

வீட்டைக் கட்டிவிட்டால் மட்டும் போதுமா, கட்டிய வீட்டை அழகாக்க வேண்டும். எப்படியெல்லாம் அழகாக்கலாம்? கலையம்சம் மிக்க ஓவியங்களை, பொருள்களை நம் வீட்டின் வரவேற்பறையில் வைத்து வீட்டுக்கு அழகு சேர்க்கலாம். வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை, சாப்பாட்டறை போன்றவற்றிற்கு அறைக்கலன்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். உங்கள் அறைக்குப் பொருந்தும் அறைக்கலன்களை வாங்க வேண்டும்.
படுக்கையறை என்பது நாம் மனமும் உடலும் ஆசுவாசம் கொள்ளும் அறை. நாள் முழுவதும் உழைத்துவிட்டு வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கப் பயன்படுவது படுக்கையறையே. எனவே படுக்கையறையின் விஷயத்தில் கவனத்துடன் இருந்தால் பிற அலுவல்களை நம்மால் சுறுசுறுப்பாகக் கவனிக்க இயலும். படுக்கை அறையின் சுவர்களில் மென்மையான உணர்வுகளைத் தரும் சுவரோவியங்களைத் தீட்டி வைக்கலாம்.
சிறு குழந்தைகள் உள்ள வீடென்றால் அவற்களது கிறுக்கல்களைக் கூட அழகிய சட்டமிட்டு மாட்டிவைக்கலாம். மனதுக்கு அவை இதமாக அமையும். படுக்கையறையின் விளக்குகள் மெலிதான வெளிச்சத்தை எப்போதும் வழங்க வேண்டும். வழக்கத்திற்கு அதிகமான கண்களைக் கூசச் செய்யும் விளக்குகளை மாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.படுக்கை அறை எப்போதும் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். படுக்கையறையில் ஓய்வெடுக்க வரும்போது அதன் சூழலே நமது மனத்திற்கு உகந்ததாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டிலின் மீது விரிக்கும் படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் விதவிதமான வண்ணங்களில் வசீகரமான விதத்தில் அமைந்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
அழகிய ஓவியங்களும் சித்திரங்களும் வரையப்பட்ட தலையணை உறைகளையும் படுக்கைவிரிப்புகளையும் நாம் பராமரித்தால் அவை நமது ஓய்வு நேரத்தைச் சிறப்பாக்கும். சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய படுக்கை நேர்த்தியாக அமையப்பெற்றிருந்தால் படுக்கையில் சாய்வதே பரவசமான அனுபவமாக மாறும். படுக்கை விரிப்புகள் நமது தட்பவெப்ப நிலைக்கு உகந்த வகையில் அமைந்திருக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் அவற்றின் உறைகளும் எப்போதும் சுத்தமான நிலையில் பராமரிக்கப்படுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே அதுவிஷயத்தில் கறார் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். மழைக் காலத்தில் இந்த விஷயத்தில் முன் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்.