Published : 28 Dec 2019 02:00 PM
Last Updated : 28 Dec 2019 02:00 PM

2020: ஆதிக்கம் செலுத்தப்போகும் வடிவமைப்புகள்

கனி

வடிவமைப்பு உலகம் புதிய போக்குகளுடன் 2020-ம் ஆண்டை வரவேற்கக் காத்திருக்கிறது. புத்தாண்டு என்றாலே புதிய தொடக்கம்தான். வீட்டுக்குப் புதுப்பொலிவைக் கொடுக்க இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது. 2020-ல் அசத்தப் போகும் வடிவமைப்புப் போக்குகளாக இவை பட்டியலிடப்பட்டுள்ளன.

சார்பற்ற வண்ணங்கள்

இந்த ஆண்டில் மீண்டும் சார்பற்ற (Neutral) வண்ணங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. பார்ப்பதற்கு எளிமையாக இருப்பதாகத் தோன்றினாலும், சார்பற்ற வண்ணங்களை வெள்ளை, மென் நிறங்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவது சிறப்பு. சாம்பல், பழுப்பு(beige) ஆகிய இரண்டு வண்ணங்களும் 2020-ல் உட்புற வடிவமைப்பில் ஆதிக்கம்செலுத்தவிருக்கின்றன. வீட்டின் சுவர்கள் மட்டுமல்லாமல் சோஃபா, கட்டில் போன்ற அறைக்கலன்களுக்கும் இந்த வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

வெல்வெட்

2020-ல் அறைக்கலன்கள், விரிப்புகள் போன்றவற்றில் வெல்வெட் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆடம்பரம், வசதி என இரண்டுக்கும் வெல்வெட் ஏற்றதாக இருக்கும். வண்ணமயமான நீலம், பிங்க், அடர் ஆரஞ்சு ஆகிய நிறங்கள் இந்த வெல்வெட் போக்கில் ஆதிக்கம் செலுத்தவிருக்கின்றன. குறிப்பாக, 2020-ல் வெல்வட் சோஃபாக்கள் முக்கியப் போக்காக இருக்கும்.

கறுப்பு, வெள்ளை

கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணக்கலவை இந்த 2020-ல் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வண்ணக்கலவையாக இருக்கப்போகிறது. கறுப்பு நாற்காலிகள், சோஃபாக்கள், வெள்ளை நிற குஷன்கள், கறுப்பு, வெள்ளைப் பளிங்குக்கற்கள் ஆகிய இரண்டு வண்ணங்களின் கலவை இந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்தவிருக்கிறது.

வடிவியல் அமைப்புகள்

சில ஆண்டுகளாகவே வடிவியல் அமைப்புகள் (Geometric Patterns) தொடர்ந்து முக்கியமான வடிவமைப்புப் போக்காக இருந்துவருகின்றன. 2020-லும் இந்த வடிவியல் போக்கு வீட்டின் உட்புற வடிவமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஏதாவது ஒரு சிறிய பகுதியில் இந்த வடிவியல் போக்கைப் பயன்படுத்தி வீட்டின் தோற்றத்தையே அடியோடு மாற்றிவிட முடியும். அதிலும், இந்த ஆண்டு வண்ணமயமான சமகால வடிவியல் வடிவமைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருக்கப்போகிறது.

விதானக் கட்டில்

2020-ல் ராஜபிரம்மாண்ட வசதி கொண்ட விதானக் கட்டில் (Canopy Bed) வடிவமைப்புகள் பயன்பாடு அதிகரிக்கும். படுக்கையறையில் அமைதியான சூழலை எளிமையாக உருவாக்குவது இந்த விதானக் கட்டிலின் சிறப்பம்சம். விதானக் கட்டில்கள் படுக்கையறைப் பயன்பாட்டுக்குப் பொருத்தமானது என்றாலும் வாங்குவதற்கு உங்கள் அறையின் அளவைத் தெரிந்துகொண்டு வாங்குவது சிறந்தது. ஏனென்றால், இந்தக் கட்டில் பயன்பாட்டுக்கு இடவசதி முக்கியம்.

இயற்கையுடன் வாசம்

பருவநிலை மாற்றம், நீடித்த நிலைத்தன்மை போன்ற காரணங்களால் வடிவமைப்பில் இயற்கையான பொருட்களின் பயன்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 2020-லும் இந்த இயற்கையோடு வாசம் செய்யும் ‘பயோபிலியா’ (Biophilia) என்ற போக்கு பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் என்று கணித்துள்ளார்கள் வடிவமைப்பாளர்கள். மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தால் வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள், மேசைகள், தரைகள் போன்றவை இந்தப் போக்கின் காரணமாக அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரும். உலோகம், மரம், கற்கள், செடிகள் போன்றவற்றின் பயன்பாடுகளும் வடிவமைப்பில் ஆதிக்கம்செலுத்தும்.

மலரும் சுவர்கள்

2020-ல் மலர்களாலான சுவரொட்டிகள் வீட்டை அலங்கரிக் கவிருக்கின்றன. இந்த மலர் அலங்காரப் போக்கு நீண்டகாலமாகப் பிரபலமான போக்காக இருந்தாலும் இந்த ஆண்டும் இந்தப் போக்கு தொடரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ண மலர்களாலான சுவரொட்டிகள் இந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்தவிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x