

நாங்கள் அடித்தளம் அமைத்துள்ள இடத்தைச் சுற்றி 18 ஆயிரம் செங்கற்கள் 3 லாரிகளில் இறக்கப்பட்டுவிட்டன. இப்போது உள்ள முக்கியப் பிரச்சினை, சுவர் பூசப்படப் போவதில்லை என்பதால் சிமெண்ட் கலவை செங்கற்களின் பக்கவாட்டில் ஒழுகாமல் கொத்தனார்கள் சுவர்களைக் கட்ட வேண்டும். சிமெண்ட் கலவையைக் கரணையில் தாராளமாக அள்ளி, செங்கற்களின் தலை மீது கொட்டித் தண்ணீர் ஊற்றி, வழிய வழியக் கட்டி, விளக்குமாறால் கலவையைச் சுவரின் மீது அடித்து மெழுகியே பழக்கப்பட்ட நம் கொத்தனார்களிடம் இப்படிக் கட்டச் சொன்னால் கட்டுவார்களா?
அதற்காக ஒரு வெளிநாட்டு நிறவனத்தின் பிளாஸ்டிக்கால் ஆன Bricky wall build toolஐ (ஆங்கிலத்தில் Bricky என்பது போல தமிழில் ‘கல்கி’ என்று ஏன் இதை அழைச்கக்கூடாது?) காப்பி அடித்து 3டி மாடல் ஒன்றையும் கணினியில் வடிவமைத்தேன். அதை எங்கள் உள்ளூர் தச்சரிடம் போய் காட்டி, அதுபோல் மரத்தில் செய்து தரும்படி சொன்னேன். இப்படியான ஒரு கருவியை இது வரை அவர் பார்த்தில்லை என்பதால் அவருக்குப் புரியவில்லை. பிறகு அவருக்குப் புரிய வைத்து பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு அப்படியான இரண்டு உபகரணங்களை தேக்கு மரத்தில் செய்து வாங்கிவந்தேன். அவற்றை வைத்துத்தான் ஆரம்பத்தில் தயக்கத்துடனும் பிறகு சகஜமாகவும் கொத்தனார்கள் சுவரைக் கட்டி முடித்தார்கள்.
இதில் உள்ள முக்கிய அனுகூலம் என்னவென்றால், முதலாவது, சுவர் கலவையால் மாசுபடாமல் சுத்தமாக இருக்கும், இரண்டாவது செங்கற்களுக்கிடைய கலவை சீரான அளவில், அதாவது அரை அங்குலம் என்றால் அரை அங்குல கணத்தில் மட்டுமே உட்காரும், மூன்றாவது நமக்கு சிமெண்ட், மணலின் தேவை குறையும்.
இப்படிக் கட்டும்போது 9 அங்குல சுவரின் இரு பக்கமும் கலவையின் அளவு கால் அங்குலம் முதல் அரை அங்குலம் குறைவாக உட்காரும்படி இந்த கல்கி உபகரணத்தை வடிவைப்பது சிறந்தது. காரணம் பாயிண்டிங் (Pointing) என்ற எசை பூசும் வேலையின்போது கலவைக்குப் பிடிமானம் கிடைக்கும். இந்த பாயிண்டிங்கை சிமெண்ட் மணல் கலவையாலும் செய்யலாம். மண், சுண்ணாம்பு, மணல் கலந்த கலவை கொண்டும் செய்யலாம். இரண்டாவது முறை வெதர் புரூப்க்குச் சிறந்தது.
லாரி பேக்கர் இந்த பாயிண்டிங் முறையே வேண்டியதில்லை என்கிறார். சுவர் கட்டும்போதே கலவையை செங்கற்களின் பரப்பளவுக்கு இணையாக வழித்தெடுத்துவி்டவே அவர் பரிந்துரைக்கிறார். இப்படி செய்வதனால் சுவர் அமைக்கும் பணி அப்போதே முடிந்துவிடுகிறது, வேலை ஆட்களுக்கான செலவும் குறைகிறது. நம் கொத்தனார்கள் பெரும்பாலானவர்களுக்கு பாயிண்டிங் செய்யும் அளவுக்குப் பொறுமையோ பாண்டித்தியமோ இல்லை என்பதால் இதை தவிர்ப்பதே நல்லது.
யோசித்துப் பாருங்கள், வழக்கமாக நாம் வீடு கட்டும்போது சுவர் எழுப்பி மேல் தளம் அமைத்த பிறகும் 75 சதவீத வேலை பாக்கியிருக்கும். அதாவது எலக்ட்ரீஷியன் வந்து மின் குழாய் அமைக்கச் சுவரைப் பிளப்பார், பிறகு கொத்தனார் சிமெண்ட் கலவையால் பூசுவார், பெயிண்டர் வந்து முதலில் பிரைமர் அடிப்பார், பட்டி சாந்தை பூசி தேயோ தேய் என்று தேய்ப்பார். பிறகு இரண்டு முறை வண்ண பெயிண்டை அப்புவார். இந்த வேலையெல்லாம் இல்லாமல் சுவர் கட்டும்போதே அந்தப் பணி முடிந்துவிட்டது என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்.
அயர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவி
சிமெண்ட் வீணாவதைத் தடுப்பதற்கும் நேர்த்தியான தோற்றத்தைத் தருவதற்குமான ஒரு எளிமையான உபகரணத்தை அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் மார்ஷல் கண்டுபிடித்துள்ளார். இந்த உபகரணம் பிளாஸ்டிக்கிலானது. ஒருசெங்கல் சுவர்கள், இருசெங்கல் சுவர்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடியது. இது ‘ப’ வடிவ பிளாஸ்டிக் சட்டகமாக இருக்கும். இதற்குள் சிமெண்ட் கொண்டு பூசினால் போதுமானது. சிமெண்ட் வீணாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், அழகான பூச்சும் கிடைக்கும்.பிளாக் கற்களைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டிடங்களுக்கு இது நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும்.
கற்களால் ஆன வீட்டைக் கட்டுவதற்கு இந்த பொருத்தமானதாகக் கருவி இருக்கும். இதற்கு ப்ரிக்கிடூல் (Bricky Tool) எனப் பெயர் இட்டுள்ளார் மார்ஷல். இது அயர்லாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தக் கருவி பற்றி மார்ஷல் குறிப்பிடும்போது, “மேற் பூச்சில்லாமல் உருவாக்கப்படும் ஏழை மக்களின் வீடுகளுக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தரும் பொருட்டே நான் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளேன்” என்கிறார்.
இந்த பிரிக்கி மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இவை இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதன் விலை 39.99 யூரோ. போர்க் கால அடிப்படையில் உருவாக்கப்படும் தொகுதிக் குடியிருப்புகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்கும்.
- ஜீ.முருகன், சிறுகதை எழுத்தாளர்,
‘மின்மினிகளின் கனவுக் காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com