சுவரொட்டி சிறந்ததா, வண்ணமடிப்பது சிறந்ததா?

சுவரொட்டி சிறந்ததா, வண்ணமடிப்பது சிறந்ததா?
Updated on
2 min read

கனி

வண்ணங்கள், அமைப்புகள் எனச் சுவர்களை அழகுப்படுத்துவதற்கு பல அம்சங்கள் இருக்கின்றன. இன்று சுவர்களை அழகுப்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், சுவரொட்டிகளும், வண்ணமடித்தலும்தான் இன்றும் பிரபலமான போக்குகளாக இருக்கின்றன.

சுவரொட்டிகளுக்கு 2000 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது. முதன்முதலில் சீனர்கள்தாம் சுவரில் அரிசி காகிதத்தை ஒட்டி அழகுப்படுத்தினார்கள். ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் சுவரொட்டிகள் புகழ்பெற தொடங்கின. சுவர்களுக்கு வண்ணமடிக்கும் வரலாறு இதைவிடப் பழமையானது. செடிகள், இயற்கைப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட சாயங்கள், நிறமிகளை சுவர்களுக்குப் பூசும் வழக்கம் அப்போதிருந்தே இருக்கிறது.

சுவரொட்டிகள்

இன்று இந்திய வீடுகளில் சுவரொட்டிகள் பிரபலமான போக்காக இருக்கின்றன. கண்ணைக் கவரும் வடிவமைப்புகளில் சுவர்களை அலங்கரிப்பதற்கு சுவரொட்டிகள் சிறந்த தேர்வாக இருக்கும். குழந்தைகளுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்களில் தொடங்கி, மலர்கள், வடிவியல் அமைப்புகள் எனப் புதுமையான வடிவமைப்புகளில் சுவரொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் ரசனைக்கேற்றபடி, டிஜிட்டலாக வடிவமைப்பதற்கும் சுவரொட்டிகள் சிறந்தவை.

சாதகங்கள்

* வண்ணமடிப்பதை விட, சுவரொட்டிகளின் ஆயுட்காலம் 10-15 ஆண்டுகள் கூடுதலாக இருக்கும்.

* பிரம்மாண்டமான கலைப் படைப்புகள், புடைப்புச்சிற்பங்களுக்கு பதிலாக சுவரொட்டிகளைப் பயன்படுத்தலாம். முப்பரிமாண சுவரொட்டிகளிலிருந்து பல புதுமையான சுவரொட்டிகள் தற்போது பிரபலமாக இருக்கின்றன.

* சுவரில் ஒரு பகுதியில் மட்டும் சுவரொட்டியைப் பயன்படுத்தியிருந்தால்கூட, அது வீட்டின் உட்புற வடிவமைப்பை அடியோடு மாற்றிவிடும். இந்தப் பிரம்மாண்டமான தோற்றம் வண்ணமடிப்பதில் இருக்காது.

* சுவரொட்டிகள் காதிகங்களில் மட்டுமல்லாமல் பட்டு, வெல்வட், தோல் எனப் பல விதமான வடிவமைப்புகளில் கிடைக்கின்றன.

* வண்ணமடிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட குறைவான நேரமே சுவரொட்டிகளைப் பொருத்துவதற்கு ஆகும்.

பாதகங்கள்

* சுவரொட்டிகளை அகற்றுவது சற்று கடினமான காரியம். சரியான வகையில் அகற்றாவிட்டால் அது சுவரைப் பாதிக்கும்.

* சுவரொட்டிகளைத் துல்லியமாக ஒட்டுவது அவசியம். அப்படியில்லாவிட்டால் சுவரொட்டிக்குள் காற்று உள்ளே புகுத்து சீக்கிரம் கிழிந்துவிடும். சுவரொட்டிகள் கிழிந்துவிட்டால் உடனடியாக அவற்றைச் சரிசெய்வது முக்கியம்.

* சுவரொட்டியை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பசை சில நேரம் அறையின் வாசத்தைப் பாதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

* நீண்டகாலமாக ஒரே சுவரொட்டி வடிவமைப்பைப் பார்த்துகொண்டிருப்பது சில நேரங்களில் அயற்சியை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சுவரொட்டியை மாற்றுவது அவசியம்.

* ஒரு சுவரொட்டியைச் சில ஆண்டுகளுக்குப்பின் மாற்றும்போது ஏற்கெனவே பயன்படுத்தியிருக்கு அதே வடிவமைப்பில் கிடைப்பது கடினம். அவ்வப்போது வடிவமைப்புகள் மாறிக்கொண்டிருப்பதால், சுவரொட்டிகளைச் சீர்செய்வது அவ்வளவு சுலபமில்லை.

வண்ணமடித்தல்

சுவர்களுக்கான வண்ணப்பூச்சுகள் இப்போது ‘3டி’ உட்பட பல வடிவங்களில் கிடைக்கின்றன. முற்றிலும் புதுமையான வண்ணப்பூச்சுகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. வண்ணப்பூச்சுகளின் சாதக, பாதகங்கள்…

சாதகங்கள்

* வண்ணப்பூச்சுகளை வீட்டின் அனைத்து மூலைகளிலும் பயன்படுத்தலாம். பொதுவாக, குழந்தைகள் அறைக்கு வண்ணப்பூச்சுகள் ஏற்றவையாக இருக்கும்.

* சுவரொட்டியைத் தேர்ந்தெடுத்து வீட்டில் வடிவமைப்பதற்கு எடுத்துகொள்ளும் நேரத்தைவிட வண்ணப்பூச்சைத் தேர்ந்தெடுத்து அடிப்பதற்கு ஆகும் நேரம் குறைவுதான்.

* இந்தியாவைப் பொறுத்தவரை, வண்ணப்பூச்சுகள்தாம் அதிகமாகத் தேர்வுசெய்யப்படுகின்றன.

* சுவரொட்டியை வடிவமைப்பதற்கு ஆகும் செலவைவிட வண்ணப்பூச்சுகளுக்குக் குறைவான செலவே ஆகிறது. ஒரு சதுரஅடிக்கு ரூ.15 முதல் ரூ. 150 வரைதான் வண்ணப்பூச்சுகளுக்குச் செலவாகிறது. ஆனால், ஒரு சிறந்த சுவரொட்டி, ஒரு சதுரஅடிக்கு ரூ.50 முதல் ரூ. 1000 வரை செலவாகிறது.

* வண்ணப்பூச்சுளை சுவரில் முயற்சி செய்துபார்த்த பிறகு, பிடிக்கவில்லையென்றால் அதை மாற்றுவது சுலபம். ஆனால், சுவரொட்டியைப் பொறுத்தவரை இது சாத்தியமில்லை.

பாதகங்கள்

* நல்ல தரமான வண்ணப்பூச்சு ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால், சூரிய வெளிச்சம் அதிகமாகப் படும்போது வண்ணம் பொலிவிழந்துவிடும். மீண்டும் புதிததாக வண்ணமடிப்பதைவிட வேறுவழியில்லை.

* குளிர் காலங்களில் வண்ணமடிப்பது கடினமான பணியாக இருக்கும். ஏனென்றால், வண்ணங்கள் உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துகொள்ளும். அதுவும் எண்ணெய் வண்ணப் பூச்சு என்றால் உலர்வதற்கு இன்னும் கூடுதல் நேரம் எடுத்துகொள்ளும்.

* சுவரில் அடித்தபிறகு, சில வண்ணப்பூச்சுகள் ஆபத்தான வாயுக்களை வெளியிடும். அதனால், வண்ணப்பூச்சு முழுமையாக உலரும் வரை அந்த இடத்துக்குச் செல்லாமல் இருப்பது நல்லது.

* வீட்டுக்கு வண்ணமடிக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துகொள்ள வேண்டும். அறைக்கலன்களிலோ, தரையிலோ வண்ணப்பூச்சு தெளித்துவிட்டால் அதை அகற்றுவது கடினம்.

* ஒரு சுவருக்கு மட்டும் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்க வேண்டுமானால் அதற்கு நிறைய செலவாகும். அத்துடன் தேர்ந்த வண்ணமடிக்கும் நபர் அவசியம். ஆனால், சுவரொட்டியில் இந்தப் பிரச்சினை இல்லை. கனி n

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in