Published : 28 Dec 2019 01:47 PM
Last Updated : 28 Dec 2019 01:47 PM

என் வீடு என் அனுபவம்: வைரமுத்து வாழ்த்திய வீடு

சொ. குபேந்திரன்

சிறிய அளவிலாவது சொந்த வீடு ஒன்று கட்ட வேண்டுமென்று எனக்கும் ஆசை. ஆனால், என் மாத வருமானம் குடும்ப செலவைச் சமாளிக்க மட்டுமே சரியாக இருந்தது. வங்கி சேமிப்போ பெற்றோரின் சொத்தில் பங்கோ எனக்கும் என் மனைவிக்கும் கிடையாது. இரண்டு குழந்தைகளோட ஊர் ஊராய் மாறிச் செல்லும் தற்காலிக வேலை. ஊரையும் உறவுகளையும் விட்டுத் தனியாக வாழும் வாழ்க்கை. இந்த நிலையில் சென்ற ஊர்களிலெல்லாம் சொந்த வீடு கட்டச் சொல்லி மனைவியின் அறிவுறுத்தலும் கூடவே வரும்.

நிரந்தர வேலையில்லாத ஊரில் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்து அவசரப்பட்டு அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வீட்டைக் கட்டிவிட்டால் வேற ஊரில் நிரந்தர வேலை கிடைத்தால், கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் நாம் குடியிருந்து அனுபவிக்க முடியாமால் போய்விடும். ஒழுங்காக வீட்டைப் பராமரிக்கவும் முடியாது. அதனால் நிரந்தர வேலைக்கு முயல்வோம். அதுவரை காத்திருக்கலாம் என முடிவுசெய்தேன். எனக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்ததும் வீடு கட்டும் கனவை நனவாக்கத் தொடங்கினோம்.

பல ஆண்டுகள் சொந்த வீடு கனவு இப்போது நனவாகப் போகிறது. சரி வீடு, எப்படி இருக்க வேண்டும்? வீடு என்பது மற்றவர்களுக்குச் சொத்து. எனக்கு ஒரு குழைந்தையைச் சமுதாயத்துக்குத் தகுதியான மனிதனாக உருவாக்க உணர்வும் உறவும் கலந்து கொடுக்கும் முதல் பயிற்சி நிலையம்தான் வீடு. என் மனைவி, மகள், மகன் ஆகியோருடன் இணைந்து வீடு அமைவதைப் பற்றிக் கூட்டம் நடத்தினோம். ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளைப் பட்டியலிட்டனர். எல்லோரின் தேவையையும் கொண்டு வீடு அமைப்பு உருவாக்கப்பட்டுக் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது.

என் குடும்பம் பெரிய குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு ஆண்கள் மூன்று பெண்கள்.

இவர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்தால் தங்குவதற்கு ஏதுவாக ஒரு நீண்ட பொது அறை வேண்டும் என்பதை என் சார்பாகக் கேட்டுக் கொண்டேன். அதுபோக அடிக்கடி வீட்டுக்கு வரும் ஆராய்ச்சி மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்காக ஒரு தனி நூலக அறை, அமர்ந்து பேச கொல்லைப்புறம், காலை மாலை காப்பியுடன் காற்று வாங்கத் திண்ணையுடன் கூடிய வராண்டா இரண்டு படுக்கையறைகள், மாடியில் ஒரு விருந்தினர் அறை, முக்கியமாகக் காற்றும் வெளிச்சமும் வர ஏற்பாடு ஆகியவற்றைத் தீர்மானித்தோம். மேலும், இரவில் மின்விசிறி தேவைப்படாத அளவுக்கு மரம், செடி, கொடிகளுக்கிடையே வீடு இருக்குமாறு அமைக்க வேண்டும். பேருந்து வசதி வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டும்.

மனைவியுடன் சொ. குபேந்திரன்

சொந்த ஊருக்கு அருகிலுள்ள பொறியாளர் ஒருவரிடம் பேசிவீட்டு வேலையைத் தொடங்கினோம். ஆறுமாதத்தில் கட்டித் தருவதாகச் சொல்லி இரண்டு தீபாவளிகளைக் கடத்தினார்கள். வங்கியில் மாதத் தவணை, வீட்டு வாடகை, குடியிருக்கும் வீட்டுக்கும் கட்டும் வீட்டுக்கும் சேர்த்து மின் கட்டணம் எனத் தடுமாறித்தான் போனேன். ஒரு வழியாகக் கட்டிடம் முடிந்தது. நான் என்ன கற்பனை செய்தேனோ அதில் நெல்லின் நுனியளவுகூடக் குறையாமல் கலை நயத்தோடு திண்ணையில் மேற்கூரையில் தத்ரூபமாக கான்கிரிட்டில் வடிவமைக்கப்பட்ட ஹிட்டார் ஸ்பீக்கருடன் அமைந்தது.

நகரின் முக்கியப் பகுதியில் நான்கு சாலை சந்திப்பில் 60 அடிச் சாலையில் அரை கி.மீ தூரத்திலிருந்துப் பார்த்தாலே தெரியுமளவுக்கு அமைந்தது வீடு. வீட்டுக்குள் வந்தவர்கள் வியந்து பாராட்டி ஒளிப்படம் எடுக்கும் படியாய் அமைந்தது.

இவற்றுக்கு இடையில் சில பாடுகளும் பட்டோம். பக்கத்து வீட்டுக்காரர்களின் நடத்தைகள், தரகரிடம் ஏமாந்தது, வங்கிக்கு ஆவணங்களுக்காக அலைந்தது, வங்கித் தவணை தாமதமானதும் ஓப்பந்ததாரர் மனசு மாறியது, கட்டுமானப் பொருட்களின் நிலையில்லா விலையால் பட்ஜெட் கூடி, ஒப்பந்ததாரருடன் மனஸ்தாப ஏற்பட்டது எனப் பலதும் நடந்தன. .

என்னோட அரசு வேலையை நம்பித்தான் வங்கி வீடு கட்டக் கடன் கொடுத்தது. நான் பணி ஓய்வு பெறும் வரை கடன்காரனாக இருக்க வேண்டும். அதனால் வாழ்நாள் தியாகியான என் பெயரை வீட்டுக்கு வைப்பதே சிறந்தது. முனைவர் குபேந்திரன் இல்லம், குபேரன் குடில் எனப் பல பெயர்களை நான் பகிர்ந்தேன். மனைவியோ வெடித்துச் சிதறிவிட்டார்.

“என் நகையை அடகுவைத்து வாங்கின பிளாட்ட வித்துதான் இந்த மனைக்கு முன் பணம் கொடுத்தோம். சமத்துவம் பெண் உரிமை என்று மேடையில் பேசுறதெல்லாம் வெறும் வேசமா?” எனக் கேள்விகளை எழுப்பினார். அவரும் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவர். மனைவி பெயரையே வைத்துவிடலாம் என்று முடிவெடுத்து உச்சரித்துப் பார்த்தேன். ‘கல்பனா இல்லம்’. நன்றாகத்தான் இருந்தது.

பிறகு பொதுவான குணாதிசயத்தின் அடிப்படையில் ஒரு பெயர் வைக்கலாம் என முடிவெடுத்தோம். என் நண்பர் ஒருவர் ஒரு பெயரைப் பரிந்துரைக்க, அதுவே இறுதியானது. கிரஹப்பிரவேசத்துக்கு வர முடியாததால் சென்ற மாதம் வீட்டுக்கு வந்த பாடலாசிரியர் வைரமுத்து என் மனைவியிடம், “உங்கள் கணவர் ஒரு மகா ரசிகர். வீட்டையும் கலைநயத்தோடும் ரசனையுடனும் கட்டியுள்ளார். வீட்டுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்” எனக் கேட்டார். “நீங்களே பாருங்கள்” என்று வீட்டின் முகப்பைக் காட்டினோம். ‘ரசனை இல்லம்’ என்றிருந்தது. “பொருத்தமான பெயர்” என்று வாழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x