிரீட் வலிமையையும் நீடித்த உழைப்பையும் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை நிரூபணமாகியுள்ளன.

கல்லுடைக்கும் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் கற்துகள்களை நேரடியாக அப்படியே பயன்படுத்த முடியாது. அந்தத் துகள்களை மணலைப் போல மென்மையாக்கினால் மட்டுமே மாற்று மணலாகப் பயன்படுத்த முடியும். அப்படி ஆகும்போது சிமெண்டுடன் அது கலக்கும் தன்மை கிடைக்கும்.

அந்த மணல் கலக்கும் தன்மை பெற சில செய்முறைகளைப் பின்பற்ற வேண்டும். இளக்கிகளைக் கான்கிரீட்டுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுபோல ஆற்று மணல் எவ்வளவு கலப்போமோ அதை விடக் கூடுதலாக இந்த மாற்று மணலைக் கலக்க வேண்டும். மற்றொன்று செயற்கை மணல். செயற்கை மணல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்றால் கருங்கற்களை அரைத்துத் தயாரிக்கப்படுகிறது. இவை தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு இருக்கின்றன.

தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் செயற்கை மணல் மிகச் சிறந்த தரத்தில் கிடைக்கிறது. தகுந்த அளவுகளில், தரமாகத் தயாரிக்கப்படுவதால் கலவை மற்றும் கான்கிரீட்டின் வலிமையும் தரமும் மிகுந்துள்ளன. செயற்கை மணலின் விலையும் ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது குறைவே. மேலும், ஆற்று மணலுக்கு மாற்றாக இம்மாதிரியான மாற்று மணலைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலுக்கும் நன்மை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x