எவ்வளவு உயரத்தில் அமைக்கலாம்?
கனி
வீட்டிலுள்ள பொருட்களை எவ்வளவு உயரத்தில் அமைக்கலாம் என்பதற்கான நுணுக்கங்களை அறிந்துவைத்துக்கொள்வது சிறந்தது. சில பொருட்கள், அறைக்கலன்களின் உயரம் எப்போதும் நிலையானதாக இருக்கும்.
சில பொருட்களின் உயரத்தை வசதிக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்ளலாம். நிலையான உயரங்களில் பொருட்களை அமைப்பதால் வீட்டின் வடிவமைப்பை எளிமையாக மேம்படுத்த முடியும். அதனால், வீட்டை வடிவமைக்கும்போது, உயரத்துக்குத் தனி முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது என்று சொல்கின்றனர் உள் அலங்கார வடிவமைப்பாளர்கள். நிலையான உயரத்தில் வீட்டிலுள்ள பொருட்களை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்:
சமையலறை மேசை
சமையலறை மேசையின் உயரம், அடுப்பு உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து 36 அங்குலத்தில் இருப்பது சிறந்தது. உயரமாக இருப்பவர்களுக்கு, 37 முதல் 38 அங்குலத்தில் வரை சமையலறை மேசையை வடிவமைக்கலாம்.
சாப்பாட்டு மேசை
சாப்பாட்டு மேசையின் நிலையான உயரம் 30 அங்குலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சில பழைய, பாரம்பரியமான சாப்பாட்டு மேசைகளின் உயரம் 29 அங்குலத்தில் வடிவமைக்கப்படுகின்றன. சாப்பிடும் நாற்காலியின் உயரம் 17 முதல் 19 அங்குலம் வரையிலான உயரத்தில் இருக்கலாம்.
குளியலறை மேசை
குளியலறை மேசையின் நிலையான உயரம் 34 முதல் 35 அங்குலம் வரை இருக்கலாம். குளியலறை மேசையை ஒப்பனை மேசையாகவும் பயன்படுத்தும்பட்சத்தில், மேசையின் உயரம் 30 அங்குலம் இருந்தால் போதுமானது. இந்த மேசையுடன் அமைக்கப்படும் நாற்காலி, வழக்கமான 17 முதல் 19 அங்குலத்தில் இருப்பது சிறந்தது.
மேசை அலமாரிகள்
மேசைக்கு மேல் அமைக்கப்படும் திறந்த அலமாரிகளின் உயரம் 22 முதல் 24 அங்குல உயரத்தில் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும். கணினித் திரைக்கு ஏற்ற நிலையான உயரம் இதுதான். இந்தத் திறந்த அலமாரிகளை விளக்குகளை வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
விளக்குகள்
குளியலறைக்கு இரண்டு திசைகளில் விளக்குகளைப் பொருத்துவது சிறந்தது. குளியலறைக் கூரையில் விளக்குகளை அமைக்கலாம். அத்துடன், குளியலறையின் கண்ணாடி மேசையின் முன்புறமாக 33 முதல் 36 அங்குல உயரத்தில் முன்புற விளக்குகளை அமைப்பதும் சீரான வெளிச்சத்தைக் கொடுக்க உதவும். உயரமாக இருப்பவர்கள், இந்த உயரத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
காஃபி மேசை
காஃபி மேசையின் நிலையான அளவு 18 முதல் 20 அங்குலத்தில் இருக்க வேண்டும். இந்த உயரம் சோஃபா, நாற்காலிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
தொங்கும் விளக்குகள்
கூரையிலிருந்து அமைக்கப்படும் தொங்கும் விளக்குகளின் உயரம் 40 முதல் 43 அங்குலத்தில் இருக்க வேண்டும். உங்கள் மேசையின் அளவைப் பொருத்து, இரண்டிலிருந்து நான்கு தொங்கும் விளக்குகளை அமைக்கலாம்.
