

விபின்
ஜெர்மனியின் முக்கியமான நகரங்களுள் ஒன்று ஃபிராங்பர்ட். சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் நகரம் என்ற அளவில் இது உலகப் பிரசித்தம். இந்த நகருக்கு மற்றுமோர் சிறப்பு சேர்ப்பது ‘ஃபிராங்பர்ட் கிச்சன்(Frankfurt kitchen)’ என்னும் வடிவமைப்பு.
அது என்ன ஃபிராங்பர்ட் கிச்சன்?
முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஃபிராங்பர்ட்டில் வீட்டுப் பற்றாக்குறை உச்சம் அடைந்தது. அதைத் தீர்க்கும் பொருட்டு புதிய ஃபிராங்பர்ட் என்னும் தலைப்பில் வீட்டுக் கட்டுமானத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மார்கரெட் ஷொட்டே-லிஹோட்ஸ்கி. ஆஸ்திரியாவின் முதல் பெண் கட்டுமானக் கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவர் சிறிய இடத்தில் சிறு சிறு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை உருவாக்க நினைத்தார். அதனால் சமயலறைக்கு என்று தனியாக இடம் ஒதுக்காமல் வரவேற்பறையுடன் கூடிய சமையலறையை வடிவமைத்தார்.
இந்த முறை சமையலறை வடிவமைப்பு ஐரோப்ப, அமெரிக்க முழுக்கப் பரவியிருந்தது. இந்த சமையலறையை 1926-ல் மார்கரெட் வடிவமைத்தார். ஃபிராங்பர்ட் நகரத்துக்காக அது வடிவமைக்கப்பட்டதால் அது ஃபிராங்பர்ட் கிச்சன் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இந்தச் சமயலறை வடிவமைப்பு ஐம்பது ஆண்டுகளில் மாறத் தொடங்கியது. எஞ்சிய ஃபிராங்பர்ட் கிச்சன் வடிவமைப்பு அரும்பொருளானது. ஃபிராங்பர்ட்டில் சில அருங்காட்சியகங்களில் அது பாதுகாக்கப்பட்டது. மட்டுமல்லாது லண்டன் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலும் அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புக்குரிய கட்டுமானத்தை வடிவமைத்த மார்கரெட் ஷொட்டே-லிஹோட்ஸ்கி பிறந்த நாள் இன்று.