Published : 07 Dec 2019 12:28 PM
Last Updated : 07 Dec 2019 12:28 PM

குறைந்த செலவில் நிறைவான வீடு

எல்.ரேணுகாதேவி

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வீடு கட்டினால் செலவைக் குறைக்கலாம் என்கிறார்கள் சேலத்தைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் தம்பதியான கோமகள் அனுபமா, சூரிய நாராயணன்.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் இன்றைக்குக் கனவு இல்லம் என்பது பலருக்குக் கனவாகவே உள்ளது. இந்த நிலையில் சேலம் ஏற்காடு சட்டக் கல்லூரி பகுதியில் வசித்து வரும் கோமகள் அனுபமா, சூரிய நாராயணன் தம்பதி தங்களுடைய முதல் வீட்டைக் குறைந்த செலவில், அதேநேரம் நேர்த்தியாகவும் வடிவமைத்துக் கட்டி உள்ளனர்.

செலவைக் குறைக்கும் மூன்று விஷயங்கள்

கட்டிடவியல் துறையில் பட்டம் பெற்ற இத்தம்பதி வாடிக்கையாளர்களுக்குக் கட்டிட வடிவமைப்பு, ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். மேலும், தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கென்று சொந்தமாக வீடு ஒன்றைக் கட்ட நினைத்துள்ளனர்.

ஆனால், அந்த வீடு சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளனர். இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட விஷயங்களில் முதன்மையானது ஆற்று மணலைத் தவிர்ப்பது. இரண்டு, செங்கல்லைப் பயன்படுத்தக் கூடாது. மூன்றாவது கம்பிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். இந்த மூன்று விஷயங்களைப் பயன்படுத்தாமல் எப்படி ஒரு வீட்டைக் கட்ட முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், அதற்கான விடையைச் சொல்லாமல்; இந்தத் தம்பதி செயல்படுத்தி காட்டியுள்ளது.

இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இவர்களுடைய வீட்டுக்கான மொத்தச் செலவே ரூ.32 லட்சம்தான். ஆனால், பொதுவான கட்டிட முறையில் இதே பரப்பளவில் ஒரு வீடு கட்டினால் நாற்பது லட்சத்துக்கு மேல் செலவாகும். இவர்களின் வீட்டு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அங்கே குடியேற உள்ளனர்.

உறுதியான எம் சாண்டு

குறைந்த செலவில், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கட்டியுள்ள இவர்களின் வீட்டைப் பார்க்கவே பலர் வருகை தருகிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத, குறைந்த செலவில் நிறைவான வீடு கட்டுவது குறித்த இந்தத் தம்பதி கூறுகையில் “பல லட்சம் செலவுசெய்து வீடு கட்ட நினைப்பவர்களுக்கு ஆற்று மணலில்தான் தங்களுடைய வீடு கட்டப்படவேண்டும் என நினைப்பார்கள்.

இவ்வாறு கட்டுமானங்களுக்காகச் சுரண்டப்பட்ட ஆற்று மணல் இன்று அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அது மட்டுமல்லாமல் பல ஆற்றுப் படுகைகள் காணாமலே போய்விட்டன. இதற்கு மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டதுதான் எம் சாண்ட். பாறை சல்லிகளிலிருந்து எடுக்கப்படும் இந்த எம் சாண்ட் மணல்தான் தற்போது கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் மனத்தில் எம் சாண்ட் உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், எங்களுடைய வீட்டுக்கு முழுவதுமாக எம் சாண்ட் மணல்தான் பயன்படுத்தி உள்ளோம்.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் நம்முடைய கட்டுமான முறை மாறிவிட்டது. அவர்களின் வருகைக்கு முன்புவரை களிமண் சுவர், குறைவான மணல், பாறைகள், சுண்ணாம்பு, முட்டை போன்ற பொருட்கள்தாம் நம்முடைய கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால், ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு ‘இங்கிலிஷ் பாண்டு’ என்ற கட்டிட முறைதான் தற்போதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வகையான கட்டிட முறையில் அதிக மணல் தேவைப்படும்.

அதற்கு ஆற்று மணல்தான் பயன்படுத்தப்படும். ஆற்று மணலை வைத்து நாம் வீடு கட்டிவிடலாம். ஆனால், நாளைக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம்? அதற்குத்தான் ஆற்று மணலுக்கு மாற்றாக நாங்கள் எம் சாண்ட் மணலை பயன்படுத்தினோம். பாறைகளிலிருந்து எடுக்கப்படும் எம் சாண்ட் மணல் ஆற்று மணலைவிட உறுதியாக இருக்கும். மக்களிடம் எம் சாண்டு குறித்த அறியாமை நீங்க வேண்டும். இந்த வகை மணலைப் பயன்படுத்துவதை அரசு ஊக்கப்படுத்துகிறது” என்கிறார் கோமகள்.

செங்கல் வேண்டாம்

சரி, ஆற்று மணலுக்குப் பதில் எம் சாண்ட் பயன்படுத்தலாம். ஆனால், உறுதியான சுவர்கள் எழுப்பச் செங்கல் தேவைப்படும் அல்லவா? எனக் கேள்வி எழுப்புவோர்க்கு வீடு கட்ட செங்கல் தேவையே இல்லை என்கிறார்கள் இவர்கள். செங்களுக்குப் பதில் ‘Fly Ash Bricks’ என்ற சிமெண்டால் செய்யப்பட்ட செங்கலைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள் இவர்கள். அவர்களுடைய வீட்டில் ‘Fly Ash Bricks’ தான் முழுவதுமாகப் பயன்படுத்தியுள்ளனர். “செங்கல் தயாரிக்க ஏராளமான மணல் பயன்படுத்தப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மரங்களும் அழிக்கப்படுகின்றன. சுட்டால்தான் செங்கலை உறுதியாக உருவாக்க முடியும்.

இதற்கு விறகு தேவை. அந்த விறகுகளை மரத்தை வெட்டியவுடன் பயன்படுத்த முடியாது. குறைந்தது மூன்று நாட்கள் மரக்கட்டைகளைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவழிக்க வேண்டும். இயற்கை வளங்களை அழித்து செங்கல்லால் கட்டிய வீட்டில் நாம் நிம்மதியாக இருக்க முடியுமா? அதனால்தான் செங்கல்லுக்குப் பதில் ‘Fly Ash Bricks’-க்கு மாறினோம். இந்த வகையான கல்லைத் தயாரிக்க மரங்களை வெட்ட வேண்டியதில்லை, தண்ணீரைச் செலவழிக்கத் தேவையில்லை. காற்றை மாசுபடுத்த வேண்டியதில்லை” என்கிறார் சூரிய நாராயணன்.

குறைவான கம்பிகள்

அதேபோல் தளம் அமைப்பதற்கு ‘Rat Trap Bond’ என்ற கட்டிட முறையைச் செயல்படுத்தி உள்ளனர். கான்கிரீட் தளங்கள் அமைக்கும்போது கம்பிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பின்னல் வலைபோல் அமைக்கப் படும். இதன் காரணமாக அதிக கம்பிகள் தேவைப்படும்.

ஆனால் ‘Rat Trap Bond’ முறையில் கம்பிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பானை அல்லது தேங்காய் ஓடு பயன்படுத்தித் தளம் அமைக்கலாம் என்கிறார்கள் இவர்கள். பின்னல் வலைபோல் கம்பிகள் அமைப்பதற்குப் பதில் கம்பிகளுக்கு நடுவே பானை, தேங்காய் ஓடுகளைத் தலைகீழாகக் கவிழ்த்து அருகில் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் கம்பிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன், பானைகள் உறுதியான தளத்துக்கு அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள். தற்போது இவர்களின் வீட்டில் கீழ்த்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் வரை ‘Rat Trap Bond’ முறையிலேயே தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரைத் தளத்துக்கு ஆத்தங்குடி கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பொதுவாக டைல்ஸ் போட்டால் கால் வலி வரும் என்பார்கள். ஆனால், நம்முடைய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் ஆத்தங்குடி கல் பயன்படுத்துவதால் உடல் சார்ந்து எந்தப் பிரச்சினையும் வராது” என்கிறார் கோமகள். இவர்களுடைய வீட்டில் மட்டும் ஏழாயிரம் ஆத்தங்குடி டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலத்தில் மாடியிலும் வீட்டின் இதர பகுதிகளிலும் விழும் மழைநீரை தேக்கிவைக்கும் தொட்டியை இவர்கள் அமைத்துள்ளனர்.

வழிகாட்டும் தம்பதி

“ஆங்கிலேயர் புகுத்திய கட்டிட முறையே சரியென நாம் நம்பவைக்கப்பட்டுள்ளோம். அதனால் புதிய முயற்சிகளைச் செய்து பார்ப்பதில் மக்களிடம் அச்சம் உள்ளது. இந்த எண்ணம் மாறவேண்டும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் எங்களுடைய வீடு” என்கிறார்கள் கோமகளும், சூரிய நாராயணனும். வீடு என்பது நமக்கானது மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் ஒன்றிணைத்தது என்பதை இத்தம்பதியினர் நிரூபித்துள்ளனர்.

தொடர்புக்கு: architectsurya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x