Published : 28 Dec 2019 01:51 PM
Last Updated : 28 Dec 2019 01:51 PM

வட்டாரக் கட்டிடக் கலை

முகேஷ்

பெரும்பாலான நடுத்தர மக்களுக்குக் கை கொடுப்பது வங்கிக் கடன்தான். அதனால் வீடு கட்டுவதில் எவ்வளவு சிக்கனமாக இருக்கிறோமோ அவ்வளவு நமக்கும் நல்லது. இல்லையெனில் கடன் மீறிக் கடனாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது. கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உள்ளன.

வட்டாரக் கட்டுமானக் கலை இதற்கு உதவும். செலவைக் குறைப்பதில் முக்கியமான பங்கு கட்டுமானப் பொருள்களைக் கையாள்வதில்தான் இருக்கிறது. வட்டாரக் கட்டுமானக் கலை என்பது நாம் வீடு கட்டும் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவது என்பதுதான். இதுதான் பேரளவில் செலவைக் குறைக்கும் ஒரு வழிமுறை.

வீடு கட்டப் பயன்படும் அடிப்படையான கட்டுமானப் பொருள்கள் செங்கல், மரம், கல் போன்றவை. வீடு கட்டுவதில் பிரதான செலவுகள் என்பவை கட்டுமானப் பொருள்களுக்கானவை. அதனால் கட்டுமானப் பொருள்களில் மாற்றுப் பொருள்களை உபயோகித்தால் இந்தச் செலவைக் குறைக்க முடியும்.

கட்டுமானக் கற்களைப் பொருத்தமட்டில் நாம் கட்டிடம் எழுப்பும் இடத்துக்கு அருகில் கிடைக்கும் பொருள்கள பயன்படுத்துவது குறித்துதான். உதாரணமாகக் கருங்கற்கள் பூமிக் கடியில் கிடைக்கும் சில பகுதிகளில் அதைக் கொண்டே கட்டிடங்கள் எழுப்பலாம். அதுபோல பாறைகள் அதிகமாக உள்ள இடங்களில் கற்களைக் கொண்டே வீடு கட்டலாம். இப்போது மாற்றுக் கட்டுமானப் பொருள்கள், மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்படுகின்றன.

கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை மாற்றுச் செங்கற்களாகப் பாவிக்கப்படுகின்றன. இத்தகைய மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும், இவற்றுக்கான மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதே. அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களிலிருந்தே இவற்றைத் தயாரிக்க முடியும். இந்த மாற்றுச் செங்கற்கள் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்காது.

இத்தனை அனுகூலங்கள் இருப்பினும் அதிகமாக மாற்றுச் செங்கற்கள் பயன்படுத்தப்படாததன் காரணம் நமது மனநிலையே. மாற்றுச் செங்கல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே நாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த தயங்குகிறோம். இந்த மனநிலை மாற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x