

ஜி.எஸ்.எஸ்.
பெரு நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் தேர்வு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடாகத்தான் இருக்கும். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்குவதில் கவனம் அவசியம். உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் கணிசமானவர்கள் ஒரு பிரச்சினையைச் சந்தித்திருப்பார்கள். பொதுப் பயன்பாட்டுப் பகுதியில் (Common Area) கட்டுநர் சில அத்துமீறல்களைச் செய்திருக்கக்கூடும்.
திறந்தவெளிப் பகுதி என்று திட்டவரைவில் குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது கட்டிடத்தை எழுப்புவது அவற்றில் ஒன்று. இது போன்ற அத்துமீறல்கள் நடைமுறையில் சில சிக்கல்களை உருவாக்கும். முக்கியமாக வண்டிகளை நிறுத்தும் இடம் குறைந்து போகும். ஒருவேளை நமக்கான வண்டியை நிறுத்த இடம் இருந்தாலும் நமது வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் வண்டிகளை நிறுத்த இடம் இருக்காது.
தவிர வருங்காலத்தில் இந்த அத்துமீறல்கள் தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் உண்டானால் “கட்டிடத்தைக் கட்டியவர்கள் இதைச் செய்து விட்டார்கள்’’ என்று (அது உண்மையாக இருந்தாலும்) நீங்கள் பின்வாங்க முடியாது.
தரைத்தளம் உட்பட வீடு என்று ஓர் உயரமான கட்டிடத்துக்கு அரசிடம் அனுமதி வாங்கிவிட்டுத் தரைத்தளத்தை எல்லாம் அலுவலகங்கள் அல்லது கடைகள் இயங்க விற்றுவிட்டால் அதுவும் அத்துமீறலே.
தரைப் பரப்பில் (Floor area) அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து மாறுபட்டால்கூட வருங்காலத்தில் பெரும் அபராதத்தைச் செலுத்த வேண்டி இருக்கலாம். எனவே இந்த விஷயத்தில் நிச்சயம் எச்சரிக்கை தேவை. ஏனென்றால் நம்மில் பலரும் நமது வாழ்நாள் சேமிப்பை நமது வீட்டில் முதலீடு செய்திருப்போம்.
“நான் என்ன கையில் இஞ்ச் டேப்புடன் சென்று என் ஃப்ளாட் உட்பட ஒட்டுமொத்தமாகக் கட்டிடத்தையும் அளந்து பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?’’ என்று கேட்கிறீர்களா? அது முடியாமல் போகலாம். அத்துமீறல்கள் குறித்த தெளிவு உங்களுக்கு இல்லாமலும் போகலாம்.
ஆனால், சட்ட ஆலோசகர் ஒருவரிடம் உங்கள் ஆவணங்களைக் கொடுக்கலாம். கட்டுநரிடம் கட்டுமானப் பணியை ஒப்படைப்பதற்கு முன்னால், கட்டிட அத்துமீறல்கள் எந்த விதத்திலும் நடைபெறாது என்பதைச் சட்ட ஆலோசகர் முன்பாகவே கட்டுநரிடம் உறுதி மொழி பெறலாம்.
கட்டிடத்துக்கான அரசின் அத்தனை ஒப்புதல் ஆவணங்களையும் கட்டுநர் கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லை என்றாலோ அவற்றில் சிலவற்றைக் கொடுக்கவில்லை என்றாலோ நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் பல பிரபல கட்டுநர்கள் குறித்த தங்களது அனுபவங்களைப் பலரும் வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத கட்டுநர்களைப் பற்றி மிகவும் வெளிப்படையாக, மிகவும் காரசாரமாகத் திட்டுகிறார்கள். இவற்றையெல்லாம் பரிசீலீப்பதன் மூலம் எந்தக் கட்டுநர்களைத் தவிர்க்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும்.
சில அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களைப் பல வங்கிகள் அனுமதிக்கும். அங்கு எழுப்பும் கட்டிடங்களுக்கு அந்த வங்கிகள் அதன் உரிமையாளர்களுக்குக் கடன் அளிக்கும். இந்த முடிவுக்கு வருவதற்கு முன் அவர்கள் அந்தக் கட்டுநரிடம் கட்டுமானம் தொடர்பாகப் பலவிதங்களில் சரி பார்த்திருப்பார்கள். எனவே வங்கிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களைப் பெரும்பாலும் நம்பி இறங்கலாம்.
வெற்று வாக்குறுதிகள் அல்லது விளம்பரங்களை நம்பி கட்டுநரைத் தேர்ந்தெடுக்காதீர். எதையும் எழுத்துபூர்வமாக வாங்குங்கள். தாமதமானால் அதற்கான நஷ்டஈடு என்ன என்பதிலும் தெளிவு பெறுங்கள்.